ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து செல்வங்களை அள்ளித்தரும் அக்ஷய திருதியை பற்றிய பகிர்வுகள் :
ஹே விளம்பி வருடம் சித்திரை மாதம் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அக்ஷய திருதியையாகும். இந்துக்கள் தமது வாழ்வின் ஒவ்வொரு விடயத்தையும் நல்ல நாள், நட்சத்திரம் என்று பார்த்து ஆரம்பிப்பர். அந்தவகையில் செல்வச் செழிப்பை வழங்கும் நாளாக அக்ஷய திருதியை கருதப்படுகின்றது.
அக்ஷய திருதியை மிகவும் புனிதமான நாள் என்றும் அந்நாளில் செய்யும் தான தருமங்கள் ஏழு பிறவிக்கு தொடரும் என்றும் ஸ்வர்ண தானம் மிகவும் உயர்ந்தது என்றும் கருதுகின்றனர்.
இந்நாளில் பசு, தயிர், பால் போன்றவற்றையும் தானமாக அளிக்கலாம். அக்ஷ| என்ற சொல் அழிவற்றது. அதாவது நிலையானது என்பதாகும். மிகவும் ஆக்கபூர்வமான செயலை ஆரம்பிக்கும் போது அல்லது பெறுமதி மிக்க பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அது வெற்றியைத் தேடித்தரும் அல்லது அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தைத் தரும் என்பது நம்பிக்கையாகும்.
அக்ஷய திருதியையின் போது தங்க ஆபரணங்களைக் கொள்வனவு செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகவுள்ளது.
விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமனின் ஜனன தினமாக இந்த நாள் நம்பப்படுகிறது. மக்கள் இத்தினத்தில் விஷேட பூஜைகளை நடத்துவதுடன் விநாயகர் மற்றும் தேவி லட்சுமியையும் வணங்குவர்.
மகாபாரதத்தில் பாண்டவர்கள் மிகவும் வறுமையில்; துன்புற்ற வேளை கிருஷ்ணர் அள்ள அள்ளக் குறையாத அக்ஷய பாத்திரத்தை வழங்கியதே இத்தினத்தின் வரலாறு என்று கூறப்படுகின்றது.
நன்றி.