1.காளிகாம்பாள் ஆலயம் மிகப் பழமையானது. மட்டுமின்றி வரலாற்று சிறப்புடையதாகவும் திகழ்கிறது.
2. ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டி ருப்பதால் இத்தலத்தில் நீங்கள் செய்யும் எல்லா வேண்டுதல்களும் குறைவின்றி வெற்றி பெறும்.
3. தற்போதுள்ள ஆலயம் 1639-ம் ஆண்டு விஸ்வகர்மா குலத்தவரால் கட்டப்பட்டு, இன்றும் சீரும், சிறப்புமாக பரிபாலனம் செய்யப்பட்டு வருகிறது.
4. சிதம்பரத்தில் வழிபட்டால், திருவண்ணாமலையை நினைத்தால், காளையார் கோவிலில் காலடி எடுத்து வைத்தால், திருவாரூரில் பிறந்தால் மோட்சகம் கிடைக்கும் என்பார்கள். அது போல பாரிமுனை காளிகாம்பாள் தலத்தில் குங்குமம் பிரசாதம் பெற்றாலே வாழ்வில் உயர்வும், மோட்சமும் கிடைக்கும்.
5. காளிகாம்பாள் கோவிலுக்கு செல்லும் போது அவசரப்பட்டு வழிபாடுகளை செய்யாதீர்கள். ராஜகோபுரம், நடராஜ மண்டபம், காயத்ரி மண்டபம் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. நின்று நிதானமாக ரசித்து பார்த்து வரலாம்.
6. காளிகாம்பாள் மகாலட்சுமியையும், சரஸ்வதியையும் தன் இரு கரங்களாக பெற்றிருப்பதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
7. காளிகாம்பாள் ஆலயத்தின் பரிவார தேவதை கடல் கன்னியாகும்.
8. காளிகாம்பாள் ஆலயம் கிழக்கு நோக்கி உள்ளது. அம்பாள் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறாள்.
9. ஆதிபராசக்தி தன்னை பல சக்திகளாக தோற்றுவித்த சித்தாடல் செய்து வருகிறாள். அந்த அபூர்வ சக்திகளுள் ஒருவளே அன்னை காளிகாம்பாள்.
10. காளிகாம்பாளின் அவதாரம் நீலியாய், சூலியாய், காளியாய் உருவகப்படுத்தப் பட்டுள்ளது.
11. காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம், தும்பட்டம், வீண் பெருமை, தன்நிலை உணராமை போன்றவற்றை காளிகாம்பாளை வழிபட, வழிபட நம் மனதில் இருந்து நீங்கச் செய்யலாம்.
12. அன்னை காளிகாம்பாளிடம் பாரதியார் போன்று உரிமையோடு பேசி மனதை பறி கொடுத்தால் நிச்சயம் அவள் பக்தர்களின் உள்ளத்தை பக்குவப்படுத்துவாள் என்பது நம்பிக்கை.
13. காளிகாம்பாள் அருள்புரியும் இத்தலத்தில் இந்திரன், குபேரன், விராட் புருஷனான ஸ்ரீ விஸ்வகர்மா ஆகியோர் போற்றி துதித்துள்ளனர்.
14. காளிகாம்பாள் அவதரித்த இடத்தை நம் முன்னோர்கள் "சொர்ணபுரி'' என்று பெயரிட்டு அழைத்து வந்தனர்.
15. நாகலோக கன்னிகளும், தேவலோக கன்னிகளும் அன்னை காளிகாம்பாளை வழிபட்டு பூர்வ ஜென்ம புண்ணியங்களை அடைந்தனர்.
16. காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பன்றிமலை சுவாமிகள், காயத்ரி சுவாமிகள், தவத்திரு ராமதாசர் உள்பட பல மகான்கள், ஆன்மீகப் பெரியோர்கள் காளிகாம்பாளை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.
17. பவுர்ணமி தோறும் இரவு 7 மணிக்கு அம்பாளுக்கும், ஸ்ரீ காயத்ரி தேவிக்கும் கூட்டு வழிபாடும், பூஜையும் நடைபெறும்.
18. இத்தலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5 மணிக்கும், ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கும் சிறுவர்களுக்கான நீதி போதனை மற்றம் ஆன்மீக வகுப்பு இலவசமாக நடைபெறும்.
19. காளிகாம்பாள் கோவிலில் 9 வெள்ளிக்கிழமைகள் ஆடித்திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
20. இத்தலத்தில் வெள்ளிக்கிழமை தோறும் கன்னி பூஜை, கோ பூஜை, திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.
21. இத்தலத்தில் நடைபெறும் சுவாசினி பூஜை சிறப்பு மிக்கது. இந்த பூஜை சுமங்கலிகளுக்கு விசேஷ அருள் தருவதாகும். இதற்காகவே சென்னையில் வேறு எங்கும் இல்லாதபடி இத்தலத்தில் "சுவாசினி சங்கம்'' அமைக்கப்பட்டுள்ளது.
22. இத்தலத்தில் அமாவாசை தோறும் ஸ்ரீகாயத்ரி தேவிக்கும், விஸ்வ பிரம்மத்துக்கும் விஸ்வகர்ம வழிபாட்டுக் குழு சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
23. காளிகாம்பாள் மொத்தம் 12 அம்சங்களைக் கொண்டவள். அதில் ஒரு அம்சம், காஞ்சீபுரத்து காமாட்சி அம்மனாகும்.
24. இத்தலம் இரு பிரகாரங்கள் கொண்டது. உள் பிரகாரத்தில் அருணாசலேஸ்வரர், நவக்கிரகங்கள், வள்ளி-தெய்வானை சமேத முருகர், ஸ்ரீ வீரபகாமங்கர், அவர் சீடர் சித்தையா, ஸ்ரீ கமடேஸ்வரர், ஸ்ரீதுர்கா, ஸ்ரீ சண்டிமகேஸ்வரர், பைரவர், பிரம்மா, சூரிய-சந்திரர்கள் உள்ளன. வெளிப்பிரகாரத்தில் சித்தி விநாயகர், கொடி மரம், வடகதிர்காம முருகன், ஸ்ரீசித்தி புத்தி விநாயகர், ஸ்ரீகாயத்ரி, ஸ்ரீதுர்கா, யாகசாலை, ஸ்ரீநடராசர், ஸ்ரீமகாமேரு, ஸ்ரீவீரபத்திர மகா காளியம்மன், ஸ்ரீ நாகேந்திரர், ஸ்ரீவிஸ்வ பிரம்மா சன்னதிகள் அமைந்துள்ளன.
25. திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் ஸ்ரீ காளிகாம்பாள் கருவறையில் உள்ள மூலவருக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து, அந்த மஞ்சளை பயன்படுத்தி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.
26. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை பழம் தீபம் ஏற்றி வழிபடுவது கூடுதல் நன்மை தரும்.
27. இத்தலத்தில் மேற்கு நோக்கிய நிலையில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயரை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.
28. இத்தலத்தில் தம்புச் செட்டித் தெருவில் உள்ள கிழக்கு கோபுர வாசல், "குண வாயில்'' என்றும், அரண்மனைக்காரன் தெருவில் உள்ள மேற்கு கோபுர வாசல் "குட வாயில்'' என்றும் அழைக்கப்படுகிறது.
29. சைவம், வைணவம், சாக்தம், கவுமாரம், காணபத்யம், சவுரம் ஆகிய 6 சமயங்களுக்கும் பொதுவானவளாக காளிகாம்பாள் இயங்குகிறாள்.
30. இத்தலம் சிவனும்-சக்தியும் அருள்பாலிக்கும் தலமாக கருதப்படுகிறது.
31. இத்தலத்தின் உற்சவர் பெயர் பெரிய நாயகி.
32. காளிகாம்பாள் தலத்தில் உள்ள ஒவ்வொரு சன்னதியும், பகுதியும் வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது.
33. இத்தலத்தின் வடமேற்கு பகுதியில் அகோர வீரபத்திர சுவாமி உள்ளார். பவுர்ணமி தினத்தன்று அவருக்கு வெற்றிலை மாலை சார்த்தி வழிபட்டால் பில்லி, சூனியம், ஏவல் போன்றவை விலகி விடும்.
34. "உள்ளம் உருகுதய்யா... முருகா...'' என்று டி.எம்.சவுந்தராஜன் பாடிய பாடலை கேட்டிருப்பீர்கள். மிகவும் இனிமையான அந்த கந்தன் பாடலை இயற்றியவர் ஸ்ரீ ஆண்டவன் பிச்சி என்பவர் ஆவார். 1952-ம் ஆண்டு அவர் காளிகாம்பாள் கோவிலில் உள்ள வடசுதிர்காம முருகப்பெருமான் சன்னதி முன்பு அமர்ந்து இந்த பாடலை பாடினார்.
35. இத்தலத்தின் தல விருட்சமாக மாமாரம் உள்ளது.
36. வசந்த நவராத்திரியை முன்னிட்டு கடந்த 31.3.2014 முதல் 8.4.2014 வரை குங்கும லட்சார்ச்சனை நடந்தது. இந்த குங்கும லட்சார்ச்சனை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
37. காளிகாம்பாளை முறைப்படி தியானித்து வழிபடுபவர்கள் நிச்சயம் செல்வந்தர்கள் ஆகி விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
38. கோவிலின் வாசலில் இருக்கும் கிழக்கு ராஜகோபுரம் 1983-ம் ஆண்டு கட்டப்பட்டது.
39. இந்த கோவில் கடற்கரையில் இருந்த போது காளிகாம்பாள் மிகவும் உக்கிரமாணவளாக இருந்ததாகவும், தம்பு செட்டி தெருவுக்கு மாறிய பிறகு சாந்தம் ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
40. காளிகாம்பாலுக்கு "நெய்தல் நில காமாட்சி'' என்றும் ஒரு பெயர் உண்டு.
41. மச்ச புராணம், வாமன புராணம், கூர்ம புராணம், லிங்க புராணம், பவிஷ்ய புராணம் ஆகிய புராணங்களில் இந்த கோவில் பற்றி குறிப்புகள் உள்ளது.
42. இந்திரன், குபேரன், வருணன், வியாசர், பராசரர், அகத்தியர், ஆங்கீரேசர், புலஸ்தியர், விராட புருஷன் விஸ்வகர்மா ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர்.
43. புராணங்களில் இத்தலம் சொர்ணபுரி, பரதபுரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
44. இத்தலத்துடன் தொடர்புடைய சரித்திர சிறப்பு பெற்ற நிகழ்ச்சிகள் கோவிலில் அதை சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
45. இத்தலத்தில் வழிபட்டால் காஞ்சீபுரம் காமாட்சி அம்மனையும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.
46. சிவனுக்கும், பார்வதிக்கும் ஏற்பட்ட ஊடலை பிரதிபலிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா தரிசனம் முடிந்து சிவன்-பார்வதி திரும்பி வரும்போது, ஊடல் உற்சவம் நடத்தப்படுகிறது.
47. விராட புருஷ விஸ்வகர்மா சன்னதியில் வழிபடும் போது "ஓம் தேவ தேவ மகா தேவ விஸ்வப்பிரம ஜகத் குருவே நம'' என்று சொல்லி வழிபாடு செய்யலாம். 48. இத்தலத்தில் பூந்தேர், கிண்ணித்தேர், வெள்ளித் தேர் என்று மூன்று வகையான தேர்கள் உள்ளன.
49. இத்தலத்தில் மொத்தம் 33 பஞ்சலோக சிலைகள் உள்ளன. தொல் பொருள் ஆய்வுத் துறையினர் இதை பதிவு செய்துள்ளனர்.
50. இந்த கோவில் உள்ளது போன்று இந்தியாவில் வேறு எங்கும், எந்த தலத்திலும் கிண்ணித் தேர் இல்லை.
51. தினமும் இரவு இத்தலத்தில் நடக்கும் அர்த்த ஜாம பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது.
52. அம்பாள் முன்பு அனைவரும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் இவ்வாலயத்தில் தரிசனத்துக்காக யாரிடமும் சிறப்பு கட்டணம் வசூலிப்பது இல்லை. யாராக இருந்தாலும் வரிசையில் வந்துதான் அம்பாளை வழிபட வேண்டும்.
53. இத்தலத்தில் பக்தர்கள் யாரும் இரவில் தங்க அனுமதிக்கப்படுவதில்லை.
54. சமீபத்தில் இத்தலத்துக்காக அருகில் உள்ள மூன்று மனைகள் சுமார் ரூ.2 கோடி மதிப்பில் வாங்கப்பட்டன. அந்த இடத்தில் தற்போது ஆலய விஸ்தரிப்புப் பணி நடந்து வருகிறது.
55. தினமும் இத்தலத்தில் மூன்று கால பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
56. மற்ற மாதங்களை விட கார்த்திகை மாதம் இத்தலத்தில் கோலாகல பூஜைகள் நடத்தப்படும். அதுவும் காளி பிறந்த தினமான கார்த்திகை அமாவாசை தினத்தன்று காளி ஜெயந்தி விழா மிக சிறப்பாக நடைபெறும்.
57. இத்தலம் தோன்றி சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர்.
58. தமிழ்நாட்டில் இருந்து மட்டுமின்றி வெளி நாடுகிளல் இருந்தும் பலர் இத்தலத்துக்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள்.
59. காளிகாம்பாள் சன்னதி முன்பு 12 கால் மண்டபம் இருக்கிறது. அந்த மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தால் மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
60. சன்னதி முகவரி :
212 ,தம்புச்செட்டி தெரு, மண்ணடி, ப்ராட்வே, சென்னை-1