அப்பூதி அடிகள் நாயனார்
திங்களூர்
வளமிகுந்த சோழ நாட்டிலுள்ள ஒரு திருத்தலம்.எழில்மிகு சோலைகள் பலவற்றைத் தன்னகத்தே
கொண்ட இத்தலத்திலே வாழ்ந்து வந்த சிவத்தொண்டர் பலருள் அப்பூதி அடிகளார்
என்பவரும் ஒருவர். இவர் அந்தணர் மரபிலே அவதரித்தவர். இறைவனின் திருவடிக் கமலங்களை
இடையறாது நினைத்து உருகும் இவ்வன்பர் மேன்மையும் புகழும் மிக்கவர். இவர்
மனைவியோடும், மகனோடும்
இல்லறத்தில் இன்பமுற வாழ்ந்து வந்தார். இறைவன் எழுந்தருளியிருக்கும் தலங்கள்
தோறும் சென்று இறைவனை வழிபடும் அரும்பெரும் தவத்தினர். அவர் தமது சிந்தையில்
எந்நேரமும் இறைவனின் திருநாமத்தையே கொண்டிருந்தார். களவு, பொய், காமம், கோபம் முதலிய
குற்றங்களை எள்ளளவும் சிந்தையிலே கொள்ளளவில்லை. கற்புக்கடம் பூண்ட இல்லாளுடன்
இல்லறத்தை அறத்தோடு திறம்பட நடத்தி வந்தார். இத்தகைய அருந்தவத்தினரான அப்பூதி
அடிகள் அப்பரடிகளின் திருத்தொண்டின் மகிமையையும், எம்பெருமானின் திருவருட் கருணையையும்
கேள்வியுற்று அவர்பால் எல்லையில்லா பக்தியும் அன்பும் கொண்டிருந்தார்.
தாம் பெற்ற
செல்வங்களுக்கு, மூத்த
திருநாவுக்கரசு, இளைய
திருநாவுக்கரசு என்றும் திருநாமம் சூட்டி மகிழ்ந்தார். அது மட்டுமல்ல ; அவரால் கைங்கரியம் செய்யப்பட்ட தண்ணீர்ப்
பந்தல்கள், மடங்கள், சாலைகள், குளங்கள் முதலானவற்றிற்கெல்லாம்
திருநாவுக்கரசரின் பெயரையே சூட்டி மகிழ்ந்தார். அப்பர் சுவாமிகளை நேரில்
பாராமலேயே அவர் தம் திருவடிகளை நினைத்து போற்றி வணங்கி அவரிடம் பேரன்புடையவராய்
விளங்கினார். அப்பூதி அடிகளுக்கு ஒருமுறை அப்பரடிகளைச் சந்திக்கும் தவப்பேறு
கிட்டியது. அப்பரடிகள் இறைவனைத் தரிசிக்க திங்களூர் வந்தார். அங்கு பெருந்
தண்ணீர்ப் பந்தல் ஒன்றைப் பார்த்தார். கோடைக்காலத்தின் கெõடுமை தெரியாதிருக்கும் வண்ணம் பந்தலைச் சற்றுப்
பெரிதாகப் போட்டுக் கீழே மணலைப் பரப்பி குளிர்ந்த நீரை நிறையக் கொட்டி øவத்திருந்தனர். இதனால் அங்கு தண்ணீர் அருந்தி
விட்டுத் தங்குவோர்க்குச் சற்று வெம்மையைத் தணித்துக் கொள்ளவும்
மார்க்கமிருந்தது. அருளுடையார் திருவுள்ளத்தைப்போல் குளிர்ந்த தன்மையுடையதாய்
அத்தண்ணீர்ப் பந்தல் அமைந்து விட்டதால் அந்நிழலில் எப்பொழுதும் ஜனங்கள்
திரள்திரளாக வந்து தங்கிச் சென்ற வண்ணமாகவே இருப்பர். இப்பந்தலைப் பார்த்த அப்பர் அடிகள்
இவற்றையெல்லாம் எண்ணி உளம் மகிழ்ந்தார். அத்தோடு இவர் பந்தலின் எல்லா பாகங்களிலும்
அழகுபட திருநாவுக்கரசு என்று எழுதியிருப்பதையும் பார்த்தார்.
அதைப்
பார்த்ததும் அடியார்க்கு வியப்புமேலிட்டது. அங்கு கூடியிருந்தவர்களைந் பார்த்து,
இத்தண்ணீர்ப் பந்தலுக்கு
இப்பெயரிட்டவர் யார் என்று கேட்டார். திருநாவுக்கரசர் இவ்வாறு வினவியதும்
அங்கிருந்தவருள் ஒருவர், இப்பந்தலுக்கு
இப்பெயரை இட்டவர் அப்பூதி அடிகள் என்பவர்தான். அவர்தான் இதை அமைத்து மக்களுக்கும்
அடியார்களுக்கும் நற்பணியாற்றுகிறார். அதுமட்டுமல்ல அவரால் அமைக்கப்பட்டுள்ள
சாலைகளுக்கும், குளங்களுக்கும்
இந்தப் பெயரையே சூட்டியுள்ளார் என்று பெருமிதத்துடன் கூறினார்.
திருநாவுக்கரசருக்கு இவற்றையெல்லாம் கேட்டு மீண்டும் அவர்களிடம் அப்பூதி அடிகள்
யார்? அவர் எங்குள்ளார் ! என்று
கேட்டார். அவர்கள் அப்பரடிகளை அழைத்துக்கொண்டு அப்பூதி அடிகளின் இல்லத்திற்கு
புறப்பட்டனர். சிவநாம சிந்தையுடன், இல்லத்தில்
அமர்ந்து இருந்த அப்பூதி அடிகள் சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருக்கும்
அடியவர்களின் திருக்கூட்டத்தைக் கண்டார். சிவனடியார் எவரோ தமது இல்லத்திற்கு
எழுந்தருளிகின்றார் என்பதறிந்து, அப்பூதி அடிகள்
வாயிலுக்கு ஓடிவந்தார். இரு கரங்கூப்பி வணங்கினார். நாவுக்கரசரும் அவர் வணங்கும்
முன் அவரை வணங்கினார்.
அடியார்களை வழிபடும் முறையை உணர்ந்திருந்த அப்பூதி அடிகளார்
நாவுக்கரசரை உள்ளே அழைத்துச் சென்று ஆசனத்தில் அமரச் செய்தார். சுவாமி! தாங்கள்
இந்த எளியோன் இல்லத்திற்கு எழுந்தருளியது எமது தவப்பயனே! அருள்வடிவமான் அண்ணலே!
அடியார்க்கு யாம் ஏதாவது பணி செய்தல் வேண்டுமோ? என்று உளம் உருக வினவினார். திருச்சடையானைத்
திருப்பழனத்திலே தரிசித்து விட்டு வருகிறேன். திங்களூர் முடியானை வணங்கும்
பொருட்டு தங்கள் ஊர் வந்தேன். வரும் வழியே உங்களால் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர்ப்
பந்தலைக் கண்டேன். அங்கு இளைப்பாறினேன். பின்னர், தங்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன். தாங்கள்
அறத்தில் சிறந்தவர்; அடியாரைப் போற்றும்
திறத்தில் மேம்பட்டவர்; சிறந்த பல தர்மச்
செயல்களைச் செய்து வருபவர் என்றெல்லாம் கேள்விப்பட்டேன். உடனே தங்களைப் பார்த்துப்
போகலாம் என்று வந்தேன். தங்கள் சித்தம் என் பாக்கியம் தாங்கள் அமைத்துள்ள
தண்ணீர்ப் பந்தல்களுக்கும், சாலைகளுக்கும்,
குளங்களுக்கும் தங்கள்
பெயரை இடாமல் மற்றொருவர் பெயரை வைத்திருப்பதன் உட்கருத்து யாது என்பதனை யாம்
அறிந்து கொள்ளலாமா ? மற்றொருவர்
பெயர் என்று அடியார் சொன்னதைக் கேட்டு மனங்கலங்கினார் அப்பூதி அடிகள். அப்பர்
சுவாமிகளின் பெருமையை உணராமல் இந்த அடிகள் இப்படி ஒரு அபச்சார வார்த்தையை
மொழிந்து விட்டாரே என்பதை எண்ணிச் சற்று சினம் கொண்டார். அவர் கண்களிலே கோபமும்,
துக்கமும் கலந்து
தோன்றின. வாய் நின்றும் வார்த்தைகள் சற்று கடுமையாகவே வெளிப்பட்டன.
அருமையான
சைவத்திருக்கோலம் பூண்டுள்ள தாங்களே இப்படியொரு கேள்வியைக் கேட்கலாமா? யார் நீங்கள்? எங்கு இருக்கிறீர்கள்? யாது உம் தரம்? யாது உம் பூர்வாங்கம்? சொல்லுமிங்கே!. தேவரீர் சினம் கொள்ளக்
கூடாது. தெரியாததால் தானே கேட்டேன்?நன்று நன்று !
உம்மொழி நன்று ! திருநாவுக்கரசரையா யார் என்று கேட்டீர் ? சமணத்தின் நாசவலையிலே நெறி இழந்த மன்னனுக்கு
அறிவொளி புகட்டியவர் ! சைவத்தின் சன்மார்க்க நெறியை உலகோர்க்கு உணர்த்தியவர் !
இறைவன் திருவடியின் திருத்தொண்டால் இம்மையிலும் வாழலாம் என்ற உண்மை நிலையை
மெய்ப்பித்து அருளிய ஒப்பற்ற தவசீலர் திருநாவுக்கரசர் ! அப்பெருமானின்
திருப்பயெரைத்தான் யாம் எங்கும் சூட்டியுள்ளோம் என்பதை உம்மால் புரிந்துகொள்ள
முடியவில்லையே ! கொந்தளி்க்கும் ஆழ்கடலிலே கல்லைக் கட்டிப் போட்டபோது, அதுவே தெப்பமாக மாற, கரையேறிய கருணை வடிவானவரின் பெருமையை
அறியாதவர் இந்திருவுலகில் யாருமேயிருக்க நியாயமில்லையே ! எம்பெருமானே!
இப்படிக்யொரு ஐயப்பாட்டை இன்று கேட்க எம்புலன்கள் என்ன பாவம் செய்தனவோ ? என் தேவருக்கு இப்படியொரு நிலை தங்களைப்போன்ற
அடியார்களாலேயே ஏற்படலாமா ? என்றெல்லாம்
பலவாறு சொல்லி வருந்தினார் அப்பூதி அடிகளார்.
அடிகளார் தம் மீது கொண்டுள்ள
வியக்கத்தக்க பக்தியையும், அன்பையும் கண்டு
அப்பர் சுவாமிகள் அப்பூதியடிகளைப் பார்த்து, வேறு துறையாம் சமணத்திலிருந்து மீண்டு
வருவதற்காக இறைவன் அருளிய சூலை நோய் ஆட்கொள்ள, சைவம் அடைந்து வாழ்வு பெற்ற சிறுமையோனாகிய
நாவுக்கரசன் யானே! என்றார். அப்பர்
சுவாமிகளின் இன்மொழி கேட்டு அப்பூதி அடிகள் மெய்மறந்தார். அவர் கையிரண்டும்
தானாகவே சிரமேற் குவிந்தன. கண்கள் குளமாகி அருவியாகி ஆறாகி ஓடின. உரை குழறியது. மெய் சிலிர்த்தது.
கண்ணற்றவன் கண் பெற்றதுபோல் பெருமகிழ்ச்சி கொண்ட அடிகள், அன்பின் பெருக்கால் நாவுக்கரசரின் மலர்
அடிகளில் வீழ்ந்து இரு கைகளாலும் காலடிகளைப் பற்றிக் கொண்டார். அப்பர் அடிகளும்
அப்பூதி அடிகளை வணங்கி, ஆலிங்கனம் செய்து
கொண்டார். இருவரும் ஆனந்தக் கடலில் மூழ்கினர். அப்பூதி அடிகளாரின் இல்லததில்
கூடியிருந்த அன்பர்கள் நாவுக்கரசரைப் பணிந்தனர். அவரது அடக்கத்தையும் பெருமையையும்
வானளாவப் புகழ்ந்தனர். கைலாச வாசனே நேரில் வந்ததுபோல் பெருமிதம் கொண்ட
அப்பூதியடிகள், சற்று முன்னால்
தாம் சினத்தோடு பேசியதை மன்னிக்கும்படி அப்பரடிகளிடம் கேட்டார். அப்பூதியார்,
உள்ளமும் உடலும்
பொங்கிப் பூரிக்க உள்ளே ஓடினார். மனைவி மக்களை அழைத்து வந்தார். எல்லோரும்
சேர்ந்து நாவுக்கரசரின் மலரடியைப் பன்முறை வணங்கினர்.
பிறகு
நாவுக்கரசரை வழிபாட்டிற்கு எழுந்தருளச் செய்தார். பாத கமலங்களைத் தூய நீரால்
கழுவிப் புத்தம் புது நறுமலரைக் கொட்டிக் குவித்து அவ்வடிகளை வணங்கினார். அவரது
பாதங்களைக் கழுவிய தூய நீரைத் தம் மீதும், தம் மனைவி மக்கள் மீதும் தெளித்துக் கொண்டார். தானும் பருகினார். நாவுக்கரசர் அவ்வடிகளின்
அன்பிற்குக் கட்டுப்பட்டு உலகையே மறந்தார். பிறகு திருநீற்றை எடுத்து அப்பூதி
அடிகளுக்கும், அவர் மனைவிக்கும்,
குழந்தைகளுக்கும் அளித்தார்.
அடிகளும், அவர்தம்
குடும்பத்தினரும் நெற்றி முழுமையும், மேனியிலும் திருநீற்றைப் பூசிக் கொண்டார். அடிகள் நாவுக்கரசரிடம், ஐயனே! எமது இல்லத்தில் திருவமுது செய்து எமக்கு
அருள் புரிய வேண்டும் என்று பணிவன்புடன் வேண்டி நின்றார். அங்ஙனமே ஆகட்டும் என்று
அடியாரின் அன்புக் கட்டளைக்கு அடிபணிந்தார் அப்பர் பெருமான் ! நாவுக்கரசர்
சம்மதிக்கவே அகமகிழ்ந்துபோன அப்பூதி அடிகளும், அவர் மனைவியும், என்ன பேறு பெற்றோம் இங்கே அமுதுண்ண ஐயன்
இசைந்தது. அம்பலத்தரசரின் திருவருட் செயலன்றோ இஃது என்று எண்ணி மகிழ்ந்தனர். அவரது மனைவி
அறுசுவை அமுதிற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினாள். சற்று நேரத்தில்
நால்வகையான அறுசுவை உண்டி தயாரானது. அப்பூதி அடிகளாரின் மனைவியார், பெரிய திருநாவுக்கரசிடம் வாழை இலை அரிந்து
வருமாறு பணித்தாள்.
அன்னையாரின் கட்டளையை கேட்டு மூத்த திருநாவுக்கரசு தனக்கு இப்படியொரு
அரும்பணியை நிறைவேற்றும் பாக்கியம் கிடைத்ததே எனப்பூரித்துப் புளகாங்கிதம் அடைந்து
இலை எடுத்துவரத் தோட்டத்திற்கு விரைந்தோடினான். பின்புறம் அமைந்திருந்த
தோட்டத்திற்குச் சென்ற அக்குமாரன் பெரியதொரு வாழை மரத்திலிருந்து குருத்தை அரியத்
தொடங்கினான். அப்பொழுது வாழை மரத்தின் மீது சுற்றிக் கொண்டிருந்த கொடிய
பாம்பு ஒன்று அச்சிறுவனின் கையை வளைத்துக் கடித்தது; பயங்கரமாக அலறினான். கையில் பாம்பு
சுற்றியிருப்பதைப் பார்த்ததும் அவசர அவசரமாக உதறித் தள்ளினான். பாம்பு
கடித்ததைப்பற்றி அப்பாலகன் வருந்தவி்ல்லை. உயிர் போகும் முன் பெற்றோர்கள் இட்ட
கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்பதைப் பற்றித்தான் கவலைப்பட்டான். தன்னைப் பாம்பு
கடித்த விஷயத்தை எவரிடமாவது கூறினால் நல்லதொரு காரியத்திற்குத் தடையேற்பட்டு
விடும் என்று எண்ணி பேசாமல் தன் கடைமையைச் செய்யக் கருதினான். அதுவரை விஷம்
தாங்குமா என்ன? பாலகனின்
உடம்பில் ஏறிய விஷம் சிறுகச் சிறுகத் தன் வேலையைச் செய்யத் தொடங்கியது.
இலையும்
கையுமாக வீட்டிற்குள்ளே ஓடினான். பெற்றோரிடம் இலையைக் கொடுப்பதற்கும் விஷம்
உடலெங்கும் பரவி பாலகன் சுருண்டு விழுந்து உயிரை விடுவதற்கும் சரியாக இருந்தது.
பெற்றோர்கள் ஒருகணம் துணுக்குற்றார்கள். மகனுக்கு என்ன நேர்ந்தது என்பதைக்கூட உணர
முடியாத நிலையில் சற்று நேரம் செயலற்று நின்றார்கள். நீலம் படிந்த மகனின்
உடம்பைப் பார்த்ததும் பாம்பு கடித்து இறந்தான் என்பதை உணர்ந்தனர். பெற்றோர்கள்
உள்ளம் பதைபதைத்துப் போயினர். அவர்கட்டு அலறி அழ வேண்டும் போல் இருந்தது. என்ன
செய்ய முடியும் ? துக்கத்தை
அடக்கிக் கொண்டனர். மகனின் உயிரைவிடத் தொண்டரை வழிபட வேண்டியதுதான் தங்களது
முக்கியமான கடமை என்று மனதில் கொண்டனர். வந்திருக்கும் தொண்டருக்குத்
தெரியாதவாறு மூத்த திருநாவுக்கரசரின் உடலைப் பாயால் சுற்றி ஒரு சூலையில் ஒதுக்கமாக
வைத்தனர்.
சோகத்தை அகத்திலே
தேக்கி முகத்திலே சந்தோஷத்தை வரவழைத்துக் கொண்டனர். தடுமாற்றம் சற்றுமின்றி,
முகம் மலர அப்பூதி அடிகள்,
அப்பர் அடிகளை அமுதுண்ண
அழைத்தார். அவர் தம் மலரடிகளைத் தூய நீரால் சுத்தம் செய்து ஆசனத்தில் அமரச்
செய்தார். ஆசனத்தில் அமர்ந்து அடிகளார் அனைவருக்கும் திருநீறு அளிக்கும்போது மூத்த
திருநாவுக்கரசரைக் காணாது வியப்பு மேலிட, எங்கே உங்கள் மூத்த புதல்வன் என்று கேட்டார். அப்பூதி அடிகள் என்ன சொல்வது
என்பது புரியாது தவித்தார். கண் கலங்கினார். செய்வதறியாது திகைத்தார்.
திருநாவுக்கரசர் திருவுள்ளத்தில் எம்பெருமானின் திருவருட் செயலால் இனந்தெரியாத
தடுமாற்றம் ஏற்பட்டது.
மூத்த மகனைப் பற்றி்க் கேட்டதும் அடிகளார் முகத்தில்
ஏற்பட்ட மாறுதலைக்கண்ட நாவுக்கரசர் ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்பதை மட்டும்
குறிப்பால் உணர்ந்து கொண்டார். மீண்டும் மூத்த மகன் எங்கே ? என்று கேட்டபதற்குள் அப்பூதி அடிகளார், என் மூத்த மகன் இப்பொழுது இங்கு உதவான் என்று
விடையளித்தார். அதைக் கேட்ட அப்பர் நீங்கள் என்னிடம் ஏதோ உண்மையை மூடி மறைக்கப்
பார்க்கிறீர்கள். உங்கள் பதில் எதனாலோ என் உள்ளத்தில் திருப்தியைக்
கொடுக்கவி்ல்லை என்றார். இவ்வாறு அப்பர் அடிகள் சொன்ன பிறகும் அப்பூதி அடிகளால்
உண்மையை மறைக்க முடியவில்லை . நடந்த எல்லா விவரத்தையும் விளக்கமாகக் கூறினார்.
இம்மொழி கேட்டு மனம் வருந்திய அப்பரடிகள், என்ன காரியம் செய்தீர்கள் என்று அப்பூதி அடிகளை
கடிந்து கொண்டே மூத்த திருநாவுக்கரசின பிணத்தைப் பார்க்க உள்ளே சென்றார்.
பார்த்தார்; திடுக்கிட்டார்;
மனம் வெதும்பினார். உடனே
இறந்த பாலகனை எடுத்துக் கொண்டு திருக்கோயிலுக்கு வருக என்று கூறியவாறு
கோயிலுக்குப் புறப்பட்டார். அப்பூதி அடிகள் பாலகனைத் தூக்கிக் கொண்டு
புறப்பட்டார். இச்செய்தி கேட்டு ஊர் மக்களும் திரண்டனர்.
திங்களூர் பெருமானை
அப்பரடிகள் மெய் மறந்து உருகிப் பணிந்தார். ஒன்று கொல்லாம் என்னும திருப்பதிகத்தை
நாவுக்கரசர் பாடினார்; மெய்யுருகினார்.
நாவுக்கரசரின் பக்தியிலே பரமனின் அருள் ஒளி பிறந்தது. மூத்த திருநாவுக்கரசு
துயின்று எழுந்திருப்பவன் போல் எழுந்தான். அப்பரடிகளின் காலில் விழுந்து
வணங்கினான். அப்பரடிகளின் மகிமையைக் கண்டு அனைவரும் வியந்து போற்றினார். அவரது
பக்திக்கும், அருளுக்கும்,
அன்பிற்கும் தலைவணங்கி
நின்றனர். ஆலயத்துள் கூடியிருந்து அன்பர் கூட்டம் அப்பர் பெருமானைக் கொண்டாடி
போற்றியது. எல்லோரும் அப்பூதி அடிகளின் இல்லத்திற்கு வந்தனர். எல்லோரும் ஒருங்கே
அமர்ந்து அப்பர் அடிகளோடு சேர்ந்து அமுதுண்டனர். அப்பூதி அடிகள், நாவுக்கரசருடன் அமுதுண்ணும் பேறு பெற்றோமே என
மகிழ்ந்தார். திருநாவுக்கரசர் சில காலம் அபபூதி அடிகளின் இல்லத்தில் தங்கி இருந்து
பின்னர் திருப்பழனம் பொழுது அப்பூதி அடிகளின் திருத் தொண்டினையும் சிறப்பித்துப்
பாடியுள்ளார். அப்பூதி அடிகள் நிலவுலகில் அடியார்களுக்குத் திருத்தொண்டு பல
புரிந்தவாறு பல்லாண்டு வாழ்ந்து முடிவில் எம்பெருமானின் சேவடி நீழலை அடைந்தார்.
குருபூஜை
அப்பூதியடிகள்
நாயனாரின் குருபூஜை தை மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.