விநாயகர் ஆவணி மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரும் சதுர்த்தி திதியில் அவதரித்தார். இந்த நாளே ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.
நாம் எந்தச் செயலைச் செய்தாலும் அவை வெற்றிகரமாக முடிய வேண்டும் என்பதற்காக முதலில் வணங்கப்படும் முழு முதற் கடவுள் விநாயகப் பெருமான். ஒரு கொம்பு, இரு செவிகள் கொண்டு, மூன்று திருக்கரங்கள், நான்கு திருத்தோள்கள் என முழுமையாகத் தோன்றி, ஐந்து திருக்கரங்கள், ஆறெழுத்து மந்திரம் என அமைப்பாகக் கொண்டு விளங்குபவர் விநாயகப் பெருமான்.
மிருக வடிவத்தில் முகம் கொண்டு தேவ வடிவத்தில் உடல் கொண்டு, பூதக்கணங்களின் வடிவமாகக் கால்கள் கொண்டு காட்சி தரும் இவருக்கு அகிலம் போற்றும் அனைத்துத் தெய்வங்களின் "அம்சம் " யாவும் உருவமாக அமைந்துள்ளது.
யானையின் தலை, துதிக்கை, காது இம்மூன்றும் சேர்ந்து "ஓம்" என்னும் பிரணவ மந்திரத்தை விளக்க வேண்டி ஓங்கார முகமுடையவராக திருக்காட்சி தருபவர் விநாயகப் பெருமான்.
விநாயகர் வழிபாடு அறியாமையை அகற்றும், அறிவைத் தூண்டும், கல்வியைப் பெருக்கும், செல்வத்தைக் கொடுக்கும். வலிமையை வழங்கும். சிவம் நிறைந்த வாழ்க்கையை உண்டாக்கி செம்மையாக சிறப்புறச் செய்யும். தொடங்கும் பணிகள் அனைத்திலும் வெற்றியைக் கொடுக்கும். விநாயகர் சதுர்த்தி அன்று குறைந்தபட்சம் 9 பிள்ளையார்களை தரிசனம் செய்வது மிகவும் நல்லது.
தெய்வ அம்சங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. விநாயகரின் உருவ அமைப்பில் இருக்கும் தத்துவம் ஐந்து பெரும் சக்திகளைக் காட்டுவதாகும். மடித்து வைத்துள்ள ஒரு பாதம் பூமியையும், சரிந்த தொந்தி நீரையும், அவரது மார்புப் பகுதி நெருப்பையும், இரண்டு புருவங்களின் இணைந்த அரை வட்ட வடிவம் காற்றையும், அவற்றின் நடுவே வளைந்துள்ள கோடு ஆகாயத்தைக் குறிப்பதாகவும் அமைகின்றது.
விநாயகர் பஞ்சபூத சந்திரன் அம்சமானவர் ஆவார். மனிதனின் மனதை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. மனிதனிடம் இருக்கும் விலங்கு குணம், குழந்தை மனம், அருள் தன்மை, பெருந்தீனி, முரட்டுத்தனம், மென்மையான குணம் போன்றவற்றையும் வெளிப்படுத்தும் உருவமாக இருக்கின்றார் விநாயகர்.
பல்வேறு வகையான விதத்திலும், பல பொருள்களினாலும் விநாயகரை பிரதிஷ்டைச் செய்வார்கள். சிலர் களிமண்ணாலும் விநாயகரை வடிப்பார்கள். விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடிவிட்டு, மூன்றாம் நாளிலோ அல்லது ஐந்தாம் நாளிலோ அல்லது அடுத்த சதுர்த்தி தினத்திலோ வழிபட்ட விநாயகரை பூஜை செய்து குளத்திலோ, நதியிலோ கரைத்து விடுகின்றனர். இதில், தெய்வீகத் தத்துவமும், மனித வாழ்க்கைத் தத்துவமும் மறைபொருளாக உணர்த்தப்பட்டு இருக்கிறது.
அதாவது, ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட விநாயகரை சில நியமங்களோடு தெய்வீக நிலைக்கு உயர்த்தி, பொன், பொருள், அபிஷேகம், ஆராதனைகள் செய்து நைவேத்தியம் படைத்து தியானித்து பின்னர் மீண்டும் ஐம்பூதங்களில் ஒன்றான நீரிலேயே கரைக்கின்றனர். இடையிலே தோன்றி, இடையிலேயே மறைந்து விடுகிறது. அதே போல், மனிதனின் வாழ்வும் இப்புவியான மண் மீது தோன்றுகிறது. பிறகு, அவனை (மனிதனை) பலரும் போற்றுகின்றனர். பொன், பொருளாலும், சுக போகங்கள் பெறுகின்றனர். என்றாவது ஒருநாள் உடம்பு மண்ணுக்குள் போகப்போகிறது. அல்லது தீயில் எரிந்து சாம்பலாகி நீரிலே கரையப் போகிறது.
எனவே ஞானமும், நற்கல்வியும், நற்செயல்பாடுகளாலும் உன்னை உயர்த்திக்கொள் என்பதை உணர்த்துவதாகும் விநாயகரின் வழிபாடு. களிமண் உருவ தத்துவம் மேலும் நற்பதவிகளும் கிடைக்கும். புற்று மண்ணால் செய்த பிள்ளையாரை வழிபட்டால் லாபம் கிடைக்கும். விநாயகர் சதுர்த்திக்குப் பூஜைக்கு உகந்த இலைகள். சிவனது பூஜைக்கு செய்யப்படும் அனைத்து இலைகளும், விநாயகரின் பூஜைக்கும் உகந்ததாக இருக்கிறது. வில்வம், அருகம்புல், கரிசலாங்கண்ணி, ஊமத்தை, துளசி, நாயுருவி, வின்னி இலை, செண்பகம், இலந்தை, மாதுளை, மரிக்கொழுந்து, ஜாதி மல்லி, வெள்ளருக்கு ஆகியவைகள் விநாயக சதுர்த்தி பூஜைக்கு உகந்த இலைகள் ஆகும்.