சண்டேசுவர நாயனார்

0

சண்டேசுவர நாயனார்
திருச்சேய்ஞ்ஞலூர் என்பது சிறப்பு மிக்கப் பழம் பெரும் தலம். இத்தலம் சோழ நாட்டிலே, மண்ணியாற்றின் தென்கரையிலே சோழர்களுக்குத் தலைநகரமாக விளங்கி வந்தது. பண்ணிற்கு மெல் இசையும், பாலிற்கு நல்ல இன்சுவையும், கண்ணிற்குப் பயன் ‌பெருகும் ஒளியும், கருத்திற்குப் பயன் பெறும் திருவைந்தெழுந்தும், விண்ணிற்கு மழையும், வேதத்திற்குச் சைவமும் பயனாவன போல் மண்ணுலகத்திற்குப் பயனாக விளங்கும் பெருமைமிக்கது திருச்சேய்ஞ்ஞலூர். சோழ அரச மரபினர் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து தலங்களுள் ஒன்றாகக் கருதப்படும் பெரும் சிறப்பினைப் பெற்றிருந்தது இத்திருத்தலம் !முன்னொரு காலத்தில் அமரர்களுக்குத் தொல்லை கொடுத்த சூரபதுமன் முதலிய அசுரர்களை வென்று அமரர்களின் அல்லலை நீக்கியப் முருகப்பெருமான் அமரர்களும், பூதகணங்களும் பின்தொடர மண்ணியாற்றின் கரையை அடைந்து, எழில் மிகும் திருநகரம் ஒன்றை நிர்மாணித்தார். அந்நகரில் கந்தவேள் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து சிவ வழிபாடும் செய்தார். இக்காரணம் பற்றி‌யே இந்நகரம் திருச்‌‌சேய்ஞ்ஞலூர் என்னும் சிறப்புப் பெயர் பெற்றது. இப்படிப்பட்ட இந்த நகரில் அந்தணர்கள் மிகுந்து இருந்தார்கள். 

அந்தணருள் ஒருவர்தான் எச்சத்தன் என்பவர். அவர் மனைவியின் பெயர் பவித்திரை. அவர்களுக்கு புத்திரராகப் பிறந்தவர்தான் விசாரசருமன். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த விசாரசர்மன், ஐந்து வயது பிராயத்தை அடைந்தார். முற்பிறப்பில் வேதாகமங்களில் பெற்றிருந்த நல்லுணர்ச்சியின் தொடர்பினால் இப்பிறப்பிலும் வேதாகமங்களின் உட்பொருள்களில் மிகுந்த  ஈடுபாடு இவருக்கு உண்டானது. அரும்பில் நிறைந்துள்ள மணம், மலரும் தருணம் வெளிப்படுவது போல், கல்வி பயில ஆரம்பித்தபோதே இவரது சிவாகம உணர்ச்சி பெரிதும் விளங்கலாயிற்று. அவர் சிந்‌தையில் எந்நேரமும், பரமனின் பொற்பாதத்தின் நினைவே தான் இருந்தது. முக்கண்ணனின் மலர்ப்பாதங்களின் மீது கொண்டுள்ள அன்பின் மிகுதியால் இச்சிறு பிராயத்திலேயே, பேரின்ப வீட்டைப் பெற்ற பெருமிதம் பூண்டார் அந்த அந்தணர் குலக்கொழுந்து!

விசாரசருமருக்கு ஏழாண்டுகள் நிரம்பின. பெற்றோர்கள். அப்பருவத்தில் அவருக்கு உபநயனம் செய்து மகிழ்ந்தனர். குல ஒழுக்கப்படி வேதம் ஓதுவித்தனர். அவரோ ஆசான் வியக்கும் வண்ணம் தேர்ச்சி பெற்று விளங்கினார். ஒரு நாள் விசாரசர்மன் வேதம் ஓதும் அந்தணச் சிறுவர்களுடன் மண்ணியாற்றின் கரைப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தார். அவ்வழியே ஓர் சிறுவன் பசுக்களை ஓட்டிக்கொண்டு போய்க் கொண்டிருந்தான். பசு ஒன்று அச்சிறுவனைக் கொம்பினால் முட்டியது. சிறுவனுக்குக் கோபம் வந்தது. பசுவைக் கோலினால் பலமாகப் பன்முறை அடித்தான். இக்காட்சியைக் கண்ட, விசாரகுமார் திடுக்கிட்டார். அவர் மனம் இளகியது. அவரால் இக்கொடுமையைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. சிறுவனிடம் விரைந்து சென்றார். அவன் பசுவை மேலும் அடிக்காதவாறு தடுத்தார். அத்தோடு அப்பாலகனுக்கு பசுவின் மகிமையைப் பற்றிக் கூறலானார். 

ஐயையோ ! எவ்வளவு பெரும் பாவமான காரியத்தைச் செய்துவிட்டாய் ? உலகத்திலுள்ள எல்லா உயிர்களைக் காட்டிலும் ஆவினங்கள் ‌சிறந்த மேன்மையும், பெருமையையும் உடையனவல்லவா ? அரனார் பொன்மேனியிலும், அடியார்கள் திருமேனியிலும் ஒளிவிடும் தூய வெண்ணீறு ஆவினிடமிருந்துதானே நமக்குக் கிடைக்கிறது. எம்பெருமான் திருமுடியில் அபிஷேகம் செய்யத்தக்க பஞ்ச கவ்யத்தை அளிக்கும் உரிமையும் அருமையும் ஆவினத்தைச் சேர்ந்ததல்லவா ? எம்பெருமான் உமாதேவியாருடன் எழுந்தருள் இடபத்தின் திருக்குலத்தைச் சேர்ந்த காமதேனு என்று ஆவினத்தை அழைப்பார்களே ! பருகுவதற்கரிய பால், தயிர், வெண்ணெய், மோர் முதலியவற்றை மனிதர்களுக்கு அளிப்பது ஆவினம் தானே ! பசுக்களின் அங்கங்களில் தேவர்களும், தேவதேவாதியர்களும், முனிவர்களும் வாழ்கின்றனரே ! இத்தகைய தெய்வத்தன்மை மிகும் ஆவினங்களுக்குத் துன்பம் ஏற்படாவண்ணம் பாதுகாப்போடு மேய்ப்பதல்லவா நம் கடமை, ஆவினங்களைக் காப்பது ஆண்டவனுக்கு அருந் தொண்டாற்றுவது போலல்லவா ? இனிமேல் இந்த பசுக்களை மேய்க்கும் பொறுப்பினை என்னிடம் விட்டுவிடு. இவ்வாறு விசாரசருமர் ‌மொழிந்‌ததை கேட்டு அச்சிறுவன் தான் செய்த தவற்றை உணர்ந்து பயந்தான். அவன் விசாரசருமரை வணங்கி பசுக்களை மேய்க்கும் பணியை அவரிடமே விட்டு அகன்றான்.

விசாரசருமர் பசுக்களை மேய்க்கப் போகும் விஷயத்தை மறையவர்களிடம் சொல்லி அதற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். அனுதினமும் விசாரசருமர் கோலும், கயிறும் ஏந்திக்கொண்டு, ஆவினங்களோடு மண்ணியாற்றின் கரைக்குப் புறப்படுவார். பசுக்களை நல்ல பசுமையான புற்கள் உள்ள இடத்தில் மேய விடுவார். நல்ல நீர் உள்ள இடத்தில் நீர் அருந்தச் செய்வார். பசுக்கள் மேய முடியா‌த இடத்தில் கல்லையும், முள்ளையும் பொருட்படுத்தாமல் அவரே, புற்களைச் சுத்தபடுத்தி அவைகளுக்கு ஊட்டுவார். பெற்றோர்கள் தான் பெற்ற செல்வங்களைக் காப்பதுபோல் கோகுலங்களைக் காப்பதில் கண்ணுங்கருத்துமாக இருந்தார் விசாரசருமர். ஐந்தறிவு படைத்த அந்த ஜீவன்கள் இவரது அன்பிற்குக் கட்டுப்பட்டு அச்சம் என்பதே இல்லாமல் இவருடன் பழகின. 

நல்ல வெயில் வந்துவிட்டால் மட்டும் மரநிழலில் சற்று நேரம் நிம்மதியாகப் படுத்து இளைப்பாற்றுவார் விசாரசருமர் ! மாலை நேரம் வந்ததும் வேண்டிய அளவு விறகு, சமிதை சேமித்துக் கட்டாகக் கட்டி வைத்துக் கொண்டு ஆநிரைகளுடன் வீட்டிற்குப் புறப்படுவார். இவர் ஆநிரைகளை அன்புடனும், ஆதரவுடனும், பொறுப்புடனும், பெருமகிழ்ச்சியுடனும் மேய்த்து வந்தார். விசாரசருமரின் பராமரிப்பில் பசுக்கள் முன்னிருந்ததைவிட நல்ல வளத்தோடும், புஷ்டியோடும் இருந்தன. அது மட்டுமின்றி முன்னைவிட அதிகமாகப் பாலையும் சுரந்தன. அதுமட்டுமல்ல, ஆநிரைகளான அவைகள் விசாரசருமரை அடிக்கடி சென்று உராய்வதும் நாவால் நக்கிக் கொடுப்பதுமாக இருந்தன. புல் மேயும் இடத்தில் விசாரசருமர் வெயிலில் நின்று கொண்டிருந்தால் இவைகள் கூட்டமாகச் சென்று நின்று அவருக்கு உட்காருவதற்கான நிழலைத் தரும். சில சமயங்களில் கன்றைக் கண்ட தாய் பசு, பால் சுரப்பது போல் விசாரசருமரைப் பார்த்ததும் ஆவினங்கள் பால் பொழியும். தனது அரு‌கே வந்து பசுக்கள் பால் பொழிவதைக் கண்ட விசாரசருமர் அப்பாலை வீணாக்காமல் பரமன் இறைவழிபாட்டிற்குப் பயன்படுத்தினால் என்ன? என்று எண்‌ணலானார். அத்தி மரத்தடியில் குளிர்தரும் நிழலைக் கண்டார். ஆண்டவனுக்கு அநத இடத்திலேயே கோயில் ஒன்றை அமைக்கச் சித்தம் கொண்டார். மண்ணியாற்றங்கரை ஓரத்திலிருந்து நல்ல மணல் எடுத்து வந்து லிங்கம் ஒன்றை வடித்தார்.

மண்ணாலே மதிற்சுவர்ளோடு கூடிய சிறு கோயிலைக் கட்டினார். கோபுரமும் அமைத்தார்.  மணமிகுந்த நறுமலர்ச் செடி‌களையும், கொடிகளையும் அழகிற்காகக் கொண்டு வந்து வைத்தார். அக்கோயிலையும் சிவலிங்கத்தையும் பார்த்து ஆனந்தக் கூத்தாடினார். அவர் உடம்பிலே பக்தி வெள்ளம் பெருகியது. அவர் சிந்தை மகிழ்ந்தார். அடுத்தாற்போல் பரமனுக்கு பூஜையும், அபிஷேகமும் செய்ய வேண்டுமென்று எண்ணினார். அர்ச்சனைக்காக மலர்களைப் பறித்துக்கொண்டு வந்தார். அபிஷேகம் செய்வதற்காகப் பாலைப் புதிய பாண்டங்களில் ‌சேமித்தார். வேதம் ஓதி அபிஷேகம் செய்தார். 

மலர்களால் சிவலிங்கத்தை அன்போடு அர்ச்சனை செய்தார். சேய்ஞ்ஞலூர் அரனாரை முருகன் வழிபட்டாற்‌பால் மண்ணியாற்றங்கரை லிங்கத்தை இன்று விசாரசருமர் வழிபட்டார். இந்த வழிபாடு தினந்தோறும் தவறாமல் நடந்து வந்தது. இவர் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் பாலும் அர்ச்சனை செய்யும் மலரும் சேய்ஞ்ஞலூர் பரமனின் பாதாரவிந்தங்களை அடைந்தது. அரனார் அந்தணச் சிறுவரின் அன்பிற்குக் கட்டுப்பட்டார். பெரிய திருக்‌கோயிலிலே எழுந்தளருளியிருந்த எம்பெருமான் மண்ணியாற்றங்கரையிலுள்ள இச்சிறு மண்கோயிலிலும் எழுந்தருளினார். இறைவன் வழிபாட்டிற்கு பால் சுரக்கும்  ஆநிரைகள் வீட்டிற்குச் சென்ற பிறகும் கூட சற்றும் குறைவின்றி முன்னைவிட அதிகமாகவே பாலைப் பொழிந்தன. ஒருநாள் விசாரசருமர் வழக்கம்‌போல் பாலைக் குடம் குடமாக லிஙகத்தின் மீது அபிஷேகம் செய்வதும் மலர்களைக் கொட்டி அர்ச்சனை செய்வதுமாக இருந்தார். இவரது ஒவ்வொரு செயலையும் நெடுநேரமாக நின்று கவனித்துக் கொண்டிருந்த அறிவிலியொருவன், வேகமாக இவரிடம் வந்து என்ன காரியம் செய்கிறாய் ? உன்னை நம்பி மாடு மேய்க்க அனுப்பினால் நீ மாட்டின் பாலை எல்லாம் வீணாக்குகிறாயே. 

இது அடுக்குமா என்று கேட்டான். அவன் வார்த்த‌கைள் இவரது காதுகளிலே விழவே இல்லை. எப்படி விழும் ? இவர்தான் ஐம்புலன்களையும் அடக்கி அருந்தவசியைப்போல் இறை வழிபாட்டில் ஈடுபட்டிருக்கிறாரே ! விசாரசருமர் மவுனம் சாதிப்பது கண்டு ஆத்திரம் அடைந்த அவன் அக்கணமே ஊருக்குள் சென்று தான் மண்ணியாற்றின் கரையி‌லே கண்ட காட்சியைப் பற்றி அனைவரிடமும் கூறினான். அனைவருக்கும் சினம் பொங்கியது. எச்சத்தனிடம் சென்றனர். விஷயத்தை விளக்கி மகனைக் கண்டிக்குமாறு கூறினர். எச்சத்தன் கடு்ம் கோபம் கொண்டான். மகனைக் கண்டிப்பதாகச் சொல்லி அவர்களை அனுப்பிவைத்தான் மகனின் செயலை மறைந்திருந்து காண்பது என்‌ற தீர்மானத்திற்கு வந்தான் எச்சத்தன். மறுநாள் காலை விசாரகுமார் வழக்கம்‌போல் ஆவினங்களை ஓட்டிக்கொண்டு மண்ணியாற்றின் கரைக்குப் புறப்பட்டார். எச்சத்தன் மகன் அறி‌யாதவாறு பின்னால் தொடர்ந்து சென்றார். மண்ணியாற்றின் கரையை அ‌டைந்த எச்சத்தன் அங்குள்ள ஒரு குரா மரத்தில் மீது ஏறி மறைவாக அமர்ந்து கொண்டான். விசாரசருமர் வழக்கம்போல் மண்ணியாற்றில் நீராடி நமசிவாய மந்திரம் ஜபித்து திருவெண்ணீறு பூசி மலரைக் கொய்துகொண்டு பச்சிலைகளையும் பறித்துக் கொண்டு வந்தார்.

மண்ணால் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்தார். குடம், குடமாகப் பாலைக் கொண்டுவந்து வைத்துக் கொண்டார். வழிபாட்டைத் தொடங்கினார். விசாரகுமார் பக்தியில் ஈடுபட்டுத் தம்மை மறந்தார். உல‌கம‌ே அவரது கண்களுக்கு மறைந்தது. ஜோதி உள்ளம் அன்பினால் ‌பொங்கித் ததும்பி நின்றது. பாற்குடங்களில் பால் நுரையோடு பொங்கி வழிந்து இருப்பதுபோல் ! விசாரசருமர், ஆவாகனம் முதலிய வழிபாட்டு முறையை வகையோடு செய்யத் தொடங்கினார். பசுவின் பாலை ‌எடுத்துக் திருமஞ்சனம் ஆட்டத் தொடங்கினார். மகனின் வழிபாட்டு முறையைப் பார்த்துக் கொண்டிருந்த எச்சத்தனுக்குக் கோபம் எல்லை மீறியது. உலக மாயையிலே மூடிக்கொண்டிருந்த அவனுக்கு அகக்கண்களும் மூடிக்கிடந்தன. பிள்ளையின் பக்திப் பண்பினை அறிய முடியாத எச்சதத்தன் ஆத்திரத்தால் அறிவிழந்தான். சினத்தால் பொங்கி எழுந்தான். மரத்திலிருந்து குச்சியை ஒடித்து எடுத்துக்‌ கொண்டான். தலைக்கேறிய மமதையால் மரத்தினின்றும் வேகமாக இறங்கினான். கோலால் மகனின் முதுகில் ஓங்கி ஓங்கிப் பல தடவைகள் அடித்தான் எச்சத்தன் ! விசாரசருமருக்கு அடிபட்டும் எவ்வித உணர்வும் ஏற்படவில்லை. 

பூஜையிலேயே தம்மை மறந்து இருந்தார். எச்சத்தன் அடித்ததோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவன் வாயினின்றும் வசைச் சொற்கள் பல வரம்பு மீறி வெளிவந்தன. இவையெல்லாம் விசாரசருமர் காதுகளில் விழுந்தால்தானே! விசாரசருமர் தந்தையின் இடையூறுளைச் சற்றும் உணராத நிலையில், பூசையைத் தொடர்ந்து செய்து தள்ளினான். எச்சத்தனுக்கு மகனின் செயல் மேலும் ‌‌கோபத்தை உண்டுபண்ணியது. பால் நிரப்பி வைத்திருந்த திருமஞ்சனப் பாற்குடங்களைக் காலால் உதைத்துத் தள்ளினான். அதுவரை பூஜையில் மெய்மறந்திருந்த பக்தர், திருமஞ்சனக் குடப் பாலைக் கொட்டிக் கவிழ்த்தது கண்டு கோபம் கொண்டார். வழிபாட்டிற்குக் குத்தகமாக இத்த‌கைய நெறி தவறிய செயலைக் ‌செய்தது தந்தைதான் என்பதை உணர்ந்தும் சிவ அபவாதம் செய்த அவரைத் தண்டித்தார். அருகே கிடந்த கோலை எடுத்து குடங்களை உதைத்துத் தள்ளி தந்தையின் கால்களை நோக்கி வீசினார். அக்கணமே கோலும் மழுவாக மாறியது. எச்சத்தன் கால்கள் துண்டுபட்டு நிலத்தில் விழுந்தன. எச்சத்தன் உயிரை இழந்தான். இதுவரை நடந்தவற்றைப் பற்றி ஒன்றுமே தம் புலன்களுக்குப் புரி‌யாத நிலையில் இருந்த விசாரசருமர் மீண்டும் சிவ வழிபாட்டில் ஈடுபடலானார். அவ்வமயம் வானவெளியில் பேரொளி பிறந்தது. ஒளி நடுவே, ஒளிப்பிழம்பாக இறைவன் உமாதேவியுடன் விடையின் மேல் எழுந்தருளினார். 

பக்தியால் உலகை மறந்திருந்த விசாரசருமர் பேரொளிப் பிழம்பாக காட்சியளித்த பரமனைப் பார்த்ததும் பேருவகை கொண்டார். கரம்கூப்பி நிலந்தனில் விழுந்து வணங்கி எழுந்தார். வானத்தினின்றும் வையகத்துக்கு எழுந்தருளிய பரமசிவனும், பார்வதியும் விசாரசருமர் வாரி அணைத்து, உச்சிமோந்து மகிந்தனர். இறைவன் அன்பு மேலிட அவரைத் தழுவி மகனே! எம்மீது பூண்டுள்ள அன்பின் மிகுதியால் பெற்றவன் என்றும் பாராமல் மழுவால் வீழ்த்திய உன் எல்லையில்லா பக்திக்கு யாம் கட்டுப்பட்டோம். உனக்குத் தந்தையும் நானே, தாயும்நானே ! என்று திருவாய் மலர்ந்தார். விசாரசருமரின் கண்களிலே ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அம்மையப்பரின் அரவணைப்பிலே அந்தணர் குல மைந்தார் சிவப் பழமானார். எம்பெருமான் விசாரசருமருக்கு அருள் செய்தார். நம் அடியார்களுக்கெல்லாம் தலைவனாகிவிட்டாய் நீ ! நாம் சூடுவனவும், உடுப்பனவும், உண்ணும் பரிகலமும் உனக்கே உரிமையாகும்படிச் செய்தோம். உனக்கு சண்டீசபதம் வழங்கினோம் என்று அருளினார் பெருமான் ! இறைவன் தம் திருமுடியிலிருந்த கொன்றை மலர் மாலையை எடுத்தார். அன்புச் சிறுவனின் கழுத்தில் தம் திருக்கைகளாலேயே அணிவித்தார். 

சண்டிசபதம் என்பது ஒரு பதவி. எம்பெருமான், உமாதேவியார், விநாயகர், முருகவேல், சூரியன் ஆகிய இவர்களுக்கெல்லாம் தனித்தனியே சண்டீச பதம் உண்டு. சண்டீசபத பதவியில் உள்ளவர்கள் அந்தந்த மூர்த்திகளை, வழிபடுவோர்க்கு அவ்வழிபாடுகளின் பயனை அளித்து அருள் புரிவார்கள். சிவ சண்டீசபதத்தில் இருப்பவர் தொனிச் சண்டர் எனத் திருநாமம் பெறுவர். உருத்திரருடைய கோபாம்சத்தில் தோன்றியவரே சண்டேசுரர். (சண்டம்-கோபம்) எச்சத்தன் தான் செய்த அபசாரத்துக்குரிய தண்டனையைத் தன் மகன் கையாலேயே பெற்று, பின்னர் அவனால் பாவம் நீங்கி, சிவலோக பிராப்திøய அடைந்தான். விசாரசருமர் மகேசுவரனிடம் திருவருள் அணைப்பிலே என்றும் அவரது மைந்தராய் தோன்றிப் பிறவாப் புகழ் பெற்று இறைவனது திருவருட்தாளினை அடைந்தார்.

குருபூஜை


சண்டேசுர நாயனாரின் குருபூஜை தை மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

அம்மையான் அடிசண்டிப் பெருமானுக்கு அடியேன்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top