காரி நாயனார்

0

காரி நாயனார்




திருக்கடவூர் என்னும் மறையோர்கள் வாழ்கின்ற வளமிகுந்த இப்பகுதியிலே காரி நாயனார் என்னும் செந்நாப்புலவர் அவதரித்தார்.புலமைமிக்க இச்சிவனடியார் தமிழை நன்கு ஆராய்ந்து அறிந்து கவிபாடும் திறத்தினைப் பெற்றிருந்தார்.இவர் சிந்தையிலே சங்கரர் இருக்க, நாவிலே சரஸ்வதி இருந்தாள். திருவெண்ணீற்றின் பெருமையை உணர்ந்து திருசடை அண்ணலையும், அவர் தம் அடியார்களையும் பேணி வந்தார். ஆலயங்களுக்கு ஆண்டுதோறும் திருப்பணிகள் பல செய்தார்.ஒருமுறை காரி நாயனார், சொல் விளங்கப் பெருமான் மறைந்து நிற்கும் வண்ணம் தமது பெயரால் காரிக்கோவை என்னும் தமிழ் நூல் ஒன்றினை ஆக்கினார். மூவேந்தர்களுடைய உயர்ந்த நட்பினைப் பெற்றார். அவர்கட்கு, அந்நூலின் தெள்ளிய உரையை நயம்படக் கூறினார். இவருடைய தமிழ்ப் புலமையை எண்ணி வியப்படைந்த மூவேந்தர்களும் பொன்னும் பொருளும் பரிசாகக் கொடுத்து சிறப்பித்தனர். 

பொற் குவியலோடு, திருக்கடவூர் திரும்பிய நாயனார், சிவன் கோயில்களைப் புதுப்பித்தார். சிவன் கோயில்கள் பல கட்டி கும்பாபிஷேகம் நடத்தினார். சிவனடியார்களுக்கு அன்போடு அமுதளித்து பெரு நிதிகளை அள்ளி அள்ளிக் கொடுத்து அகமகிழ்ந்தார்.தமிழறிவால் நூல்கள் பல  இயற்றி பெரும் பொருள் பெற்று அப்பொருளை எல்லாம் சிவாலயத்துக்கும், சிவனடியார்களுக்குமே வழங்கி பேரின்பம் பூண்டார். இவ்வாறு கங்கை வேணியரின் கழலினைச் சிந்தையிலிருத்திய தொண்டர் திருக்கடவூரில் கோயில் கொண்டுள்ள அமிர்தகடேசுவரரையும், அபிராம வல்லியையும், பாமாலையாம் பூமாலையால் அல்லும் பகலும் சேவித்தார். எம்பெருமான் தொண்டர்க்குப் பேரருள் பாலித்தார். தமது புகழ் உடம்போடு கயிலைமலை சேர்ந்து பேரின்பம் கண்டார் காரி நாயனார்.

குருபூஜை


காரியார் நாயனாரின் குருபூஜை மாசி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

காரிக்கு அடியேன்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top