ஆடிக்கிருத்திகை தினத்தில் முருகனை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சினைகள், நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும் என்பது நம்பிக்கை. பேரரசர் போல வாழவும் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்க ஆடிக்கிருத்திகை விரதம் இருக்கலாம்.
கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து தானம் செய்யும் எஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைவார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.
செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்னைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆடி கிருத்திகை தினத்தில் முருகனை நினைத்து விரதம் இருந்தால் கவலைகளும் பிரச்னைகள் நீங்குவதோடு வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
சக்தி தரும் கார்த்திகை விரதம்
மனித உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாதகம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரா இவை பல அபூர்வ சக்திகளை எழுப்பி தர வல்லவை. பல அற்புதங்களை செய்பவர்கள் உடலில் இந்த குறிப்பிட்ட சக்கரங்களில் ஒன்று வேலை செய்வதால் தான் சாதிக்க முடிகிறது. சாதாரண மனிதனுக்கு இவை உறங்கி கொண்டிருக்கும். இந்த சக்கரங்கள் சுழல ஆரம்பித்துவிட்டால் ஒருவனுக்கு எல்லா சித்துகளும் கைவரும் என்பார்கள்.
ஆறுமுகப்பெருமானின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் சிறப்புடையது. அத்தகைய சிறப்புடைய முருகனை ஆடிக்கிருத்திகையில் வழிபட்டால் எல்லா வளமும் கிடைக்கும். இருபத்தேழு நட்சத்திரங்களில் மூன்றாவது இடத்தை பெறுவது கிருத்திகை நட்சத்திரமாகும். இதன் அதிபதி சூரிய பகவானாவார். ஆடிக்கிருத்திகை நாளில் அக்னியை நினைத்து தவமிருந்தால் குண்டலினி சக்தி ஏறும். இது புலிப்பாணி, அகத்தியர் சொன்ன நல்லநாள்.
முருகனுக்கு உகந்த கார்த்திகை விரதம்
மாதாமாதம் வரும் கார்த்திகை நட்சத்திரம் கிருத்திகை விரதம் எனப்படும். கார்த்திகை பெண்கள் 6 பேர் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் முருகப்பெருமானுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர்.
கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி சிவபெருமான் ஆசிர்வதித்தார்.
கார்த்திகை விரத சிறப்புகள்
சிவன் அளித்த வரத்தின் படி இந்த கார்த்திகை நட்சத்திரம் வரும் நன்னாளில் விரதம் இருந்து முருகனை வணங்கினால் அறிவு, செல்வம், நீண்ட ஆயுள், நிம்மதியான வாழ்க்கை, நிறைவான சொந்தங்கள், குணமுள்ள குழந்தைகள் கிடைப்பார்கள் என்பது நம்பிக்கை.
கார்த்திகை விரதத்தை விநாயகர் கூறியவாறு 12 ஆண்டுகள் அனுஷ்டித்த நாரதர், முருகனருளால் தேவரிஷியாக பதவி பெற்றார். திரிசங்கு, பகீரதன், அரிசந்திரன் ஆகியோர் பேரரசர்கள் ஆனார்கள் என்கிறது புராணம்.
உப்பில்லாத உணவு
கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப்படுவதை முக்கியமாய்க் கருதுகின்றனர். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது. கார்த்திகை நாளில் கந்த சஷ்டி கவசம் படிப்பது சிறப்பு. மறுநாள் ரோகிணியன்று காலையில் மீண்டும் குளித்து விட்டு முருக பக்தர்களுக்கு அன்னதானம் செய்து விட்டு சாப்பிடலாம்.
ஆறு கார்த்திகை விரதங்கள்
ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம். மனத் தூய்மைக்கும், மன ஒருமைக்கும் வழிசெய்யும் விரதங்களைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நன்மையைத் தரும்.
வீடு நிலப்பிரச்சினை தீரும்
ஜோதிட சாஸ்திர விதிகளின்படி முருகப்பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சினைகள், சகோதரர்களால் சங்கடங்கள், குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆடிக்கிருத்திகை தினத்தில் முருகனை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சினைகள், நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும். நம்பிக்கையுடன் மனமுருக பிரார்த்தித்து சகல நலங்களும் பெறுவோம்.