சப்த கன்னிகள் வழிபாடு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சப்த கன்னிகள் வழிபாடு பற்றிய பதிவுகள் :

சப்த கன்னிகள் என்பது ஏழு கன்னி தெய்வங்களை குறிக்கும். சப்த என்பது ஏழு திதிகளில் சப்தமியைக் குறிப்பதாகும். 

பட்டாரிகா, தேவகன்யா, பத்மகன்யா, சிந்துகன்யா, சுகசகன்யா, வனகன்யா, சுமதிகன்யா ஆகியன ஏழு கன்னி தெய்வங்கள். 

இவை பராசக்தி, துர்கா, காளி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்குக் காவல் மற்றும் பரிவார தெய்வங்கள். 

இந்த தெய்வங்களுக்கு வெண்பொங்கலுடன், பொட்டுக்கடலை, நாட்டு சர்க்கரை மற்றும் காதோலை கருகமணி வைத்து பூஜை செய்யப்படுகிறது. சப்த கன்னிகளுக்கு சிவப்புத்துணி கட்டுவார்கள். 

1. பட்டாரிகா :

வழிபட்டால் காளி அருள் கிடைக்கும் 

2. வன கன்யா :

வழிபட்டால் துர்க்கை அருள் பெறலாம். 
விவசாயம் பெருகும். 

3. சிந்துகன்யா :

வணங்கினால் நீர் நிலைகளில் நீர் பெருக்கெடுக்கும்.  

4. சுகசகன்யா :

தம்பதி, குழந்தைகள், உறவினரிடையே 
நட்பு உண்டாக்குபவர் 

5. பத்மகன்யா :

வழிபட்டால் செல்வம் கொழிக்கும். 

6. தேவகன்யா :

தேவர்களின் அருள் கிடைக்க செய்பவர். 

7. சுமதி கன்யா :

வணங்கும் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர். 

பட்டாரிகா கன்யா தேவகன்யா பத்ம கன்யா ஸிந்து கன்யா அகஜா கன்யா வனகன்யா சுமதிகன்யா எனப்படும். இந்த ஏழு கன்னிமார்களையும், ஆடி மாதத்தில் வழிபடுவது மேலும் சிறப்பு.

தென்னிந்தியாவில் பரவலாக பட்டாரிகா, தேவகன்யா, பத்மகன்யா, சிந்துகன்யா, சுகஸகன்யா, வனகன்யா, சுமதிகன்யா என ஏழு கன்னிமார் பெயர்களைக் கூறுவர். 

பழமை வாய்ந்த கோயில்களில் இந்த தெய்வங்கள் வடக்கு திசை நோக்கியே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். கிராமக் கோயில்களிலும் இந்த தெய்வங்கள் வழிபடப்படும். 

வெண்பொங்கலுடன், பொட்டுக்கடலை, நாட்டுச் சர்க்கரையோடு காதோலை கருகமணி வைத்து பூஜை செய்வார்கள். சப்த கன்னிகளுக்கு சிவப்புத் துணி கட்டுவர்.‌ பட்டாரிகாவை வழிபட்டால் வீரம் கிட்டும். வனகன்யாவை வழிபட்டால் வேளாண்மை செழிக்கும். 

சிந்து கன்யாவால் ஆறு, குளம் உள்பட நீர் நிலைகள் பெருக்கும்; மழை அருள் கிடைக்கும். சுகஸ கன்யாவை வழிபட்டால் குடும்ப உறவு சிறக்கும். பத்ம கன்யாவால் வீட்டில் செல்வம் கொழிக்கும். தேவகன்யாவை வழிபட்டால் தேவர்களின் அருள் கிடைக்கும். சுமதி கன்யாவை வழிபட்டால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாவர். 

இந்த ஏழு கன்னிகளின் பெயர்கள் இடத்துக்கு இடம் மாறுகிறது. பழங்குடிகளான காணிகள் அடையாளம் காட்டும் ஏழு கன்னிகள் வேறாக இருக்கிறார்கள்.

இவர்கள் கன்னி தெய்வங்களை அடியுலவுக் கன்னி, நடு உலவுக் கன்னி, தலையுலவு கன்னி, மேலுலவு கன்னி, அங்கு குய் கன்னி, ஆறு வெட்டிக்கன்னி, சொக்கன் கன்னி எனப் பெயரிட்டு அழைக்கின்றனர்.

இவர்கள் ஏழு நிறம் கொண்ட தேரேறி (வானவில்) விண்ணுலகில் இருந்து மண்ணுலகுக்கு நீராட வருகின்றனர்.

அவர்கள் நீராடுவதை மானிடர்கள் பார்த்து விடுவதால் தீட்டுப் பட்டு இங்கேயே தங்கி விடுகின்றனர்.

இவர்களை வன தேவதைகளாக வழிபடும் வழக்கமும் உண்டு. ‘‘வட தமிழகத்திலும் கன்னி தெய்வ வழிபாடு பிரசித்தம்!’’ என்கிறார் பேராசிரியர் தனஞ்செயன். ‘‘நாகை உள்ளிட்ட தமிழக கடலோரங்களில் கொட்டகைகளில் 7 கற்களை நட்டு கன்னி தெய்வத்தை வணங்குகின்றனர். 

தனது சகோதரர்களை தொலைத்துவிட்டு தீவுகளில் சென்று தேடியபோது உதவிய 7 கன்னியரை, கடலோர அரச குமாரர்கள் இங்கு தை 3ம் நாள் வரவேற்கின்றனர்.

அவர்கள் வந்ததும் உபசரிக்கிறார்கள். அப்போது கன்னியர் எழுவர் சாமியாடி குறி சொல்கின்றனர்.

மாசி மகம் வரை அவர்களுக்கு உபசரிப்பு நடக்கிறது. மாசி மகத்தன்று கன்னியாடிகள் 7 பேரையும் சாமியாடிகள் சவுக்கால் அடிக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு ‘கன்னி விலக்கல்’ என்று பெயர். சவுக்கடி நிகழ்ச்சிக்குப் பின்னர் கன்னித்தெய்வங்களை அக்னி வடிவில் மாற்றி சட்டியில் வைத்து கட்டுமரத்தில் ஏற்றி கடலுக்கு அனுப்புகின்றனர். 

கர்ப்பிணிப் பெண்கள் நோய்வாய்ப்பட்டால், குணமாக வேண்டும் என நேர்ந்து கன்னி சிலை செய்து வைப்பார்கள்.

வயிற்று வலி வந்தால், வயிற்றில் இலை பரப்பி மாவிளக்கு ஏற்றி வைப்பர். இதற்கு ‘மாவு பள்ளயம்’ எனப்பெயர்’’ என்கிறார் அவர்.

‘‘கன்னிமார் வழிபாடு தமிழகத்தில் பண்டைக்காலம் தொட்டே நடைபெற்றதை பல ஆதாரங்கள் மூலம் அறிய முடிகிறது.

நாகர்கோவிலை சம்புகேஸ்வரம் என்று முன்பு அழைத்தனர். வள்ளியூர் அருகே உள்ள சம்பூற்றுவும் அதற்கு சமகால பூமிதான். அங்கு சிவராத்திரி அன்று சப்த கன்னியர் சிவபூஜை செய்வதாக ஐதீகம்.

சம்புகேஸ்வரமான நாகர்கோவிலில் தலை வைத்து, சப்த கன்னியர் என்னை வழிபடும் சம்பூற்றில் வாலை வைத்து பரிபாலனம் செய்ய வேண்டும் என்று நாகராஜனுக்கு ஈசன் உத்தரவிட, அவ்வாறே அவன் செய்ததாகவும், அவன் வால் பகுதியில் கன்னிமார் குடிகொண்ட கோயில் உள்ளதென்றும் கர்ண பரம்பரையாக வழங்கி வருகிறது’’ என்கிறார் வள்ளியூர் ஆறுமுகம் பிள்ளை.

தென்காசி பழைய பஸ் நிலையம் எதிரே கன்னிமாரம்மன் கோயில் உள்ளது. அந்த தெருவுக்கே கன்னிமாரம்மன் பெயர்தான். 

‘‘தென்காசியில் காசி விஸ்வநாதர் அருளாட்சி செய்யும் முன்பே கன்னிமாரம்மன் கோயில் இருந்தது’’ என்கிறார் இப்பகுதியைச் சேர்ந்த நாகராஜன். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே எழுவரை முக்கியில் உள்ள சப்த கன்னியர் கோயில் 17ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது.

இங்குள்ள ஊருணியில் குளித்த 7 கன்னிமாரின் ஆடைகளை ஆடு மேய்த்தவர் கவர்ந்துவிட, வெட்கிப்போய் திரும்பக் கேட்டுள்ளனர். அவர் கொடுக்க மறுத்ததால் ‘நாங்கள் கல்லாய் சமைகிறோம். நீயும் கல்லாய்ப் போ’ என்று சபித்துவிட்டு 7 கன்னியரும் கல்லானார்களாம்.

அன்று இரவே முத்து பார்வதி அம்மன் கோயில் பூசாரியின் கனவில் தோன்றிய சப்த கன்னியர், ‘நாங்கள் ஊருணியில் இருந்து சற்று தொலைவில் கற்சிலையாய் கிடக்கிறோம். எங்களை நிலைப்படுத்துங்கள், ஊர் செழிக்கும்’ என்று கூறி மறைந்தார்களாம்.

 ‘‘கார்த்திகை 2வது செவ்வாய் தோறும் இங்கு பாயசத்தை பெருக்கி படப்பு கஞ்சி ஊற்றுகிறோம். பூசாரியான நான் முன்னே வர, அடுத்து கிராமத்தின் 7 சிறுமிகள் நடந்து வர, கணியான் பின் தொடர விழா நடக்கிறது. 

7 சிறுமிகளுக்கும் கன்னிமார் நினைவாக குங்குமம், பூ, மஞ்சள் கொடுத்து கௌரவிக்கிறோம். அவர்களுக்கு பரிமாறிய பின்பு மற்றவர்களுக்கு பனை ஓலைப்பட்டையில் கஞ்சி வழங்குகிறோம்’’ என்கிறார் மணிப்பிள்ளை. குலம் தழைப்பது பெண்ணின் குணத்தால் என்பார்கள்.

 அப்படிப்பட்ட பெண்களுக்கு தீங்கிழைத்தால் கேடு நிச்சயம் என்பதற்கு சான்று தான் கன்னி தெய்வக் கோயில்கள். இந்தப் பாரம்பரியத்தால்தான் தமிழகம் பெண்களை மதிப்பதில் என்றும் முன்னணியில் இருக்கிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top