சிவபுராணம் பாடல் 4ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்

அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்

சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை

முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்

 

பொருள்:


அடங்காத இன்பம் அருளும் கருணையின் மலை போன்றவனுக்கு போற்றுதல்கள்.

சிவபெருமான் என்னுடைய சிந்தையில் பெருங்கருணையால் வந்திருக்கின்ற காரணத்தால்

அவனுடைய திருவருளே துணையாகக் கொண்டு அவனுடைய திருவடியை வணக்கம் செய்து

உள்ளம் மகிழும் வண்ணம் சிவபுராணமாகிய இதனை

முன் செய்த வினைகள் எல்லாம் தீரச் சொல்லுகின்றேன்.


 குறிப்பு:


"சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்ற இவ்வரிகள் அன்பினால் நிறை நிற்கின்ற அடியவர்க்கு மட்டுமல்லாது தத்துவம் விரும்புவோருக்கும் பெரும்பொருள் வாய்ந்தது. திருவாசகத்தில் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் கருத்து, "இறைவன் தானே வந்து ஆட்கொள்கிறான்." கட்டுண்டு தவிக்கும் பசுக்களாகிய நம் எல்லா உயிர்களின் பொருட்டு அரியவனாகிய இறைவன் எளிமையாக நிற்பது சித்தாந்தத்தில் காண்க.

அவ்வாறு எளிமையாக வந்திருக்கும் இறைவனைத் தொழுவதற்கும் அப்பெருமானுடைய அருளையே துணையாகக் கொண்டாலேயே அது முடியும். (அருளே துணையாக ... அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோமே - சம்பந்தர்)


திருச்சிற்றம்பலம் !!!

Post a Comment

Previous Post Next Post