ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன.
சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங்கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த சல்லிக் காசு என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் சல்லிக்கட்டு என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து ஜல்லிக்கட்டு ஆனது என்றும் கூறப்படுகிறது.
பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரிகத்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
சல்லிக்கட்டு தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் நாளன்று விழா போல் கொண்டாடப்படுகிறது. சல்லிக்கட்டு கிராமிய தேவதைகளின் வழிபாட்டு நம்பிக்கையுடன் தொடர்புடையதாகத் திகழ்கிறது. அம்மை, வைசூரி போன்ற கொடிய நோய்கள் பரவிய காலத்திலும், மழையில்லா வறட்சிக் காலங்களிலும், பிள்ளை வரம் கேட்கும் நிலையிலும் வேண்டுதல் நடைபெறும். இக்குறைகள் நீக்கப்பட்டால் பொங்கல் நாளன்று சல்லிக்கட்டுகிறோம் என்பதே வேண்டுகோளாய் அமைகிறது.
மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பேரையூர் போன்ற இடங்களிலும், சிவகங்கை மாவட்டம் சிராவயல், சிங்கம்புணரி, புதூர், அரளிப்பாறை போன்ற இடங்களிலும், புதுக்கோட்டைமாவட்டம் நார்த்தாமலை போன்ற இடங்களிலும் சல்லிக்கட்டு நடைபெறுகிறது. மேலும், திருச்சி, தேனி போன்ற தென் மாவட்டங்களிலும் இவ்விளையாட்டு நிகழ்கிறது.
உலக அளவில் சிறப்பு வாய்ந்தது அலங்காநல்லூர் சல்லிக்கட்டு ஆகும்.