1. திருமுடி :
திருவருளை அனுபவிக்கும் போது தற்செயல் தோன்றாமல் பரவசப்படுவதே சிவனது திருமுடியாம்.
2. திருமுகம் :
உலகில் காணும் அனைத்தையும் இறைவனின் அனுக்ரஹமாகவே கண்டு அனுபவிப்பது அவரது திருமுகம்.
3. இருதயம் :
முக்தி பெறுவதற்குரிய பக்குவ ஆன்மாக்களுக்கு மெய்ஞ்ஞானத்தை உணர்த்தும் திருவருட்சக்தி இருதயமாகும்.
4. திருவடி :
யான் எனது என்னும் அகங்கார மமகாரமாய் நிற்கும் பொய்யறிவு நீங்கத்திருவருள் ஞானம் பிரகாசித்து நிற்றலயே சிவனுடைய திருவடி என்பர்.
5. (வித்யா) தேகம் :
ஆன்மாக்கள் செய்யும் கன்மத்திற்கு ஈடாக ரட்சிக்கும் குணமாகிய சதாசிவ மூர்த்தியினுடைய திருமேனி மந்திரம் ஆகையால் மந்திர ரூபமாகிய ஞான சக்தியே வித்யா தேகம் எனப்படும்.
6. திரிநேத்ரம் :
சூரியன்,சந்திரன்,அக்கினி என்னும் முச்சூடர்களையும் அடக்கியாள்பவர் தாமே என்பதையும் ஆகவனீயம், காருகபத்யம், தக்கிணாக்கினியம் என்னும் மூன்று வேள்விகளும் தம்மிடத்தே பொருந்தியுள்ளன என்பதையும். எல்லாச் செயல்களையும் அறிந்து செய்யும் இச்சை, ஞானம், கிரியா சக்திகளையுடையவர்தாம் என்பதையும் இம்மூன்று கண்களும் குறிக்கின்றன.
7. திரிசூலம் :
ஆரணி, செனனி, ரோதயித்திரி என்னும் முச்சத்தி வடிவினதாகிய சூலப்படையானது முத்தொழிலையுடையவர், மும்மலங்களை நீக்குபவர் தாமே என்பதைக் குறிப்பது.
8. மழு :
லய சிவமாக இருப்பவர் தாம் என்பதைக் குறிக்க லயஸ்தானமாகவுள்ள மழுவை ஏந்தியுள்ளார்.
9. வாள் :
பிறவி வேரின் கொடியை அறுப்பவர்தாமே என்பதை அறிவிப்பதற்காக ஞான வடிவமாகிய வாளை ஏந்தியுள்ளார்.
10. குலிசம் :
ஒருவராலும் கெடுத்தற்கு இயலாத சுத்தமாயை ஆளும் பேத குண்த்தையுடையவர் தாம் என்பதை அறிவித்தற்காக துஷ்டர்களைப் பேதிக்கின்ற குணமாகிய குலிசத்தை ஏந்தினார்.
11. அபயகரம் :
உலக துன்பத்திற்குப் பயப்பட வேண்டாம் என்று அனுக்ரஹம் செய்யும் குணத்தைக் குறிக்கிறது.
12. வரத கரம் :
ஆன்மாக்களின் கன்மத்துக்கு ஈடாகப் போக முத்திகளைக் கொடுப்பவர் {வரமளிப்பவர்} தாம் என்பதை அறிவித்தற்காகக் கொண்ட்து வரத கரம்.
13. அக்கினி :
ஆன்மாக்களின் பாசங்களை நீக்குபவர் தாம் என்பதை உணர்த்தும் பொருட்டுச் சம்ஹார வடிவாகிய அக்கினியைத் தாங்கியுள்ளார்.
14. அங்குசம் :
மறைப்பினை {திரோபாவம்} செய்பவர் என்பதை அறிவிப்பது.
15. மணி :
நாத்த் தத்துவத்திற்குத் தாமே தலைவர் என்பதைக் குறிக்கிறது.
16. ஸர்ப்பம் (பாம்பு) :
பாம்பினுடைய விரிவு, சுருக்கம் போல உலகின் தோற்றம் ஒடுக்கம் இருந்தலால், உலகிற்கு நிமித்த காரணர் தாம் என்பதை அறிவித்தற்காகக் குண்டலினி சக்தி ரூபமாகிய பாம்பை ஏந்தியுள்ளார்.
17. பாசம் :
ஆன்மாக்களுக்கு பலத்தை ஊட்டுபவர் தாம் என்பதை அறிவித்தற்காக மாயா ரூபமாகிய பாசத்தை திருக்கரத்தில் ஏந்தியுள்ளார்.
18. மான் :
மானினது நாங்கு கால்களும் நாங்கு வேதங்களாகையால் வேதப் பொருளாக உள்ளவர் தாம் என்பதை உணர்த்துவதற்காக மானை ஏந்தினார்.
19. புன்முறுவல் :
சஞ்சிதம் முதலான மூவகைத் துயரத்தையும் போக்கி அருளுவதற்காக இளமையான புன்சிரிப்பைக் கொண்டுள்ளார்.
20. உபவீதம் (பூணூல்) :
சிவஞானப் பொருளாக இருப்பவரும் அதைத் தருபவரும் தாமே என்பதை உணர்த்துவது.
21. சிகை (தலைக்குடுமி) :
ஞான வடிவமாக உள்ளவர் தாமே என்பதையும் அறிவிக்கவே ஞான அடையாளமாகிய சிகையைக் கொண்டுள்ளார்.
22. சிலம்பு :
பக்குவ ஆன்மாக்களைப் பேரின்பத்தின் அழுத்துதற்குச் சாதனமாக அருட்சிலம்பு விளங்குகிறது.
23. வீரக்கழல் :
ஆன்மாக்களை வசப்படுத்தும் முன் வினையை வென்று, பிறவித் துன்பத்தைப் போக்கும் காரணர் தாம் என்பதை உணர்த்துவது.
24. கங்கை :
உலகை அழிக்குமாறு வந்த கங்கையை அதன் வேகத்தைக் குறைத்து அடக்கி உலகை காத்து இன்பத்தைத் தந்ததால், ஆன்மாக்களை ஆனந்தக்கடலில் திளைக்கச் செய்ததற்கு அடையாளமாகக் கங்கை.