ஜோதிடத்தில் ராசிபலன் பார்க்கும்போது பலரும் கவனிக்கும் அம்சங்களில் ஒன்று சந்திராஷ்டமம் ஆகும். சந்திராஷ்டமம் என்றால், அன்றைக்கு எதிலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். புதிய முயற்சிகளிலும் ஈடுபடக்கூடாது என்று கூறுவார்கள். அதற்குக் காரணம், ஒருவருடைய மனதுக்கு அதிபதி சந்திரன்.
அவர் ஒரு ராசிக்கு எட்டாவது வீட்டில் மறைவு பெற்றிருக்கும்போது, மனதில் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். மனம் அமைதியின்றி தவிக்கவும் நேரிடும். தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் போகும்.
எனவேதான் பெரும்பாலானோர் சந்திராஷ்டம தினங்களில் எந்த ஒரு புது முயற்சியிலும் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும் என்று முடிவு செய்வர். உண்மையில் சந்திராஷ்டமம் என்பது எல்லோருக்கும் கெடுதல் செய்யாது.
'சந்திராஷ்டமம் என்றாலே, இன்றைக்கு எல்லோர் மனதிலும் ஒருவித அச்ச உணர்வு ஏற்படுகிறது. ஆனால், அப்படிப் பயப்படத் தேவையில்லை. சந்திராஷ்டமம் எல்லா நட்சத்திரக்காரர்களுக்கும் தொல்லை தராது. மேலும் ரிஷபம் மற்றும் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் நல்லது மட்டுமே செய்யும்.
சந்திராஷ்டமம் என்பது ஒரு ராசியில் இருந்து எட்டாவது ராசியில் சந்திரன் சஞ்சரிக்கக்கூடிய காலமாகும். இதை மிகச் சரியாகக் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் ஒரு நட்சத்திரத்துக்குப் பதினேழாவது நட்சத்திரத்தின் பாதத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது அந்த நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம்.
உதாரணமாக விருச்சிகராசியில் சந்திரன் சஞ்சரிக்கும்போது, அந்த ராசி மேஷ ராசிக்கு எட்டாவது ராசியாக அமைகிறது. எனவே விருச்சிக ராசியில் சந்திரன் இருக்கக்கூடிய இரண்டே கால் நாள்கள் மேஷ ராசிக்கு சந்திராஷ்டம நாள்களாகும். ஆனால், மேஷராசியில் பிறந்தவர்கள் அனைவருக்கும் இரண்டே கால் நாள்கள் சந்திராஷ்டமம் என்று சொல்லிவிட முடியாது.
துல்லியமாகச் சொல்வதென்றால், மேஷராசியில் அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் என்று இரண்டு நட்சத்திரங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அதேபோல் விருச்சிக ராசியில் விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் விருச்சிக ராசியில் அனுஷ நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்போது சந்திராஷ்டம நாளாகும்.
மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் அதே விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் நாள் சந்திராஷ்டம நாளாகும்.
மேஷ ராசி கிருத்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரம் 4-ம் பாதத்தில் சஞ்சரிக்கும் வேளை சந்திராஷ்டம காலமாகும்.
கிருத்திகை 2, 3, 4 ஆகிய பாதங்களில் பிறந்தவர்களுக்கு சந்திரன் மூலம் நட்சத்திரம் தனுசு ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் வேளை சந்திராஷ்டம நாளாகும்.
சந்திரன் மாத்ருகாரகன். எனவே ஒருவருக்கு சந்திராஷ்டம நாளில் தாயுடன் கருத்துவேறுபாடு, தாய்வழி உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் போன்ற பலன்களும் ஏற்படும். ஜோதிட ரீதியாக பொதுவாக ஒரு நாளுக்கு பலன் பார்க்கும் போது சந்திரனை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.
அதனால்தான் ஜனன கால சந்திரனுக்கு கோசார சந்திரன் எந்த நிலையில் இருக்கிறாரோ அதை வைத்து முடிவு செய்கிறோம். கடகம் மற்றும் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டம நாள் கெடுதல் செய்யாது. காரணம் கடகம் சந்திரன் ஆட்சி பெறும் ராசி என்பதாலும், ரிஷபம் சந்திரன் உச்சம் பெறும் ராசி என்பதாலும் அந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நன்மையே செய்வார்.
அதேபோல் தன்னுடைய நட்சத்திரங்களான ரோகிணி - அஸ்தம் - திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டம தினத்தில் நல்லது மட்டுமே நடக்கும்.
வளர்பிறையில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டம தினத்தில் நன்மை நடக்கும். அதனால் சந்திராஷ்டமம் என்றால் எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று சொல்லக் கூடாது.