தமிழ் மாதங்களில் நான்காவது மாதமாக வருவது ஆடி. முற்காலங்களில் ஆடிப் பிறப்பை வெகு விமர்சையாகக் கொண்டாடினார்கள். ஆடி மாதம் அம்மன் தவம் செய்த மாதம் என்பதால் இந்த மாதங்களில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் பல பூஜைகள் அம்மன் சந்நிதிகளில் நடைபெறுவது வழக்கம். இதைபோல், ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் தினத்தில் பெண்கள் பலர் ஒன்றுகூடி வீடுகளில் மாலை நேரங்களில் ஒரு பூஜை செய்து அம்மனுக்குக் கொழுக்கட்டை படைப்பார்கள். இந்த பூஜையை காலங்காலமாய் விரதம் மேற்கொண்டு பூஜை செய்வது முன்னோர்களின் ஐதீகம். இந்தக் கொழுக்கட்டை செய்வதை ஆண்கள் பார்க்கக்கூடாது என்றும் அதனை மீறி பார்த்தால் தடங்கல் நேர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு இதனை சிறப்பாக செய்வார்கள்.
வயதில் மூத்த பெண்கள் இந்த பூஜையின் போது கடவுளை நன்றாக வேண்டி கொண்டு மஞ்சள் தூளை தேங்காயில் வைத்து அம்மனின் முகத்தோற்றம் வரும்படியாக அலங்கரிப்பார்கள். அம்மனின் முகத்தில் கண்மையை கொண்டு பொட்டும், புருவமும் வரைந்து நகைகளும் அணிவித்து பூஜிப்பார்கள். பின்னர், அம்மனின் உருவத்திற்கு முன்பு புங்கை மற்றும் புளியமர இலைகளை வைத்து விளக்கேற்றி உப்பு சேர்க்காத மாவில் கொழுக்கட்டை செய்ய ஆரம்பிப்பார்கள். கொழுக்கட்டை செய்து முடித்ததும் அம்மன் முன்னிலையில் வைத்து பூஜை செய்து வயதில் மூத்தவர்கள் புளியமர இலைகளையும், புங்கை மர இலைகளையும் அனைவரின் கைகளில் கொடுத்து அனைவரும் கேட்க ஒரு கதை கூறுவர்கள்.
"ஒரு ஊரில் ஏழு அண்ணன் தம்பிகளும் ஒரு தங்கையும் வசித்து வந்தார்கள். அவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தார்கள். அதனால், அண்ணன் மற்றும் தம்பிகள் மரம் வெட்டி கொண்டு வந்து அதன் மூலம் வரும் பணத்தால்தான் சாப்பிட முடியும் என்ற நிலையில் இருந்தார்கள். இப்படி இருக்கையில் ஒரு நாள் அந்த பக்கமாக சென்ற ஒரு பாட்டி இந்த தங்கையிடம் வந்து கொஞ்சம் தண்ணீர் வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது, நாங்கள் மிகவும் வறுமையில் இருக்கிறோம் என்று பாட்டியிடம் அந்த பெண் கூறிய போது இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன் அதை செய்தால் உங்களின் வாழ்க்கை மாறும் என்று கூறி நான் இன்று இரவு வருகிறேன் அதற்குள் பூஜைக்கு தேவையான பொருட்களை எடுத்துவைத்துவிடு என்று பாட்டி கூறிவிட்டு சென்றுவிடுகிறார்.
இந்த பெண்ணும் அனைத்து பொருட்களையும் எடுத்துவைத்துவிட்டு காத்திருக்கையில் அந்த பாட்டி வந்துவிடுகிறார். ஆனால், அப்போது எலி வந்து அனைத்தையும் தட்டிவிட்டு சென்றுவிடுகிறது. விளக்கும் அமர்ந்து விடுகிறது. அந்த பாட்டி தங்கையிடம் இன்று ஒரு நாள் உன் அண்ணன்களையும் தம்பிகளையும் வெளியில் படுக்க சொல்லிவிட்டாயா என்றதும், நான் சொல்லிவிட்டேன் என்று அந்த பெண் கூறுகிறாள். அதன் பிறகு, எதிரில் புங்கை மரமும், புளியமரம் தெரிகிறது. அதன் இலைகளை பறித்துக்கொண்டு வா என்று பாட்டி கூறியதும், இந்த பெண் புங்கை மரத்தில் உள்ள இலைகளை பறிக்கையில் அந்த புங்கை மரம் என் அனுமதி இல்லாமல் ஏன் பரிக்கிறாய் என்று கேள்வி எழுப்பியது. நாங்கள் பூஜை செய்கிறோம் அதற்கு உங்கள் இலைகள் தேவைப்படுகிறது என்று கூறியதும் அப்போ என் பேரையும் சேர்த்துக்கொள் என்று புங்கை மரம் சொல்கிறது. அதன் பிறகு புளியமரம் இதைப்போலவே கேள்வி கேட்கையில் அந்த பெண் பதில் சொன்னதும் என் பேரையும் சேர்த்துக்கொள் என்கிறது. இலைகளை பறித்து வந்து பாட்டியிடம் கொடுத்து விட்டு நடந்ததை பாட்டியிடம் கூறுகிறாள்.
அதன் பிறகு கங்கு வேண்டும் என்றதும் எதிரில் ஒரு பிணம் எரிந்துகொண்டிருந்தது. அங்கு சென்று அந்த கங்கை எடுக்கும் போது அந்த பிணம் எழுத்து அமர்ந்து கேள்வி கேட்டதும் அதற்கான பதில் பெண் கூறியதும் அப்போது என் பெயரிலும் பூஜை செய்துவிடு என்று கூறியது.
பிறகு, பூஜையை தொடங்கிவிட்டு செய்துகொண்டிருக்கையில் அந்த பெண்ணின் அண்ணன் வந்து கதவை தட்ட பெண் கதவை திறந்தால். மீன் கொண்டு வந்துருக்கிறேன் என்று அண்ணன் சொன்னதும் அதை வெளியில் உள்ள பானையில் வைத்துவிடு என்று தங்கை கூறிவிட்டு கதவை தாளிடுகிறாள்.
பூஜை முடிந்தவுடன் பாட்டி கிளம்பிவிட்டார். அடுத்த நாள் அந்த பானையில் உள்ள மீனை எடுக்கலாம் என்று பார்க்கையில் அந்த பானையை திறக்கவே முடியவில்லை. பிறகு, கடவுளின் நாமம் சொல்லிவிட்டு திறக்கையில் அந்த மீன்கள் அனைத்தும் தங்க மீனாக மாறிவிட்டது. அதை விற்று இவர்கள் வறுமையில் இருந்து மீண்டு பெரிய ஆளாக மாறிவிட்டார்கள்.
ஒருநாள் இந்த பெண் குளித்துவிட்டு மொட்டை மாடியில் தலை காயவைத்து கொண்டிருக்கையில் அந்த ஊரின் ராஜா பார்த்துவிட்டு இவள் அழகில் மயங்கி இவளை திருமணம் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார். இவளை பெண் கேட்டு வந்த போது என் அண்ணன்களுக்கு திருமணம் ஆகாமல் நான் செய்துகொள்ள மாட்டேன் என்று சொன்னாள். இதனால் விரைவில் அண்ணன்களுக்கு திருமணம் செய்துவிட்டு அண்ணிகளிடம் இந்த பூஜையை பற்றி சொல்லிவிட்டு இதை செய்தவுடன் தான் எங்கள் வாழ்க்கை மாறியுள்ளது அதனால் நீங்களும் இதனை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு அந்த ராஜாவையே திருமணம் செய்துகொண்டு செல்கிறாள்.
ஆனால், அந்த பெண்ணின் அண்ணிகள் அனைவரும் இந்த உப்பில்லாத கொழுக்கட்டையை யார் சாப்பிடுவார்கள் என்று கூறி அந்த பூஜையை நிறுத்திவிட்டார்கள். அதன் பிறகு தங்கையின் அண்ணன்கள் அனைவரும் மீண்டும் பழைய ஏழ்மை நிலைமைக்கு வந்துவிட்டார்கள்.
ஒரு நாள் அண்ணன்கள் மரம் வெட்டி கொண்டு போவதை பார்த்த தங்கை அவர்களை அழைத்து நலம் விசாரித்து ஒரு பூசணிக்காயில் நகைகளை வைத்து அவர்களிடம் கொடுத்து அனுப்புகிறாள். ஆனால், பூசணிக்காயில் நகை இருப்பது தெரியாமல் ஒரு மோர்கடையில் மோர் குடித்துவிட்டு செல்கையில் பூசணிக்காயை வைத்துவிட்டு சென்றுவிடுகிறார்கள்.
மீண்டும் அடுத்த நாள் இதைப்போலவே மரம் வெட்டுகிறார்கள். அந்த பெண் அதைப்போலவே ஒரு பையில் கொஞ்சம் நகைகளை கொடுக்கிறாள். அண்ணன்கள் தண்ணீர் குடிப்பதற்காக நதியில் இறங்கியபோது அந்த பையை மீன்கள் வந்து இழுத்துக்கொண்டு போய்விட்டது. இப்படி கொடுத்த எதுவும் நிலைக்காமல் போய்க்கொண்டே இருக்கையில் மீண்டும் அடுத்த நாள் அண்ணன் மரம் வெட்டி எடுத்துக்கொண்டு போகும் போது சரி இன்று என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிடுவோம் என்ற எண்ணத்தில் தன் கணவரிடம் தாய் வீட்டிற்கு விருந்திற்கு செல்வதாக சொல்லிவிட்டு சென்றுவிடுகிறாள். வீட்டிற்கு சென்று அண்ணிகளிடம் விசாரிக்கும் போது தான் தெரியவந்தது இவர்கள் இந்த பூஜையை செய்வது நிறுத்திவிட்டார்கள் என்று.
சரி அம்மன் எங்கே என்று கேட்டதும் அதற்கு அண்ணிகள் அம்மனை நதியில் கொண்டு போய் விட்டுவிட்டோம் என்றார்கள். உடனே அந்த பெண் நதிக்கு சென்று பார்க்கும் போது அம்மன் ஒரு கல்லின் ஓரமாக ஒளிந்து கொண்டு இருந்தது. அந்த பெண்ணும் அவளது அண்ணியும் சேர்ந்து மன்னிப்பு கேட்டு தன் புடவையின் முந்தானையை காண்பித்து நின்றுருகையில் அம்மன் தாவி வந்து சேலையில் உட்கார்ந்துகொண்டாள். அம்மனை வீட்டிற்கு அழைத்துவந்து அதே போல் பூஜை செய்தவுடன் இவர்களின் வாழ்க்கையும் மாறிவிட்டது. தொலைந்துபோன பூசணிக்காயும் நகைப்பையும் கூட கிடைத்தன."
இவ்வாறு நாமும் நல்மனதுடன் ஒன்றுகூடி அம்மனை மனமார நினைத்து பூஜை செய்து வந்தால் நம் குடும்பத்தில் உள்ள சங்கடங்கள் நீங்கி செல்வம் பெருகும் என்று நம்பிக்கையில் இந்த பூஜையை பெண்கள் வழிபடுகிறார்கள். கதையின் முடிவில் 'அறிந்தவருக்கு ஆடி, தெரிந்தவருக்கு தை, மறந்தவருக்கு மாசி' என்று கூறி வருடத்தில் மூன்று மாதங்களில் செவ்வாய் கிழமை தோறும் இதனை செய்தால் நல்லது நடக்கும் என்று கூறி முடிப்பார்கள்.
இந்த பூஜையில் சிறப்பு என்னவென்றால், விதவிதமான கொழக்கட்டைகள் செய்வார்கள். விறகுகட்டை, பிணம் எறிவது, பானை, விளக்கு, திரி, தேங்காய், பூசணிக்காய், மீன், எலி மற்றும் இலைகள் போன்ற வடிவங்களில் கொழுக்கட்டை செய்து அம்மனை வழிபடுவார்கள்.