அருள்மிகு வால்மீகீஸ்வரர் திருக்கோயில், மேல்விஷாரம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அருள்மிகு வால்மீகீஸ்வரர் திருக்கோயில், மேல்விஷாரம் பற்றிய பதிவுகள் :

ஒரு முறை பஞ்ச பூத ஸ்தலங்களில் பிருத்வி ஸ்தலமாகிய காஞ்சிபுரத்தில் பார்வதி தேவி சிவனை வேண்டி, மணலால் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து தவமிருந்தார். பார்வதிதேவியின் தவத்தில் மகிழ்ந்த சிவன், பார்வதியை மணம் புரிய வந்தார். 

காஞ்சிபுரத்தில் நிகழ்ந்த அத்திருமணத்தைக் காண தேவர்களும், ரிஷிகளும் அங்கு குவிந்தனர். கூடிய கூட்டத்தினால் ரிஷிகளின் தினசரி பூஜைக்கு இடையூறு நேர்ந்தது. இதனால் ரிஷிகள் அருகிலுள்ள பாலாற்றங்கரை ஆரண்யங்களில் (காடுகளில்)  சென்று   சிவனை   பிரதிஷ்டை செய்து  தினசரி இடையூறின்றி வழிபட்டனர். அவர்கள் அவ்வாறு வழிபட்ட தலங்களே ஷடாரண்ய (ஷட்=ஆறு)  க்ஷேத்ரங்கள் என வழங்கப்படுகின்றன. பாலாற்றின் வடகரையில் மூன்றும் தென்கரையில் மூன்றுமாக அமைந்துள்ள அவற்றுள்  வால்மீகி முனிவர் வழிபட்ட தலம் இது என்பதும், அதனாலேயே இங்குள்ள சிவன் வால்மீகீஸ்வரர் என அழைக்கப்படுகிறார் என்பதும் வரலாறு. மகாசிவராத்திரியன்று ஒரே இரவில் இந்த ஆறு ஸ்தலங்களையும் தரிசனம் செய்வது சிறந்த பலனைக் கொடுக்கும் என்பது ஐதீகம்.

இது அக்னி ஸ்தலமாக கருதப்படுவதால் மாத சிவராத்திரியன்று லிங்கோத்பவருக்கு விசேஷ அபிஷேக பூஜை செய்யப்படுகிறது.

இங்கு சிவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். வால்மீகி முனிவரால் பூஜிக்கப்பட்ட ஸ்தலம்.

ஆண்டுதோறும் மகாசிவராத்திரி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பிரதோஷ மற்றும் பவுர்ணமி தினத்தன்றும் விசேஷ பூஜைகள் நடைபெறும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் தக்ஷிணா மூர்த்திக்கு விசேஷ பூஜை நடைபெறுகிறது. ஆண்டுதோறும் பைரவர் ஜன்மாஷ்டமி அன்று பைரவருக்கு விசேஷ யாகமும், ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் பைரவருக்கு விசேஷ பூஜையும் நடைபெறுகிறது. ஆடி மாதம் வளர்பிறை திருதியை திதியில் ஸ்வர்ண கவுரி ஐஸ்வர்ய ஈஸ்வரர் சிறப்பு யாகம் நடைபெறுகிறது. பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாணம், மற்றும் புரட்டாசி மாதத்தில் துர்காஷ்டமி அன்று சூலினி துர்க்கா பூஜை நடைபெறுகிறது. ஆவணி மாத பஞ்சமியன்று வால்மீகி முனிவருக்கு ரிஷி பஞ்சமி பூஜை நடைபெறுகிறது.

ராகு – கேது தோஷமுள்ளவர்கள் இங்குள்ள நாகர்களுக்கு அபிஷேகம் – பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top