சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில், பைரவர் வடிவம் முக்கியமானது. பைரவருக்கு பல்வேறு தலங்களில் சன்னிதிகள் இருக்கின்றன. காசியில்தான் பைரவருக்கு தலைமைபீடம் அமைந்திருக்கிறது. அங்கு அவர் காலபைரவர் என்று போற்றப்படுகிறார். காரைக்குடி அடுத்த இலுப்பக்குடியில் சொர்ணாகர்ஷண பைரவர், சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் அஷ்ட பைரவர்கள், ஸ்ரீவாஞ்சியத்தில் யோக பைரவர் என்று சிறப்புமிக்க பைரவர் வழிபாட்டு தலங்கள் ஏராளம் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான், பைரவபுரம். இது அழிவிடைதாங்கி என்று அழைக்கப்படுகிறது.
கஷ்டங்களை போக்கும் சொர்ணகால பைரவர்
பழங்காலத்தில் இந்த ஊர் ‘அறவழித்தாங்கி’ என அழைக்கப்பட்டது. இந்த பகுதியை பல்லவர்களும் சோழர்களும் ஆட்சி செய்தபோது, இங்கு சைவ நெறி தழைத்தோங்கியது. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் வீர சம்புவராயன் என்ற மன்னர் இங்கு ஆட்சி செய்தான். அப்போது வடக்கே இருந்து யாதவராயன் என்ற மன்னன் படையெடுத்து வந்தான். இருவருக்கும் இடையே பெரும்போர் மூண்டது.
முதல் நாள் நடந்த போரில் சம்புவராயன் படைகள் சேதமடைந்தன. அன்று இரவு பைரவரை வேண்டி அடுத்த நாள் போரில் கலந்து கொண்டார். அடுத்தநாள் சம்புவராயன் பெரும் வெற்றி அடைந்தான். இந்த வெற்றியை அருளிய சொர்ண காலபைரவருக்கு பெரிய ஆலயம் ஒன்றை எழுப்பினான்.
இத்திருக்கோவிலில் வீற்றிருக்கும் பைரவர் தெற்கு நோக்கி காட்சிதருகிறார். இங்கே பைரவரின் எட்டு கோலங்களையும் சுதை வடிவில் தரிசிக்கலாம். பிராம்மி சக்தியுடன் அசிதாங்க பைரவர், மகேஷ்வரியுடன் ருரு பைரவர், கவுமாரியுடன் சண்ட பைரவர், வைஷ்ணவியுடன் குரோதண பைரவர், வராகியுடன் உன்மத்த பைரவர், இந்திராணியுடன் கபால பைரவர், சாமுண்டியுடன் பீஷண பைரவர், சண்டிகையுடன் சம்ஹார பைரவர் என அஷ்ட பைரவர்கள் அருள்கிறார்கள். ஆணவம் கொண்ட பிரம்மனின் ஐந்தாவது தலையை கொய்து நான்முகனாக ஆக்கினார், பைரவர். அந்த பிரம்மா வழிபட்ட தலம் இந்த ‘பைரவபுரம்’ என்கிறார்கள். நான்கு திருக்கரங்களில் சூலம், உடுக்கை, கத்தி, கபாலம் ஆகியவற்றை தரித்தவராக மூன்று கண் கொண்டவராக பைரவர் தரிசனம் தருகிறார்.
வெள்ளிக்கிழமை மாலை வில்வத்தினால் அர்ச்சனை செய்துவந்தால், வறுமை நீங்கும். ஏதாவது ஒரு தேய்பிறை அஷ்டமியில் விரதம் தொடங்கி, தொடர்ச்சியாக 11 தேய்பிறை அஷ்டமியில் செவ்வரளிப் பூ கொண்டு அர்ச்சனை செய்து வந்தால் குழந்தைபேறு கிடைக்கும். 7 மிளகுகளை துணியில் கட்டி, நல்லெண்ணைய் விட்டு தீபம் ஏற்றினால், இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில், பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்தால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். நவக்கிரக தோஷங்களும் விலகும்.
திருவண்ணமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே உள்ளது, அழிவிடைதாங்கி கிராமம். காஞ்சிபுரத்தில் இருந்து வெம்பாக்கம் வழியாக அழிவிடைதாங்கி வந்தடையலாம்.