சதுர்த்தி திதியானது, விநாயகப் பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள் ஆகும். எண்ணியது யாவற்றையும் அளிக்கும் இந்த சங்கடஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதமாகும்.
பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள், சங்கடஹர சதுர்த்தி. ‘சங்கட’ என்றால் ‘துன்பம்’, ‘ஹர’ என்றால் ‘அழித்தல்’. துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி.
ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால், குடும்பத்தில் சுபிட்சம் உண்டாவதோடு, தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.
இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் நோய்கள் குணமடைந்து, உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்களுக்கு நிலையான சந்தோஷம் கிடைக்கும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்திக்கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம் என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்தால் பாதிக்கப்படுபவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் குறையும்.
வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு. ஆனால், பவுர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும். இது செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் விசேஷம்.
வருடத்தின் அனைத்து சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகளையும் செய்த பலன் ஒரு மகா சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்வதால் கிடைக்கப் பெறும்.
இந்த விரதம் பற்றிய புராணத் தகவல்கள் சிலவற்றை பார்க்கலாம்.
¶ முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்கு, கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார்.
¶ சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப்பெருமான், ஒரு முனிவருக்கு எடுத்துரைத்ததாக கந்த புராணம் குறிப்பிடுகிறது.
¶ கிருஷ்ணர், நான்காம் பிறையை கண்டதால் அவருக்கு அபவாதம் ஏற்பட்டது. எனவே அவர் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மேற்கொண்டு கணேசனை பூஜித்து அதிலிருந்து மீண்டார் என்றும் புராணங்கள் குறிப் பிடுகின்றன.
¶ வனவாசத்தின் போது, கண்ணபிரான் இவ்விரதத்தைப் பற்றி பஞ்ச பாண்டவர்களிடம் எடுத்துரைத்ததாகவும், அதன்படி இதனை அனுஷ்டித்து யுதிஷ்டிரர் நாட்டை மீண்டும் அடைந்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.
¶ இந்த நாளில் தான், விநாயகப் பெருமானின் அருளைப் பெற்று, சந்திரன் சாப விமோசனம் அடைந்தான். எனவே இந்நாளில் சந்திரன் பிரதானமாகிறான்.
¶ தமயந்தி நளனை அடைந்தது இந்த விரதத்தின் மகிமையால் தான் என்று நூல்கள் குறிப்பிடுகின்றன.
¶ இந்த விரதத்தை முதன் முதலில் அங்காரகன் (செவ்வாய்) கடைப்பிடித்து நவக்கிரக பதவி அடைந்ததாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. எனவே தான் செவ்வாய்க்கிழமை வரும் விரதம் விசேஷமாக கருதப்படுகிறது.