தனுர் மாதப்பிறப்பு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தனுர் மாதப்பிறப்பு பற்றிய பதிவுகள் :

குலதெய்வம், பூர்வீகம், போன்ற நமக்குக் கிடைக்க வேண்டிய பாக்கிய விஷயங்களை குறிப்பது 9-ஆம் இடம். இதனை மூன்றாவது திரிகோண ஸ்தானம் (பாக்கிய ஸ்தானம்) என்பார்கள். 

தமிழ் மாதங்களில் இது ஒன்பதாவது இடம், தனுர் மாதத்தை குறிப்பது. தனுர் என்பது வில்லை குறிக்கும். மார்கழி குளிரில் உடல் வில் போல் வளையும் என்பதால், சீதோஷ்ணநிலையை அனுசரித்து தனுர் மாதம் என்றார்கள். 

தனுர் ராசியான குரு பகவானின் வீட்டில், சூரியபகவான் பிரவேசிக்கும் மாதம். மார்கழி மாதத்தை குறித்து, பகவான் கண்ணன் கீதையில் சொல்லியிருக்கிறார். 12 மாதங்களில் தனக்குப் பிடித்த மாதமாக இந்த மார்கழியைக் குறிப்பிடுகிறார்.

தேவர்களுக்கு இது காலை சந்தி நேரம் என்பதால், வழிபாட்டுக்குரிய நேரம். காலையில் எழுந்து கடும்பனியைக் குறித்துக் கவலையின்றி, நீராடி, நெற்றியில் திலகம் அணிந்து, வாழ்வாங்கு வாழும் வரம் வேண்டி, தெய்வத்தின் சந்நதியை நாள்தோறும் நாடிச் சென்று, பின் மற்ற வேலையைத் தொடங்கும் மாதம் இந்த தனுர் மாதம். 

இதனை அசுப மாதம் என்று சிலர் தவறாகக் கருதுவார்கள். இது இறை வழிபாட்டுக்கு என்றே ஒதுக்கப் பட்ட ஒரு மாதம்.

தெய்வத்தை நினைக்கும் வேளையில் சாதாரண உலகியல் விஷயங்களில் ஈடுபட வேண்டாம் என்பதற்காகத்தான் இந்த மாதத்தில் திருமண முகூர்த்தங்களை வைத்துக் கொள்வதில்லை.

தமிழகத்தின் தொல் சமயங்களான சைவம், வைணவம் இரண்டுக்குமே உரிய மாதம் இந்த தனுர் மாதம் என்பதால் சிவாலயங்களிலும், விஷ்ணு ஆலயங்களிலும் விடிகாலை வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும். மணிவாசகர் அருளிய திருவெம்பாவை திருப்பள்ளி எழுச்சியும், ஆண்டாள் நாச்சியார் அருளிச்செய்த திருப்பாவை, தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சியும் தினசரி வழிபாட்டில் இடம்பெறும். 

ஒருவகையில் முழுக்கமுழுக்க தமிழ் வழிபாட்டை முன்னிறுத்திய உயர் மாதம் என்று இந்த மார்கழி மாதத்தைச் சொல்லலாம். அந்த மாதத்தின் துவக்க நாள் இன்று.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top