தானங்களில் சிறந்தது தானம் அன்னதானம். ஒருவரின் பசியைப் போக்குவது மிகப்பெரிய புண்ணியம்.
மகாளய பட்சத்தில் பித்ரு லோகத்தில் இருந்து நம்மைத் தேடி வரும் முன்னோர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுத்து அவர்களின் பசியைப் போக்குவதோடு பசியோடு இருக்கும் ஏழை மக்களுக்கு உணவு கொடுப்பதனால் நம்முடைய பல தலைமுறைக்கும் பசியின்றி உணவு கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.
பல தானங்களை செய்த கர்ணனையே பசிக்கொடுமை வாட்டியது. அதற்கு காரணம் கர்ணன் அன்னதானம் செய்யாதுதான் என்று கூறப்பட்டது. அது பற்றிய சுவையான கதை உள்ளது.
கர்ணனின் கொடைத்தன்மையை உலகம் அறியும். அதர்மத்துக்கு துணை போன துரியோதனனுடன் சேர்ந்திருந்ததால், அவனை அழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் கிருஷ்ணன். குருசேத்திர யுத்தத்தின் முடிவில், கர்ணன் இறக்க வேண்டும் என்பது விதி. இதற்காகவே அர்ஜுனனை தயார் செய்து கர்ணன் மீது அம்பு எய்ய சொன்னார் கிருஷ்ணன். ஆனால் அர்ஜூனன் விட்ட சில அம்புகளால் அவனைக் காயப்படுத்தினவே ஒழிய உயிரைப் பறிக்கவில்லை. அதற்குக் காரணம் கர்ணன் செய்த தர்மம்தான்.
அப்போது, அந்தணராக வேடமணிந்துவந்த கிருஷ்ணன் கர்ணன் செய்த தர்மங்களை அவனிடம் இருந்து தானமாக பெற்றார். அதற்காக, அவனுக்கு மோட்சம் அளித்தார். சொர்க்கம் சென்ற கர்ணனை உரிய மரியாதைகளோடு எமன் அவரை அழைத்துக் கொண்டார். யமன் கர்ணனிடம் நீ நிறைய புண்ணியங்களை செய்ததால் சொர்க்கத்தை நான்றாக அனுபவித்து கொள் என்றார்.
கர்ணனுக்கு பசி
கர்ணன் மகிழ்வுடன் சொர்கத்தை அனுபவிக்கிறார். சில காலம் கழித்து அவருக்கு பசிக்கிறது. தன்னுடன் உள்ளவர்களிடம் உணவு பரிமாறும் இடம் எங்கே என்று கேட்கிறார். சொர்க்க வாசிகள் திகைப்படைந்து, அவரிடம் இங்கிருப்பவர்களுக்கு பசிக்காது அதனால் உணவு உண்ணும் தேவையே இருக்காது என்கிறார்கள்.
பசி தீர்ந்தது
தேவ குரு பிரகஸ்பதி அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்தார். பின்னர் ஆழ்ந்த தியானத்தில் இதற்கான விடையை கண்டுபிடிக்கிறார். பிறகு கர்ணனிடம் வந்து கர்ணனின் ஆள்காட்டி விரலை சுவைக்க சொல்கிறார். கர்ணன் ஆள்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்துவிடுகிறது.
விரலுக்கு கிடைத்த புண்ணியம்
கர்ணன் மிகவும் ஆச்சரியப்பட்டான். இதற்கான காரணம் என்ன என்று குரு பிரகஸ்பதியிடம் கேட்க, அவரோ விளக்குகிறார் " கர்ணா, பிறப்பால் நீ ஒரு வள்ளல். நீ யார் எதை கேட்டாலும் உடனே கொடுத்து விட்டாய். ஆனால் நீ அன்னதானம் மட்டும் செய்யவில்லை, அதனால் தான் நீ இங்கே பசியை உணர்ந்தாய் என்றார். ஆள்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்து விட்டதே ஏன்? எனக் கேட்கிறார் கர்ணன். அதற்கு குரு, " கர்ணா, ஒரு முறை ஒரு ஏழை பிராமணர் உன் வீட்டிற்கு வந்து உணவு கேட்டார். நீ பொதுவாக அன்னதானம் செய்யும் வழக்கம் இல்லாததால் அதை மறுத்துவிட்டாய், ஆனால் உன் ஆள்காட்டி விரலால் அன்னதானம் நடக்கும் இடத்தை அந்த ஏழை பிராமணர்க்கு காட்டினாய். அவரும் அங்கே சென்று சாப்பிட்டு தன் பசியை ஆற்றிக்கொண்டார். அந்த புண்ணியம் உன் ஆள்காட்டி விரலில் இருந்ததால் நீ ஆள்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்து விட்டது என்று கூறினார்.
மகாளய பட்ச அன்னதானம்
கர்ணன் கண்களில் நீர் கசிந்தது. அடடா அன்னதானத்திற்கு இத்தனை புண்ணியம் இருக்கிறதா என்று நினைத்துக்கொண்டு உடனே எம தர்ம ராஜனிடம் சென்று வேண்டுகோள் வைத்தார். நான் ஒரு மனித உடலுடன் பூலோகம் செல்ல அனுமதி வேண்டும், நான் போய் அன்னதானம் செய்து விட்டு வருகிறேன் என்கிறார். எமதர்மராஜன் அனுமதிக்கிறார். கர்ணனும் பூலோகம் வந்து யாரும் அடையாளம் கண்டு கொள்ளாத இடத்தில் அன்னதானம் செய்கிறார். பதினைந்து நாட்கள் முடிந்தவுடன் யமன் மீண்டும் வந்து மனித உடலை துறந்து விட்டு சொர்கம் வர சொல்கிறார். கர்ணன் மகிழ்வுடன் செல்கிறார்.
எமன் மகிழ்ச்சி
கர்ணா, மனிதர்கள் பூலோகத்தில் உள்ள சுகங்களை அனுபவிக்கவே மீண்டும் மீண்டும் பூலோகம் வர வேண்டும் என்று கேட்பார்கள். ஆனால் நீங்கள் எதற்காக மனித உடலுடன் பூலோகம் வந்தீர்களோ அதை முழுமையாக முடித்து விட்டு, உங்கள் வார்த்தைகளை காப்பாற்றி விட்டீர்கள். நீங்கள் இப்போது ஒரு வரம் கேட்கலாம் என்கிறார் என்கிறார் எமன்.
அன்னதானம் செய்யவேண்டும்
கர்ணன் உடனே மகிழ்ச்சியடைந்தார், " எம தர்ம ராஜரே! மனிதர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, உணவு அளிக்க மறந்து விடுகிறார்கள். அதனால் இந்த பக்ஷத்தில் முன்னோர்களுக்காக செய்யும் திதி, மற்றும் அன்னதானம் கர்மங்கள் செய்ய சந்ததி இல்லாத முன்னோர்கள்களை கூட சென்று அடைய வேண்டும். கர்ம வினைகளால் பூமிக்கும் சொர்கத்துக்கும் இடையில் தவிக்கும் முன்னோர்களையும் இந்த பலன் சென்றடைய வேண்டும் என கேட்கிறார்." யமன் மகிழ்வுடன் ஒப்புகொள்கிறார். யார் இந்த பக்ஷத்தில் உணவு அளிக்கிறார்களோ அவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்.
முன்னோர்களுக்கு உணவு
சூரியனின் மைந்தர் கர்ணனே அன்னதானத்தின் மகிமையை உணர்ந்து பூமியில் வந்து தர்மம் செய்த மகாளயபட்ச காலத்தில், நாம் எல்லாருமே முன்னோர்களை வரவேற்று 14 நாட்களும் தர்ப்பணம் முதலானவை செய்ய வேண்டும். புண்ணிய தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். இந்த காலகட்டத்தில் வரும் பரணி, மஹாபரணி என்றும், அஷ்டமி, மத்பாஷ்டமி என்றும் திரயோதசி கஜச்சாயை என்றும் கூறப்படும் இந்தநாட்களில் தானம் கொடுப்பது சிறப்பு.
தலைமுறைக்கும் உணவு கிடைக்கும்
மாதந்தோறும் முன்னோர்களுக்கு அன்னதானம் செய்ய முடியாதவர்கள் இந்தக் காலத்தில் தனங்களைச் செய்வதால் பன்னிரண்டு மாதங்களிலும் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். கடைசி நாளான மகாளய அமாவாசையன்று முன்னோர்களுக்கு பிடித்தமான படையல் படைத்து, அதை ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். மகாளயபட்ச காலத்தில், நம் முன்னோருக்காக விரதம் இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், முன்னோரின் ஆசி நமக்கு கிடைக்கும். நம்முடைய பல தலைமுறைக்கு மட்டுமின்றி, உலகிலுள்ள பிறருக்கும் பசியின்றி உணவு கிடைக்கும் என்பது ஐதீகம்.