சிந்தாமணி வைத்தீஸ்வரன் கோவில்

0
பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தினைச் சார்ந்த, சிந்தாமணி வைத்தீஸ்வரன் கோவில்.

சிக்கலான நோய் தீர்க்கும் சிந்தாமணி வைத்தீஸ்வரர் கோவில்

அம்மனின் பாதங்கள் கொண்ட கோவில், சோழப்பேரரசியின் பெயரால் உருவான திருத்தலம், சித்தர் சமாதி கொண்ட கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தினைச் சார்ந்த, சிந்தாமணி வைத்தீஸ்வரன் கோவில்.

இந்த இறைவன் முன்காலத்தில் குலோத்துங்கச் சோழீஸ்வரமுடைய மகாதேவன் என்று அழைக்கப்பட்டதாக குறிப்புகள் சொல்கின்றன.

தினசிந்தாமணி என்ற பேரரசியின் பெயரால் அழைக்கப்பட்ட இவ்வூர், இன்று ‘சிந்தாமணி’ என்று வழங்கப்படுகிறது.

முதலாம் குலோத்துங்கசோழனின் பேரரசி மதுராந்தகி. இவளுக்கு தினசிந்தாமணி என்ற பட்டப் பெயர் வழங்கப்பட்டது. இவளின் பெயரால் சோழமன்னன் உருவாக்கிய தலமே இன்றைய சிந்தாமணி

ஆலயஅமைப்பு


ஊரின் கடைக்கோடியில் வயல்வெளிகள் சூழ இயற்கையான சூழலில் ஆலயம் அமைந்துள்ளது. சுற்றுச் சுவர், ராஜகோபுரம் ஏதுமில்லை என்றாலும், விசாலமான இடத்தில் ஆலயம் உள்ளது.

உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் வேம்பும், அரசும் காணப்படுகின்றன. அருகே விஸ்வரூப அனுமன் வணங்கிய நிலையில் காட்சிதருகிறார்.

அருகே, நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது. சற்று நடந்ததும், அம்மன் சன்னிதி தனிச் சன்னிதியாக கிழக்கு முகமாய்க் காட்சியளிக்கிறது.

அன்னை தையல்நாயகி என அழைக்கப்படுகின்றாள். சன்னிதியின் எதிரில் அம்பிகையின் பாதக் கமலங்கள் தனி பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளன.

இதனைக் கடந்த பின் சுவாமி சன்னிதி வருகிறது. பெரியநந்திதேவர் இறைவனை நோக்குகிறது. மகாமண்டபம் கடந்ததும், கருவறை முன்மண்டபம், கருவறையில் வட்ட வடிவ ஆவுடையாரில் நீண்ட லிங்கத் திருமேனியராக இறைவன் காட்சிதருகின்றார்.

குலோத்துங்கச் சோழீஸ்வரமுடைய மகாதேவரின் இன்றைய பெயர் வைத்தீஸ் வரர். இங்கு வரும் பக்தர்களின் பிணிகளைத் தீர்ப்பதால் இந்த திருநாமத்தைப் பெற்றுள்ளார்.

இந்தத் திருமேனியும், கோட்டத்தில் அமைந்துள்ள திருமேனிகளும், சுவாமி சன்னிதியும் மட்டுமே பழமையைப் பறைசாற்றும் விதத்தில் அமைந்துள்ளன.

இவ்வாலயத்தின் சிறப்பு, இங்கு வடிக்கப்பட்டுள்ள சிலா வடிவங்கள அனைத்தும் கலைநயத்தினை வெகு நேர்த்தியாக வெளிப்படுத்துவதாகும்.

நர்த்தன விநாயகர், ஊர்த்துவத் தாண்டவம், தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர், அடிமுடிதேடும் காட்சி, பிரம்மன், அம்மையப்பன், துர்க்கை, காலபைரவர் போன்ற சிலா வடிவங்கள் வெகுசிறப்புடன் அமைந்துள்ளன. இவை சோழ மன்னர்களின் காலத்தை உறுதி செய்கின்றன.

இது தவிர விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான் சன் னிதிகளும் அமைந்துள்ளன. இந்த முருகப்பெருமானை வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும் என்கிறார்கள்.

சித்திரகுப்தர், விசித்திரகுப்தர் சன்னிதி சிறிய அளவில் உள்ளது. இவர்கள் எமபயம் போக்கி, உடல்நலம், தருபவர்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

ஆலயத்தின் தல விருட்சம் மகிழ மரம். ஆலய தீர்த்தம் திருக்கோவிலின் ஊறல் குளம். இத்தல இறைவனையும், இறைவியையும் வணங்கினால், சிக்கலான நோய்கள் கூட விலகி விடுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்தக் கோவிலில் பிரதோஷம், பவுர்ணமி, ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரங்களில் துர்க்கை பூஜை, கார்த்திகை சோமவாரம், மகாசிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், தைப்பூசம், பங்குனி உத்திரம் பால்குட விழா என அனைத்து விழாக்களும் சிறப்புடன் நடத்தப்படுகின்றன.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

சித்தர் பீடம்


ஆலயத்தின் ஈசான்ய மூலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கே ஐக்கியமான ஒரு சித்தரின் சமாதி அமைந்துள்ளது.

இவரின் மீது பஞ்சபூதேஸ்வரர் திருமேனியும், ஞானவிநாயகர், நாகங்கள் திருமேனியும், அரசமரமும், வேப்பமரமும் அமைந்துள்ளன.

இவரை பவுர்ணமி தினத்தில் வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இவரை வணங்கும் போது பலவித வாசனைகள் வருவதைச் சிலரால் மட்டுமே உணர முடியும் என்று கூறுகிறார்கள்.


அமைவிடம்


விழுப்புரம் - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரத்திற்கு தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவில் சாலையோர ஊராக சிந்தாமணி அமைந்துள்ளது. விழுப்புரம், திண்டிவனத்தில் இருந்து எண்ணற்ற பேருந்து வசதி உள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top