நினைத்ததை நிறைவேற்றும் துளசி பூஜை

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நினைத்ததை நிறைவேற்றும் துளசி பூஜை பற்றிய பதிவுகள் :

அலங்கார பிரியரான திருமாலுக்கு உகந்தது துளசி. திருமாலின் திருமார்பில், மாலையாக மகிழ்வோடு காட்சி தருபவள் துளசி தேவி. 

துளசி என்ற சொல்லுக்கு தன்னிகரற்றது என்று பொருளாகும். துளசி தீர்த்தத்தால் எனக்கு அபிஷேகம் செய்தால், பல ஆயிரம் அமிர்தக் குடங்களால் அபிஷேகம் செய்த ஆனந்தமடைவேன் என்று மகாவிஷ்ணுவே கூறியுள்ளார்.

துளசி பூஜை :

கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தன்று துளசித்தாய் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. அன்று துளசித்தாய்க்கு விரதமிருந்து பூஜை செய்வது மிகுந்த பலனை தரும். துளசி பூஜை செய்ய வாரத்தில் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும், கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசியும் ஏற்ற நாட்கள் ஆகும்.

துளசி இலை பட்ட தண்ணீர், கங்கை நீருக்கு சமமானதாக கருதப்படுகிறது. துளசி பூஜை செய்வதால் எட்டு வகை செல்வங்களும் கிட்டும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். துளசி திருமாலுக்கும், திருமகளுக்கும் மிகவும் பிடித்தமானது. துளசி இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு நிறைந்து இருப்பார் என்பது ஐதீகம்.

கார்த்திகை மாதம் ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி அன்று மகாவிஷ்ணு துளசியைத் திருமணம் செய்து கொண்டார். அந்த நாளை பிருந்தாவன துளசி அல்லது துளசிக்கல்யாணம் எனக் கொண்டாடுவார்கள். அன்று காலை சுமங்கலிப் பெண்கள் குளித்துவிட்டு, விரதமிருந்து துளசி மாடத்தை சுற்றி மெழுகி, கோலமிட்டு காவி பூச வேண்டும். சாதம், பால் பாயாசம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பழங்கள், தேங்காய் வைத்து பூஜை செய்ய வேண்டும். இரு விளக்கு திரியை நெய்யில் வைத்து, தீபம் ஏற்றி வணங்க வேண்டும்.

துளசி லட்சுமி வடிவானவள். துளசி செடியுடன் நெல்லிமரக்குச்சி (மகாவிஷ்ணு வடிவம்) சேர்த்து வைக்க வேண்டும். வீட்டில் சாளகிராமம் இருந்தால் அதனையும் துளசி மாடத்தில் வைத்து பூஜை செய்ய வேண்டும். நிவேதனமாக சர்க்கரை பொங்கல் வைத்து வணங்க வேண்டும். துளசி பூஜைக்கு முன்னர் விக்னேஸ்வர பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்ததும் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பூ, கண்ணாடி வளையல்கள் வைத்து கொடுக்க வேண்டும். ஒரு ஏழை அந்தண சிறுமியை மனையில் அமரவைத்து சந்தனம் பூசி, குங்குமம், புஷ்பம், புதுத்துணி கொடுக்க வேண்டும். பால் பாயாசத்தை பாத்திரத்துடன் தானம் கொடுக்கலாம்.

பார்வதி தேவி, துளசி பூஜை செய்ததால் சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றாள். அதைப்போல் துளசி பூஜை செய்ததால் அருந்ததிதேவி வசிஷ்டரை மணந்தாள். ருக்மணி கிருஷ்ணரை மணவாளனாக அடையும் பேறு பெற்றாள். கருட பகவான் விஷ்ணுவுக்கு வாகனமாக மாறியதும், அவர் செய்த துளசி பூஜையின் மகிமையால் தான். சாவித்திரி துளசி பூஜை செய்ததால் தான் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்தாள். விநாயகர் கஜாக சூரனை வென்று விக்னேஷ்வரன் என்ற பட்டத்தை பெற்றதும் துளசி பூஜையால் தான். அனைவரும் துளசி பூஜை செய்து பயன் பெறுவோமாக.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top