சிலைகள் இல்லாத கோவில்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிலைகள் இல்லாத கோவில் பற்றிய பதிவுகள் :

மூலஸ்தானத்தில், சுவாமி - அம்பாள் சிலைகள் இருப்பது தான் வழக்கம்; ஆனால், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகிலுள்ள ஆவுடையார்கோவிலில் சிவலிங்கத்துக்கு பதிலாக குவளையும், அம்பாளுக்கு பதிலாக பாதமும் மட்டுமே உள்ளது.

பொதுவாக, சிவாலய மூலஸ்தானங்களில், ஆவுடையார் மீது லிங்கம் இருக்கும்; ஆனால், இங்கு, வெறும் ஆவுடையார் மட்டுமே உள்ளது. லிங்கம் இருக்க வேண்டிய இடத்தில் குவளை சாத்தப்பட்டுள்ளது. குவளை உடலாகவும், உள்ளிருக்கும் உருவமற்ற பகுதி ஆத்மாவாகவும் கருதப்படுவதால், சுவாமிக்கு, 'ஆத்மநாதர்' என பெயர் வந்தது.

 இங்கு, சுவாமிக்கு தீபாராதனை செய்த தட்டை வெளியில் கொண்டு வருவதில்லை. ஆவுடையாருக்கு பின்புறம் வெள்ளை, சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் மூன்று தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன. வெள்ளை நிறம் சூரியனாகவும், சிவப்பு - அக்னியாவும், பச்சை நிறம், சந்திரனாகவும் கருதப்படுகின்றன.

சுவாமிக்கு சிலை இல்லை என்பதால், அவரது மூன்று கண்களை குறிக்கும் விதமாக இந்த தீபங்களை ஏற்றுகின்றனர். இவற்றை வணங்கினாலே தீபாராதனை தட்டை வணங்கியதற்கு சமம் என்பதால், அதை வெளியில் கொண்டு வருவதில்லை.

 அதேபோன்று, பொதுவாக, சிவன் கோவில்கள் கிழக்கு நோக்கியும், சில மேற்கு பார்த்தவாறும் இருக்கும். ஆனால், ஆவுடையார் கோவில் தெற்கு நோக்கி உள்ளது. சிவன், குருவாக இருந்து, தெற்கு நோக்கி அமர்ந்து உபதேசிக்கும் நிலையை, தட்சிணாமூர்த்தி என்பர்.

தட்சிணம்' என்றால் தெற்கு; சிவன், மாணிக்கவாசகருக்கு குருவாக உபதேசம் செய்த தலம் என்பதால், தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

சூரிய, சந்திர கிரகணங்களின் போது கோவில்களில் நடை சாத்தப்படுவது வழக்கம். ஆனால், இங்கு கிரகணநாளில், ஆறு கால பூஜை நடைபெறுகிறது. ஆதியந்தம் இல்லாத உருவமற்ற சிவனுக்கு, எக்காரணத்தாலும் பூஜை தடைபடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்கின்றனர்.

அம்பாளின் பெயர் யோகாம்பாள்!

இவளுக்கும் உருவம் இல்லை. சிவனை மீறி, தட்சனின் யாகத்திற்கு சென்றதற்கு மன்னிப்பு பெறுவதற்காக, இத்தலத்தில் யார் கண்ணுக்கும் தெரியாமல், உருவத்தை மறைத்து தவம் செய்தாள். எனவே, அம்பாளுக்கும் விக்ரகம் இல்லை. அவள் தவம் செய்த போது பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடைபெறுகிறது.

 பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இப்பாதத்தை கண்ணாடியில் பிரதிபலிக்க செய்துள்ளனர். இவளது சன்னிதி அடைத்தே இருக்கும் என்பதால், சன்னிதி முன் உள்ள ஜன்னல் துவாரம் வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும்.

நைவேத்யம்!

ஆத்மநாதர் முன் உள்ள படைக்கல்லில், புழுங்கல் அரிசியில் சமைத்த சூடான சாதத்தை ஆவி பறக்க கொட்டுவர். அப்போது சன்னிதி கதவுகள் சாத்தப்பட்டு, சிறிதுநேரம் கழித்து திறக்கப்படும்.

சுவாமி உருவமற்றவர் என்பதால், உருவமில்லாத ஆவியுடன் நைவேத்யம் படைக்கப்படுகிறது. இது தவிர பாகற்காய் மற்றும் கீரையும் நைவேத்தியமாக படைக்கப்படும். வித்தியாசமான நடை முறைகள் கொண்ட இக்கோவிலை, வாழ்வில் ஒரு முறையாவது தரிசித்து விடுங்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top