ஈசன் உபதேசம் செய்த ஆலயங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஈசன் உபதேசம் செய்த ஆலயங்கள் பற்றிய பதிவுகள் :

கடலூர் மாவட்டம் ஓமாம்புலியூர் என்ற ஊரில் துயர்தீர்த்தநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பார்வதி தேவிக்கு ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை, சிவபெருமான் உபதேசம் செய்ததாக தல வரலாறு சொல்கிறது. 

மேலும் இத்தல இறைவனை வியாக்ரபாதர் வழிபாடு செய்துள்ளார். எனவே இங்குள்ள இறைவனுக்கு ‘பிரணவ வியாக்ரபுரீஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு. இந்த ஆலயத்தில் அருள்புரியும் அம்பாளின் திருநாமம், ‘பூங்கொடிநாயகி’ என்பதாகும்.

ராமநாதபுரத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருஉத்திரகோசமங்கை திருத்தலம். இங்கு மங்களநாயகி உடனாய மங்களநாதர் திருக்கோவில் இருக்கிறது. இது ராமாயண காலத்திற்கும் முற்பட்ட ஆலயம் என்று சொல்லப்படுகிறது. இந்தத் திருத்தலத்தில் பார்வதிதேவிக்கு, வேதாகமங்களின் ரகசியங்களை சிவபெருமான் உபதேசம் செய்ததாக தல வரலாறு சொல்கிறது. ‘திரு’ என்பது ‘அழகு’ அல்லது ‘சிறப்பு’ என்று பொருள்படும். ‘உத்திரம்’ என்பதற்கு ‘ரகசியம்’ என்றும், ‘கோசம்’ என்பதற்கு ‘சொல்லுதல்’ என்றும் அர்த்தம். ‘மங்கை’ என்பது அம்பாளைக் குறிக்கும். இவையனைத்தையும் சேர்த்தே, இத்தலம் ‘திருஉத்திரகோசமங்கை’ என்று வழங்கப்படுகிறது.

கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் சாலையில் உள்ளது, புளியஞ்சேரி என்ற ஊர். இங்கிருந்து வடக்கே 3 கிலோமீட்டர் தூரம் சென்றால் ‘இன்னம்பர்’ திருத்தலம் இருக்கிறது. ‘இனன்’ என்பது சூரியனைக் குறிக்கும். சூரியன் இத்தல ஈசனை நம்பி வழிபட்ட காரணத்தால் இது ‘இனன்நம்பூர்’ என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் ‘இன்னம்பூர்’ என்று மருவியதாக சொல்கிறார்கள். இங்கு எழுத்தறிநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. வடமொழியில் இவரை ‘அட்சரபுரீஸ்வரர்’ என்கிறார்கள். தமிழுக்கு முதன் முதலில் இலக்கணம் வகுத்துக் கொடுத்தவராக அகத்திய முனிவர் அறியப்படுகிறார். ஆனால் அந்த அகத்தியருக்கு, தமிழ் இலக்கணத்தை உபதேசித்தவர், இத்தல ஈசன் என்று தல புராணம் சொல்கிறது. 

இந்திரனின் வாகனமான வெள்ளை யானைக்கு ‘ஐராவதம்’ என்று பெயர். இந்த யானை, துர்வாச முனிவரின் சாபம் நீங்க இத்தல இறைவனை வழிபட்டது. இதனால் இங்குள்ள இறைவனுக்கு ‘ஐராவதேஸ்வரர்’ என்றும் பெயர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது, கோவிலூர். இதன் புராணப் பெயர் ‘திருவுசாத்தானம்’ என்பதாகும். இங்கு மந்திரபுரீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. இத்தல இறைவன் ‘மந்திரபுரீஸ்வரர்’, ‘சூதவனப் பெருமான்’ என்று அழைக்கப்படுகிறார். இறைவியின் திருநாமம் ‘பெரியநாயகி’, ‘பிருகந் நாயகி’ என்பதாகும். 

சீதையை மீட்பதற்காக ராமன், இலங்கை செல்ல வேண்டியிருந்தது. இடையில் உள்ள கடலைக் கடக்க வேண்டும். இலங்கை செல்வதற்காகவும், ராவணனுடனான போரில் வெற்றி காணவும், வேதாரண்யம், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய மூன்று இடங்களில் பாலம் அமைத்தார். ஆனால் அந்த பாலங்களை கடல் அலைகளும், கடல் ஜீவராசிகளும் சேதப்படுத்திவிட்டன. இதையடுத்து தடைகளை நீக்க வேண்டி ராமன், இந்த ஆலயம் வந்து, சிவபெருமானிடம் மந்திர ஆலோசனைப் பெற்றார். அதன்பிறகே ராமேஸ்வரம் கடலில் பாலம் கட்டியதாக கோவில் தல வரலாறு சொல்கிறது.

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் லிங்க வடிவிலும், உற்சவர் தட்சிணாமூர்த்தியாகவும் அருள்பாலித்து வருகிறார்கள். அம்பாளின் திருநாமம் ஏலவார்குழலி என்பதாகும். தட்சிணாமூர்த்தி இங்கு குருவாக அமர்ந்து, சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்வதாக தல புராணம் சொல்கிறது. மேலும் சுந்தரருக்கு, இத்தல மூர்த்தியானவர் பஞ்சாட்சரம் உபதேசம் செய்ததாகவும், ஆதிசங்கரர், இத்தல ஈசனை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றதாகவும் சொல்கிறார்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top