திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் வழிபாட்டு முறைகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் வழிபாட்டு முறைகள் பற்றிய பதிவுகள் :

முதலில் திருநள்ளாறு நளதீர்த்தம் சென்று அந்த தீர்த்தக்குளத்தை மானசீகமாக வணங்கி குளத்தின் நடுவில் இருக்கும் நளச்சக்கரவர்த்தி - தமயந்தி மற்றும் குழந்தைகளின் உருவச்சிலைகளை வணங்கி வழிபடுதல் வேண்டும்.

பிறகு நல்லெண்ணெயை தலையில் தேய்த்துக்கொண்டு வடக்கு முகமாகவோ அல்லது கிழக்கு முகமாகவோ ஒன்பது முறை குளித்து தலைமுழுக்காட வேண்டும். பின்னர் பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் ஆகிய திருக்குளங்களுக்கும் சென்று தண்ணீர் தெளித்துக்கொள்ள வேண்டும். பிறகு கோவிலுக்குள் வந்து விநாயக பெருமானை வணங்கி, தர்பாரண்யேஸ்வரர், சனீஸ்வரரை வணங்கி, பிரணாம்பிகை அம்மனை வணங்கி தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள வழிதடத்தின்படி வழிபாடு செய்வது நன்மையை தரும். 

அவரவர் வசதிக்கும், சக்திக்கும் ஏற்றபடி சனிபகவானுக்கு அர்ச்சனை, அபிஷேகம், ஜபம், ஹோமம், தர்ப்பணம், ரஷை தானம், பிரிதீ நவ நமஸ்காரம், நவபிரதட்சணம் முதலியவற்றை செய்யலாம். காலை, மாலை இரு வேளைகளிலும் சனிபகவானை நவபிரதட்சணம் செய்வதும் நல்ல பயன்தரும்.

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒரு நாள் தங்கி இருந்து சுவாமியை வழிபடுவது நல்லது. பூமத்திய ரேகையில் சூரியனுடைய கதிர்வீச்சுகள் எப்படி அதிகமாக இருக்கிறதோ அதே போல சனிக்கிரகத்தினுடைய நீள் வட்டப்பாதையில் உச்சமான சனிக்கிரகத்தின் கதிர்வீச்சுகள் இத்தலத்தில் அதிகமாக கிடைக்கின்றன.

தினந்தோறும் சனிக்கிரகம் விண்வெளியில் இருந்து தன்னுடைய கதிர்களை இப்பகுதியில் வாரி இறைக்கின்றது. அதனால் ஒரு நாள் இங்கு தங்கினால் சனிக்கிரகத்தின் கதிர்வீச்சுகள் நமது உடலில் பட்டு நமக்கு நன்மையான பலன்கள் நிச்சயம் கிடைக்கும். அப்படி ஒரு நாள் முழுவதும் தங்க முடியாதவர்கள் ஒரு இரவு மட்டுமாவது தங்கி காலையில் ஸ்ரீசனிபகவானை வழிபடுவது நல்ல பயனை தரும்.

திருநள்ளாறு சனீஸ்வரபகவானுக்கு உகந்த எள்ளை துணியில் முடிச்சாக கட்டி நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபடுவதற்கு தில தீபம் என்று பெயர். இங்கு அனைத்து ராசிக்காரர்களும் தில தீப வழிபாடு செய்வது சகல தோஷங்களையும் நீக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top