தீட்சை பற்றிய விளக்கம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தீட்சை பற்றிய பதிவுகள் :

தீ என்றால் அளித்தல் அல்லது கொடுத்தல் என்று பொருள். சை என்றால் அழித்தல் என்று பொருள். அதாவது ஞானத்தை அளித்து, அஞ்ஞானத்தை அழித்தல் தீட்சையாகும். தம் சீடனுடைய ஆன்மாவைச் சார்ந்த அழுக்குகளை நீக்கி, அவனுடைய ஆன்மாவைத் தூய்மைப்படுத்தவும், ஞானம் ஊட்டவும், வேண்டிக் குருவானவர் செய்யும் கிரியை தீட்சை எனப்படும். ஆன்மாவின் அழுக்குகளை அழிப்பதும், இறைமைத் தன்மையைக் கொடுத்தலும் தீட்சையின் பயன்களாகும்.

தீட்சையின் வகைகள் :

தீட்சை ஆதார தீட்சை, நிராதார தீட்சை என இரு வகைப்படும். தீட்சை அளிக்கப்படும் முறைக்கேற்ப ஆதார தீட்சையானது நயனம், பரிசம், வாசகம், மானசம், சாத்திரம், யோகம், ஒளத்திரி என ஏழுவகைப்படும்.

நயன தீட்சை :

ஞானகுரு தமது திருக்கண்ணால் சீடரின் கண்களைப் பார்த்து புறத்தில் செல்லக்கூடிய சீடரின் மனத்தை, அகத்தில் பார்க்க அருளுவதே நயன தீட்சையாகும்.

பரிச தீட்சை :

ஞானகுரு தனது திருக்கரத்தினால் சீடருடைய நெற்றியில் தொட்டு, மூலதாரத்தில் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி ஆற்றலை புருவ மத்தியிலும், தலை உச்சியிலும் நிலை நிறுத்துவதே பரிச தீட்சையாகும்.

வாசக தீட்சை :

குரு மந்திரங்களைச் சந்தர்ப்பத்திற்கேற்றவாறும், பொருந்துமாறும் மாணவனுக்கு உபதேசிப்பது வாசக தீட்சை ஆகும். மாணிக்கவாசகருக்கு சிவபொருமான் திருப்பெருந்துறையில் குருந்தமர நிழலில் உபதேசித்தமை வாசக தீட்சையாகும்.

மானச தீட்சை :

சீடன் ஒருவன் எங்கையோ இருந்து கொண்டு தன்னைத் தியானம் செய்யும் போது, அத்தியான சக்தி குருவை ரூடவ்ர்க்கச் செய்யும். அத்தகைய காலங்களில் குரு தான் இருந்த இடத்திலிருந்து அவனுக்கு மனத்தால் அருள்பாலிப்பது மானச தீட்சை எனப்படும். 

சாத்திர தீட்சை :

சீடனுடைய சந்தேகங்களை நீக்க வேண்டிச் சாத்திரங்களை அருளுதல் சாஸ்திர தீட்சை எனப்படும். அர்ஜுனன் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டிக் கண்ணன் அருளிய பகவத் கீதை சாஸ்திர தீட்சைக்கு உதாரணம்.

யோக தீட்சை :

ஞானகுரு தன் அருளால் அகார, உகார, மகார, சிகார, வகார நிலைகளை உணர்த்துவதே யோக தீட்சையாகும். தன் சீடனுக்கு யோகப் பயிற்சிகளை அளித்து பிராணாயாம நுணுக்கங்களை கற்பித்துக் குண்டலினி சக்தியை எழுப்ப வேண்டித் தீட்சை அளித்தல், சமாதி நிலைக்கு அவன் முன்னேறி வர உதவுதல் யோக தீட்சை எனப்படும்.

ஒளத்திரி தீட்சை :

ஆன்மாக்களாகிய உயிர்களை வீடுபேற்றை அமையும் பொருட்டு, சீடனை ஒரு வேள்விக் குண்டத்தின் முன் அமரவைத்து, சக்கரம் வரைந்து அக்கினி வளர்த்து, அவனுக்கு ஞானம் ஊட்டுவது ஒளத்திரி தீட்சை ஆகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top