முருக நாயனார்

0

முருக நாயனார்





திருப்புகலூர் தெய்வமணம் கமழும் பழம் பெரும் திருத்தலம் ! இத்தலத்திலுள்ள சிவன் கோயிலுக்கு வர்த்தமானேச்சுரம் என்று பெயர். இத்தலத்தில், அந்தணர் குலத்தில் முருகனார் என்னும் சிவத்தொண்டர் தோன்றினார். முருகனார் இளமை முதற்கொண்டே இறைவனின் பாதகமலங்களில் மிகுந்த பற்றுடையவராய் வாழ்ந்து வந்தார் ! பேரின்ப வீட்டிற்குப் போக வேண்டிய பேறு பரமனின் திருத்தொண்டின் மூலம்தான் கிட்டும் என்ற பக்தி மார்க்கத்தை உணர்ந்திருந்தார் முருகனார். எந்நேரமும் அம்பலத்தரசரையும் அவர் தம் அடியார்களையும் போற்றி வணங்கி வந்தார் முருகனார். 

தேவார திருப்பதிகத்தினை ஓதுவார். ஐந்தெழுத்து மணிவாசகத்தை இடையறாது உச்சிரிப்பார். இத்தகைய சிறந்த சிவபக்தியுடைய முருக நாயனார் இறைவனுக்கு நறுமலர்களைப் பறித்து மலர்மாலை தொடுக்கும் புண்ணிய கைங்கரியத்தைச் செய்து வந்தார். முருகநாயனார் தினந்தோறும் கோழி கூவத் துயிலெழுவார். தூயநீரில் மூழ்குவார். திருவெண்ணீற்றை மேனியில் ஒளியுறப் பூசிக் கொள்வார். மலர்வனம் செல்வார். மலர்கின்ற பருவத்திலுள்ள மந்தாரம், கொன்றை, செண்பகம் முதலிய கோட்டுப் பூக்களையும், நந்தியவர்த்தம், அலரி, முல்லை, சம்பங்கி, சாதி முதலிய கொடி பூக்களையும், தாமரை, நீலோற்பவம், செங்கழுநீர் முதலிய நீர்ப்பூக்களையும் வகை வகையாகப் பிரித்தெடுத்து வெவ்வேறாகக் கூடைகளில் போட்டுக் கொள்வார்.

இவ்வாறு பறிக்கப்பட்ட வகை வகையான தூய திருநறுமலர்களைக் கொண்டு, கோவை மாலை, இண்டை மாலை, பக்தி மாலை, கொண்டை மாலை, சர மாலை, தொங்கல் மாலை என்று பல்வேறு விதமான மாலைகளாகத் தொடுப்பார். வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்குப்ப பூமாலையாம், பாமாலை சாத்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார். அரனாரிடம் அளவற்ற பக்தி பூண்டுள்ள முருகநாயனார் சிவன் அடியார்களுக்காகச் சிறந்த மடம் ஒன்றைக் கட்டுவித்தார். 

முருகநாயனாரின் திருமடத்திற்கு திருஞான சம்பந்தர், அப்பர் சுவாமிகள், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் போன்ற சைவ சண்மார்க்கத் தொண்டர்கள் எழுந்தருளியுள்ளார்கள். அவர்கள் முருகநாயனாரின் அன்பிற்கினிய நண்பர்களாகவும் மாறினர். இறுதியில் திருநெல்லூரில் நடந்த திருஞானசம்பந்தரின் பெருமணத்திலே கலந்துகொள்ளச் சென்ற முருக நாயனார், இறைவன் அருளிய பேரொளியிலே திருஞான சம்பந்தர் புகுந்தபோது தாமும் புகுந்தார். என்றும் நிலையான சிவானந்தப் பேரின்ப வாழ்வைப் பெற்றார். இறைவனின் திருவடி நிழலை அடைந்தார்.

குருபூஜை


முருக நாயனாரின் குருபூஜை வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.



Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top