நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மாசிமகம் பற்றிய பதிவுகள் :
17/02/2022 - வியாழக்கிழமை
மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய 3 தெய்வங்களுக்கும் உகந்த நாள் இந்த மாசி மாதத்தில் வரும் மாசிமகம்.
கும்ப ராசியில் சூரியன் இருக்கும் போது சந்திரன் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இந்நாளே மாசி பௌர்ணமியுடன் கூடிய மாசி மகமாக திகழ்கிறது.
உமா தேவியார் மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில்தான் தட்சணின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக இது கருதப்படுகிறது. பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது.
பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான்.
இந்நாள் முருகப் பெருமானுக்கும் உகந்த நாளாகும். அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் என்ற பெயரும் முருகனுக்கு உண்டு. இதற்கு காரணமான தந்தைக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளும் மாசி மகம்தான்.
இவ்வாறு முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள், தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது.
இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் நமது பாவங்களை போக்கும் என்பது ஐதீகம்.
12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் குடந்தை மகாமக தீர்த்தவாரி நடப்பதும் இந்நாளே. இந்த மகநாளில் நதி, கடல், குளம், புண்ணிய தீர்த்தங்கள், கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மை தரும். பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக் கடலில் இருக்கும் ஆன்மா, இறைவனது அருட்கடலை வேண்டும் நாளே மாசி மகத்தின் சிறப்பு.
இந்த நாளை "கடலாடும் நாள்" என்றும் "தீர்த்தமாடும் நாள்" என்றும் சொல்வார்கள்.
புண்ணிய இடங்களில் தீர்த்தமாட முடியாதவர்கள் விரதம் இருந்து கோயிலுக்கு சென்று உமாமகேஸ்வரனை தரிசிப்பர். தமிழகத்தை பொறுத்தவரை கும்பகோணத்தில் மாசி மகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வடஇந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். பிற ஸ்தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் சிறப்பு.
ஆண்டுதோறும் மாசி மகம் வந்தாலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் சிம்ம ராசியில் இருக்கும்போது வருவது மகா மகமாகும். அன்றைய தினம் மட்டும் பல லட்சம் பேர் மகாமக குளத்தில் நீராடுவர். மாசி மகம் பல்வேறு சிறப்புக்களை கொண்டது. இந்நாளில் மாணவர்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களை, குலதெய்வங்களை வணங்கி பாடங்களை படித்தால் அறிவு விருத்தியாகும்.
மந்திர உபதேசம் பெறுவதும் மிகவும் சிறப்பாகும். கல்வி தொடர்பான செயல்களை தொடங்க வேண்டும் என்றால் மாசி மகத்தில் தொடங்குவது நன்று.
தேவாரம், திருவாசகம், காயத்ரி மந்திரம், கந்த சஷ்டி கவசம் மற்றும் ஸ்தோத்திர பாடல்கள், ராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம், விஷ்ணு புராணம் போன்ற புத்தகங்களை படிப்பது பலன் கொடுக்கும். நம் முன்னோர்கள் தாய், தந்தையர் ஆகியோரை நினைத்து அன்னதானம், ஆடைதானம் செய்யலாம். இதனால் குடும்பத்தில் ஒற்றுமையும், சுபிட்சமும் நிலவும். மாசி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்தால் சகல பாக்யங்களும் ஏற்படும். வாடகை வீடு மாறவும் உகந்த நாள் இது.
மாசி மாத சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால் தடைகள் விலகும். குழந்தை பாக்யம் இல்லாதவர்கள், அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுபவர்கள் மாசி மகத்தில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டால் தோஷம் நீங்கி, குழந்தை பாக்யம் கிட்டும்.
திருச்செந்தூரில் மாசி மகம் மிகவும் பிரசித்தி பெற்றது. கடற்கரையில் முருகப் பெருமான் எழுந்தருளி தீர்த்தவாரி நடக்கும். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மெரினா கடற்கரையில் எழுந்தருளி அருளாசி வழங்குகிறார். கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் என ஈசனும், பெருமாளும் ஒன்றுகூடி எழுந்தருளி அருள்பாலிப்பது மிகவும் விசேஷம்.
மாசி மகம் வழிபாடும் சிறப்பும் :
மக நட்சத்திரம் பெருமாளுக்கு உகந்த நாள். நீர் நிலை உள்ள இடங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம். இப்படி தீர்த்தவாரிக்கு பெயர் பெற்ற 108 திவ்யதேசங்களில் ஒன்று மகாபலிபுரம். இங்கு மாசி மகத்தன்று நீராடுவது ராமேஸ்வரத்தில் நீராடிய பலனைத் தரும். இதற்குக் காரணமானவர் புண்டரீக மகரிஷிதான்.
திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பெருமாளின் காலடியில் அன்றலர்ந்த தாமரை மலரை வைத்து வணங்க வேண்டும் என்ற ஆவலில் இவர் மாமல்லை கடற்கரையில் மலரை வைத்துவிட்டு, பாற்கடலுக்கு வழி ஏற்பாடு செய்ய முயற்சித்தார். அதற்காக கடல்நீரை தொடர்ந்து இரைத்துக் கொண்டிருந்தார். இவரின் தளரா முயற்சியையும் தாளாத பக்தியையும் கண்ட திருமால் ஒரு முதியவராக உருக்கொண்டு முனிவரிடம் வந்து, எனக்கு பசியும் களைப்புமாக உள்ளது. ஊருக்குள் சென்று உணவு வாங்கி வாருங்கள். அதுவரை நானே கடல்நீரை உமக்காக இரைக்கிறேன் என்று அனுப்பினார். முனிவரும் உணவு வாங்கிவந்து பார்த்தபோது கடல் உள்வாங்கி இருந்தது. முதியவரைக் காணோம். அப்போது ஒரு குரல் கேட்டது. முனிவர் அவ்விடத்தைப் பார்க்க, தான் வைத்த மலரை பாதங்களில் வைத்துக்கொண்டு திருமால் தரையில் பள்ளிகொண்டு ரிஷிக்கு காட்சி தந்தார். ஸ்ரீமன் நாராயணனே தன் திருக்கரத்தால் நீர் இரைத்த இந்த அர்த்தசேது கடலில் மகத்தன்று நீராடுவது பெரும் புண்ணியம்.
ராமர், ராவணனை வதம் செய்வதற்காக சிவனருள் பெற வேண்டி, அகத்திய முனிவரின் ஆலோசனையை நாடினார். அம்முனிவர், கும்பகோணம் வந்து சில காலம் தங்கி இத்தலத்திலுள்ள காசி விஸ்வேசுவரரை வழிபட்டால் உருத்திராம்சம் பெறலாம் எனக்கூறினார். அதன்படி ராமர் இங்கு வந்து விஸ்வேசுவரரை வழிபட்டு, தன் உடலில் உருத்திர அம்சம் ஆரோகணிக்கப் பெற்றார். அதன் காரணமாக இவ்விடமும் காரோணம் எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர். இதன் பழைய பெயர், திருக்குடந்தைக் காரோணம். மகாமகக் குளத்தின் வடகரையில் உள்ளது இக்கோயில். மாசிமகத்தில் விளக்கு ஏற்ற வேண்டும்.
ஸ்ரீரங்கத்திற்கு எவ்வளவு சிறப்புண்டோ அத்தனையும் கொண்ட சிறப்பான திவ்யதேசம் திருக்கோஷ்டியூர். மந்திர உபதேசம் வேண்டி ராமானுஜர், திருக்கோஷ்ட்டியூர் நம்பியை 18 முறை தேடி வந்தது இங்கு தான். உலகமக்கள் அனைவருக்கும் ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜர் உபதேசித்ததால் (ஓம் என்பது ஓரெழுத்து) திருமந்திரம் விளைந்த திவ்யதேசம் என்ற பெருமை இதற்குண்டு. பேரழகு கொண்டவர் என்பதால் இங்கிருக்கும் பெருமாளுக்கு சவுமியநாராயணர் என்பது திருநாமம். பொதுவாக கோயில்களில் உற்ஸவர் விக்ரகங்களை பஞ்சலோகத்தால் அமைப்பர். ஆனால், தூய்மையான வெள்ளியால் ஆன விக்ரகம் இங்குள்ளது. இதை தேவலோக இந்திரனே தந்ததாக ஐதீகம்.இப்பெருமானை திருமங்கையாழ்வார் வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன் என்று போற்றுகிறார். இங்குள்ள தாயாருக்கு திருமாமகள், நிலமாமகள், குலமாமகள் ஆகிய பெயர்களுண்டு. மகாமகக்கிணறு என்னும் சிம்மக்கிணறு இங்குள்ளது. இதில் மாசிமகத்தில் நீராடுவது சிறப்பு. மாசிமகத்தன்று இங்கு தெப்பத்திருவிழா நடைபெறும். சவுமியநாராயணரிடம் ஏதாவது வேண்டுகோள் வைத்து அது நிறைவேறியவர்கள், தெப்பக்குளத்தில் தீபமேற்றி வழிபடுவது சிறப்பாகும். அந்த விளக்கை புத்திரபாக்கியம், திருமணம் போன்ற கோரிக்கைகளை வைப்பவர்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று பூஜையறையில் வைத்துக்கொள்ளலாம். வேண்டுதல் நிறைவேறியதும், அடுத்த மாசிமகத்தன்று மீண்டும் அந்த விளக்குடன் மேலும் 3 அல்லது 5 அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது மரபாகும்.
மாசி மகம்
கும்ப ராசியில் சூரியன் இருக்கும் போது சந்திரன் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இந்நாளே மாசி பௌர்ணமியுடன் கூடிய மாசி மகமாக திகழ்கிறது. இந்நாள் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு புனிதமான நன்நாளாகும்.
இந்த மாசி மக நட்சத்திரத்தன்று புனித நீர்நிலையில் நீராடினால் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
புனித நீர்நிலைகளில் மகம் நீராடலுக்கு மிகவும் புகழ்பெற்றது கும்பகோணம் மகாமகக் குளம். இத்திருக்குளத்தில் இருபது புனித தீர்த்த தேவதைகளின் தீர்த்தக் கிணறுகள் உள்ளன. அவை அனைத்திலும் மாசிமக நட்சத்திரத்தன்று, உடலுக்கு வலிமையும், புனிதத்தையும் தரக்கூடிய அற்புதமான காந்த சக்தி இயற்கையாகவே தோன்றுவதாக ஞான நூல்கள் கூறுகின்றன. மேலும், புண்ணிய நதிகள் அனைத்தும் அங்கு எழுந்தருள்வதாக ஐதீகம்.
மகம் நட்சத்திரத்தன்று மகாமகக் குளத்தில் நீராடி, குளத்தை மூன்று முறை வலம் வந்தால் கயிலாயத்தை வலம் வந்த பலன் கிட்டும் என்றும், இக்குளக்கரையில் வேதவிற்பன்னர் உதவியுடன் மறைந்த முன்னோர்களுக்கு பிதுர்பூஜை செய்து வழிபட்டால் முன்னோர்களின் ஆசி கிட்டும். இதனால், குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படும்.
மகம் நட்சத்திரத்தன்று இங்கு தீர்த்தவாரி நடைபெறும். குடந்தைத் திருத்தலத்தில் அருள்புரியும் எல்லா சிவாலயங்களிலிருந்தும் சுவாமியின் உற்சவத் திருமேனிகள் ஊர்வலமாக மகாமகக் குளத்திற்கு வருகை தந்து, சுப ஓரையில் வழிபாட்டுடன் தீர்த்தவாரி காண்பார்கள்.
இதேபோல் அங்குள்ள பெருமாள் கோவில்களில் எழுந்தருளியுள்ள தெய்வத் திருமேனிகளும் சக்கரப் படித்துறைக்கு வந்துசேர, தீர்த்தவாரி மிகச்சிறப்பாக நடைபெறும். அந்த சுபவேளையில் பக்தர் பெருமக்கள் தீர்த்த வாரியில் கலந்துகொண்டு நீராடி புனிதம் பெறுவார்கள்.
அமுதம் வேண்டி திருபாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது வெளித் தோன்றிய மகாலட்சுமியை மகாவிஷ்ணு திருமணம் செய்து கொண்டதனால் விஷ்ணு சமுத்திரராஜனின் மருமகன் ஆனார். மகாவிஷ்ணு தன் மகளை மணந்து கொண்டு வைகுந்தம் சென்றுவிட்டால் இனி நாம் அவரை எப்படி அவர்களை தரிசிப்பது என சமுத்திரராஜன் வருந்தினார். தந்தையின் மனக்குறையை லட்சுமி
விஷ்ணுவிடம் கூறினாள். திருமால் ஆண்டிற்கு ஒரு முறை மாசிமகம் தினம் தாம் கடற்கரைக்கு வந்து தரிசனம் தருவதாக வரம் அருளினார்.
மீனவ குலத்தில் அவதரித்த கருணாசாகரியான அம்பிகையை மணக்க காலம் கனிந்தபோது, ஈசன் மீனவர்போல் வேடமிட்டு அம்பிகையின் இருப்பிடம் சென்றார். அங்கு அவர் ராட்சத திமிங்கலத்தை அடக்கி மீனவர் தலைவனுக்குக் காட்சி கொடுத்து மீனவப் பெண்ணை மண்ந்தார்.
மீனவர் தலைவன், இறைவனை நோக்கி "தங்கள் தரிசனம் அடிக்கடி கிடைக்க அருள் புரிய வேண்டும்' என வேண்டினார். அதற்கிணங்க ஈசன், "மாசி மகத்தன்று கடல் நீராட வருவேன்' என்று அருள்புரிந்தார். மாசி மகம் தினத்தன்று ஈசன் வேடமூர்த்தியாகவும் அன்னை மீனவப் பெண்ணாகவும் கடற்கரைக்குச் சென்று அருள்பாலிப்பதாக ஐதீகம்.
மாசி மகத்தில் புண்ணிய தீர்த்தங்களைத் தரிசிப்பதும், தொடுவதும், பருகுவதும், அதில் நீராடுவதும்; புண்ணியத்தைத் தரும், பாவங்கள் தொலையும். இத்தினத்தில் தீர்த்தக் கரைகளில் தர்ப்பணம், பிதுர்கடன் ஆகியவை செய்தால், அவர்கள் பாவங்கள் நீங்கி நற்கதி பெறுவர் என்பது நம்பிக்கை.
திருமணமானவர்கள் தங்கள் மனைவியுடன் நீராட வேண்டும் என்றும் ஆண் குழந்தை வேண்டுபவர்கள், இந்நாளில் முருகனை வேண்டி விரதமிருந்து வழிபவேண்டும் என்றும் சாஸ்திரம் கூறுகிறது.
மகம் நட்சத்திரத்தில் பிறந்த சிம்ம ராசி அன்பர்கள் அனைவரும் இந்த மாசி மகத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வது அவசியம். அன்றைய தினம், இறை வழிபாடும், இறை தரிசனமும், அடுத்த ஒரு வருடத்திற்கு உங்களுக்குத் தேவையான மன வலிமையை தரும்.
மக நட்சத்திரத்தை “பித்ருதேவதா நட்சத்திரம்” என்றும் அழைப்பார்கள். உலகத்தை இறைவன் படைப்பதற்கு முன்பு, பித்ருதேவனை உருவாக்கிய பிறகே தேவர்களையும், மனிதர்களையும் மற்ற உயிரனங்களையும் உருவாக்கினார் என்கிறது சாஸ்திரம். இதனால் முதல் மரியாதையானது மக நட்சத்திரத்திற்கு உரிமை உடைய பித்ருதேவனுக்குதான்.
இந்த பித்ருதேவதாதான் முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தியை தருகிறது. முன்னோர்கள் ஆத்மசாந்தியுடன் இருந்தால்தான் அவர்களுடைய வம்சம் சுபிட்சமாக இருக்கும். பித்ருதேவனின் ஆசியும் கிடைக்கும். மாசிமகம் தினத்தன்று பித்ருக்களுக்கு பூஜை செய்து புனித நதிகளில் நீராடுவதை “பிதுர் மஹா ஸ்நானம்” என்கிறது புராணம்.
இத்தனை சிறப்புகள் வாய்ந்த மாசி மக நாளன்று இறைவழிபாடும் தீர்த்த நீராடலும் செய்து இறைவனின் திருவருளை அனைவரும் பெறுவோம்.