மூர்த்தி நாயனார்

0

மூர்த்தி நாயனார்






பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து என்ற செம்மாப்புடைத்த செந்தமிழ் முதுமொழிக்கு ஏற்றபடி முத்தும், முத்தமிழும் தந்து முதன்மையைப் பெற்ற பழம்பெரும் பதியான பாண்டிய நாட்டின் தலைநகரம் மதுராபதி ! செந்தமிழ்க் கழகமும், சந்தனச் சோலையும் தெய்வ மணமும் கமழ்ந்தது. ஓங்கி விளங்கும் பொதியமலைத் தென்றலில் நின்று முத்தமிழ்ச் சங்கம் வளர்ந்தது. பாண்டிய நாடு, ஓங்கி உயர்ந்து நான்மாடங்களையும், கூட கோபுரங்களையும் கொண்டது. பாண்டிய நாட்டில் நிலையான செல்வமுடைய குடிகள் பல நிறைந்து வாழும் சீமையையும் சிறப்பினையையும் பெற்றிருந்தன. சோமசுந்தரக் கடவுளே சங்கப் புலவருள் ஒருவராய்த் திகழந்து, சங்கத் தமிழைத் தாலாட்டிய மதுரை மாநகர், திருமகள் குடியிருக்கும் தாமரை விதையாகவும், பாண்டிய நாடு செந்தாமரை மலராகவும் விளங்கிற்று எனலாம். 

எம்பெருமான் அரசோச்சி அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் புரிந்ததும் இம் மதுரையும் பதியிலேதானென்றால் அப்பதியின் புகழும், பெருமையும் சொல்லத்தக்கதன்றோ ! தெய்வத் திறனைப் பெற்று, மன்னும் இமய மலையினும் ஓங்கிய பெருமையை மதுரை மாநகர் பெற்று உயர்ந்ததென்றால் அஃது மிகையாகாது. இத்தகைய சீர்மிக்க பதியிலே, பரமனுக்குத் திருத்தொண்டு புரிந்துவரும் வணிகர் குலத்தில் - அக்குலம் செய்த மாதவத்தின் பயனாய் அவதரித்தவர்தான் மூர்த்தி நாயனார். பற்றற்ற எம்பெருமானின் திருவடிகளைப் பற்றி வாழ்வதே வாழ்க்கையின் பெரும் பேறாக பெற்றிருந்தார் இவர். ஆலயத்தில் தினந்தோறும் சந்தனத்தை அரைத்துக் கொடுக்கும் திருப்பணியைத் தமது கடமையாகக் கொண்டிருந்தார். வீரம் விளையாடும் பாண்டிய நாட்டிலே, கோழையொருவன் செங்கோலோச்சி வந்தான். இதுதான் சமயம் என்று பகையரசனான கர்நாடக மன்னன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து பாண்டியனை முறியடித்தான். மதுரையம்பதியைத் தனக்குத் தலைநகராகவும் கொண்டான். பகையரசன், சைவ நெறியில் செல்லாது சமண சமயத்தைச் சார்ந்தவன். சமண மதமே உய்யும் நெறிக்கு உகந்த தெய்வமதம் என்று எண்ணி அவன் சமண நெறியில் ஈடுபட்டு ஒழுகினான். சைவ அடியார்களுக்கு அடுக்கடுக்கான இடுக்கண் பல விளைவித்தான். சமணமத பிரச்சாரர்களையும், சமண குருமார்களையும் தன் நாட்டில் இருந்து வரவழைத்தான். சமணமதக் கொள்கையைப் பரப்பப் பல வழிகளைக் கையாண்டான் மன்னன். தனக்குத் தடையாக இருந்த சைவ சமயத்தவர்க்குப் பல வழிகளில் கொடுமைகள் புரிந்தான். சைவத்தை வளரவிடாமல் தடுத்தான். சைவ மதத்தினரது சிவாலயங்களுக்குத் திருப்பணிகள் நடவா வண்ணம் பல வழிகளில் துன்பத்தைக் கொடுத்தான்.

சொக்கநாதருக்குத் திருச்சந்தனம் அரைக்கும் மூர்த்தி நாயனாருக்கும் பல கொடுமைகளைப் புரியத் தொடங்கிணர் சமணர்கள். மூர்த்தி நாயனாருக்குச் சந்தனக் கட்டைகள் கிடைக்காதவாறு செய்து அவரது திருப்பணியைத் தடுக்க முயற்சித்தனர். இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் சிவனையே எண்ணிச் சிந்தை குளிர்ந்த மூர்த்தியார், இறைவனுக்குத் தாம் செய்யும் திருத் தொண்டினை மட்டும் தவறாமல் செய்து கொண்டே வந்தார். ஒரு நாள் சந்தனக் கட்டைக்காகப் பகலெல்லாம் மதுரையம்பதி முழுவதும் சுற்றி அலைந்தார். ஒரு பலனும் கிட்டவில்லை. பசியையும் பொருட்படுத்தாமல் எங்கும் தேடி இறுதியில் வேதனையோடு திருக்கோயிலுக்குள் வந்தார். சிவநாமத்தைத் துதிக்கத் தொடங்கினார். இச்சமயத்தில் தொண்டர்க்கு ஒரு எண்ணம் பிறந்தது. சந்தனக் கட்டைக்கு முட்டு வரலாம். அதனை அரைக்கும் என் முழங்கைக்குத் தட்டு வரவில்லையே. சந்தனக்கட்டை கிடைக்காவிட்டால் என்ன ? இந்தக் கட்டையின் முழங்கை இருக்கிறதே, இதையே அரைக்கலாம் என்று எண்ணினார். மகிழ்ச்சி மேலிட சந்தனக் கல்லில் தமது முழங்கையை வைத்துத் தேய்க்கத் தொடங்கினார். மனத்திலே அரனைத் தியானித்துக் கொண்டே கையை பலமாகத் தேய்த்துக் கொண்டேயிருந்தார். தோல் தேய்ந்தது. ரத்தம் பீறிட்டது ! எலும்பும் நரம்பும் நைந்து வெளிப்பட்டன. 

மூர்த்தி நாயனார் எதைப் பற்றியும் எண்ணாமல் வேதனையையும் பொருட்படுத்தாமல் அரைத்துக் கொண்டேயிருந்தார். ஆலவாய் அண்ணல், பக்தனின் பரம சேவையைக் கண்டு அருள் வடிவமானார். பக்திக்கு அடிமையானார். அதற்கு மேல் தொண்டரைச் சோதிக்க விரும்பவில்லை. அன்பும் பக்தியும் மேலிட எமக்குச் செய்த திருத்தொண்டு முன்போல் தடையின்றி நடைபெறும். கர்நாடக மன்னனை வென்று அரசு பெற்றுப் புகழ்பெறுவாய் ! இறுதியில் எமது திருவடி சேர்வாயாக என்று அருள்வாக்கு கூறினார். இறைவனின் திருவாக்கை கேட்டு, சித்தம் மகிழ்ந்து போன மூர்த்தி நாயனார் முழங்கையைத் தேய்ப்பதை நிறுத்தினார். குன்றாத குணக்குன்றாம், கோவாத மணியாம், மறைமுடிக்கு மணியாம், அற்புத பொன்னம்பலத்து ஆடுகின்ற அம்பலத்தரசன் அருட்கடாக்ஷத்தில் முன்போல் அவரது திருக்கரம் நன்னிலை எய்தியது. சைவத்தைத் தாழ்த்திச் சமணத்தைப் பரப்ப அரும்பாடுபட்ட கர்நாடக மன்னனின் ஆயுளும் அன்றோடு முடிவுற்றது. சமணரின் ஆதிக்கமும்  அழிந்தது. முன்போல் சைவம் தழைத்தது. மன்னனுக்குச் சந்ததி இல்லாததினாலும், அரசமரபினோர் யாரும் இல்லாததினாலும், அமைச்சர்களே இருந்து மன்னனின் ஈமக் கடன்களைச் செய்து முடித்தனர். அதன் பிறகு நாட்டை ஆள்வதற்கு யாரை தேர்ந்தெடுப்பதென்று ஆலோசித்துக் கொண்டிருந்த அமைச்சர்கள், அவர்கள் மரபு வழக்கப்படி, பட்டத்து யானையைக் கண்ணைக் கட்டி அதன் துதிக்கையில் பூமாலையைக் கொடுத்து அனுப்புவது என்ற தீர்மானத்திற்கு வந்தனர். நன்னாள் பார்த்தனர்.

பொங்கி வரும் அப்பொன்னாளில் ஆலவாய் அண்ணலுக்கு ஆராதனை செய்தனர். பட்டத்து யானையை அலங்காரம் செய்து அதன் கண்களைக் கட்டிவிட்டு துதிக்கையில் பூமாலையைக் கொடுத்தனர். இம்மண்ணுலகை அறநெறியில் நிறுத்தி ஆள்வதற்கு ஏற்ற ஒரு ஏந்தலை ஏந்தி வருவாயாக என்று சொல்லி யானையை விடுத்தனர். பல இடங்களில் சுற்றித் திரிந்து, இறுதியில் திருவாலவாய்க் கோயிலை வந்து அடைந்தது பட்டத்து யானை. ஆலவாய் அப்பனை வணங்கி எழுந்து நின்ற மூர்த்தி நாயனார் கழுத்தில் பட்டத்து யானை துதிக்கையில் இருந்த மலர் மாலையைப் போட்டது. மூர்த்தி நாயானாரைத் தன் மீது ஏற்றிக் கொண்டது. மக்கள் ஆரவாரித்தனர். சங்குகள் முழுங்கின ! தாரைகள் ஒலித்தன ! பேரிகைகள் அதிர்ந்தன ! ஆலயத்து மணி ஒலித்தன ! வாழ்த்தொலி வானை முட்டியது. யானையின் கட்டப்பட்டிருந்த துணி அவிழ்க்கப்பட்டது. மூர்த்தி நாயனார் அரச மரியாதையுடன் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அரண்மனை வாயிலை அடைந்த மூர்த்தி நாயனாரை அமைச்சர் முதலான மந்திரிப் பிரதானிகள் வாழ்த்தி வணங்கி வரவேற்று அவைக்கு அழைத்துச் சென்றனர். மூர்த்தி நாயனாருக்கு முடிசூட்டுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. அமைச்சர்கள் முழு மனதோடு முடிபுனையும் மங்கல விழாவில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு மூர்த்தி நாயனார் பெருமகிழ்ச்சி கொண்டார் என்றாலும் நாயனார் அவர்கட்கு ஒரு நிபந்தனை விதித்தார். 

நாட்டில் பரவியிருக்கும், சமண நெறியின் தீய சக்திகளை ஒழித்து சைவ சன்மார்க்கு நெறியை நிலைபெறச் செய்ய வேண்டும். அவ்வாறு மக்களிடம் சைவ சமயம் தழைத்த பின்னர் தான் நான் அரசு ஏற்பேன் என்றார். ஐயனே! தங்கள் ஆணை எதுவோ அதுபோலவே எல்லாம் நடக்கும். சமண மன்னன் மாண்டதோடு, சமணமும் இல்லாது போனது. அதைப்பற்றி ஐயன் அஞ்சற்க. அதுவும் இறை அருளைப் பரிபூரணமாகப் பெற்ற தங்களுக்கு எதிராக நிற்க எவரும் இரார் என்று பணிவோடு பகர்ந்தனர் அமைச்சர்கள். அவர்கள் மொழிந்ததைக் கேட்டு, நாயனார் அகமகிழ்ந்தார். அமைச்சர்கள் பொன் முடியும் மணிமாலையும், கலவைப் பூச்சும் கொண்டு வந்து, இவற்றை அணிந்து கொண்டு அரசபீடம் அமர்க என்று வேண்டிக் கொண்டனர். 

பொன் முடியும், மணிமாலையும், மூர்த்தி நாயனாருக்கு வெறுப்பைக் கொடுத்தன. அவர், அமைச்சர்களிடம், அமைச்சர்களே ! பொன்முடியும், மணிமாலையும், கலவைப் பூச்சும் எமக்கு எதற்கு ? யாம் அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை என்று கூறினார். அமைச்சர்கள் நாயனார் மொழிந்ததைக் கேட்டு மனம் உருகினர். நாயனார் தமது விருப்பதிற்கு விளக்கம் கூறினார். அமைச்சர்களே ! நான் பொன்னை அணிந்து மண்னை ஆள விரும்பவில்லை. இறைவனின் திருவடியே எனக்கு மணிமுடி. எனது சடைமுடியே எமக்குப் பொன்முடி. என் ஐயனின் உருத்திராட்ச மாலையே எனக்கு மணிமாலை. திருவெண்ணீறே எமது மேனிக்கு ஏற்ற கலவைப்பூச்சு. இவற்றை அணிந்துதான் நான் அரசு செய்வேன். மூர்த்தி நாயனார் எம்பெருமான் மீது கொண்டுள்ள பக்தியையும், நம்பிக்கையயும், அன்பையும் கண்டு அமைச்சர்களும், ஆன்றோர்களும், பெருங்குடி மக்களும், காவலர்களும் வியப்பில் மூழ்கினர். அவரைப் போற்றிப் புகழ்ந்தனர். அனைவரும், நாயனாரின விருப்பப்படியே அவருக்குத் திருமுடி புனைய இயைந்தனர். மூர்த்தி நாயனார், அரசு பெற்ற உடனேயே ஆலவாய் அழகனையும், அபிடேக வல்லியையும் தரிசிக்கத் திருக்கோயிலுக்குப் புறப்பட்டார். இறைவன் திருமுன்னால் முடிபட, அடிபணிந்து எழுந்தார். வெண் கொற்றைக் குடையின் கீழே, திருவெண்ணீரு அணிந்த மேனியோடு மூர்த்தி நாயனார், திருநீறு - கண்டிகை - சடைமுடி என்னும் மும்மையால் அறம் வழுவாது குடிகளைக் காத்தார். இவரது ஆட்சியில் சைவம் வளர்ந்தது. சமணம் தலைதாழ்ந்தது. மக்கள் வாழ்வு மலர்ந்தது. நில உலகில் நீடு புகழ் பெற்ற மூர்த்தி நாயனார், நெடுங்காலம் ஆண்டு இறைவனின் திருவடி நீழலை அடைந்தார்.

குருபூஜை


மூர்த்தி நாயனாரின் குருபூஜை ஆடி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top