திருவழும்பூர் வீரட்டேசுவரர் கோயில்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து திருவழும்பூர் வீரட்டேசுவரர் கோயில் பற்றிய பதிவுகள் :

நாகப்பட்டினம் மாவட்டம் திருவழும்பூர் என்ற ஊரில் உள்ள கோயில் வீரட்டேசுவரர் கோயில். இந்தக் கோயிலில் வீரட்டேசுவரர், கிருத்திவாசர் மூலவராக காட்சி தருகிறார். இளங்கிளைநாயகி அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். தாருகா வனம் என்பதே இந்த ஊரில் புராணப் பெயராக இருந்துள்ளது.

தினந்தோறும் இரவு கஜசம்ஹார மூர்த்திக்கு பின்னால் பிரதிஷ்டை செய்யபட்டுள்ள யந்திரத்திற்கு பூஜை நடைபெறுகிறது. அமாவாசை தோறும் சுவாமி தீர்த்தம் கொடுத்தருள்கிறார். ஆடிப்பூரம், பௌர்ணமி பூஜை ஆகியவை இத்தலத்தில் வெகு விமரிசையாக நடக்கிறது.

சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கும் அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில். சிவபெருமானின் உள்ளங்கால் தரிசனம் இங்கு மட்டுமே காண முடியும். சப்த கன்னியரில் வராஹி அம்மன் வழிபட்ட தலம் இது. 

அமாவாசை தோறும் சுவாமி சந்நிதியில் உள்ள தீர்த்தத்தில் சுவாமி தீர்த்தம் கொடுத்தருளும் நாளில் இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபடுவோர்க்கு புத்திர தோஷம் நீங்கி நன்மக்கட்பேறு வாய்த்து வருகிறது. திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை வேண்டிக் கொண்டால் நிச்சயம் நிறைவேறுகிறது. தலத்தின் சிறப்பு மூர்த்தியான கஜசம்கார மூர்த்திக்கு பின்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தெய்வீக யந்திரத்தை வழிபட்டால் பில்லி , சூன்யம், ஏவல், மாந்திரீகம் ஆகியவை விலகி நன்மை பயக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகிறது.

இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் கிருத்திவாசரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மன அமைதி கிடைக்கும். வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

ஆலய தல வரலாறு:

தாருகாவனத்து முனிவர்கள் தாமே தவ முனிவர்கள் எனவும் தாம் செய்யும் நற்கருமங்களே பலனைத் தரும் எனவும் இதற்குக் கடவுள் துணை தேவையில்லை எனவும் கருதி ஆணவம் கொண்டனர்.

அவ்வாறே அவர்களது மனைவியரும் நினைத்தனர். இவர்களது ஆணவத்தையும் கர்வத்தையும் அழிக்கும் பொருட்டு சிவபெருமான் பிட்சாடனராகவும், திருமால் மோகினியாகவும் உருவெடுத்து தாருகாவனம் வந்தனர்.

தாருகாவன முனிவர்கள் மோகினியைக் கண்டும், அவர்களது மனைவியர் பிட்சாடனரைக் கண்டும் தன்னிலை மறந்து முனிவர்கள் மோகினிக்கு பின்பும்,முனிவர்களின் மனைவியர் அழகே உருவான பிட்சாடனர் பின்பும் சென்றனர்.

பிட்சாடனர் வடிவத்திலிருந்த சிவபெருமான் மோகினி வடிவத்திலிருந்த திருமாலோடு  இணைந்து ஐயனாரை பெற்றெடுத்து மறைந்தார். தாருகாவன முனிவர்களின் மனைவியர் பிட்சாடனர் வடிவிலிருந்த சிவபெருமான் பின்னால் சென்றதால் சிவபெருமானின் மீது தாருகாவன முனிவர்கள் கோபம் கொண்டனர்.

ஆபிசார வேள்வி செய்து அக்னி, புலி, மான், மழு, பாம்பு, முயலகன் ஆகியவற்றை சிவபெருமான் மீது ஏவி தோல்வி கண்டு கடைசியாக மத யானையை வேள்வி தீயிலிருந்து உண்டாக்கி சிவபெருமான் மீது தாருகாவன முனிவர்கள் ஏவினர்.

பிட்சாடனர் உருவில் வந்த சிவபெருமான் தாருகாவன முனிவர்களால்  வேள்வி தீயிலிருந்து அனுப்பி வைக்கபட்ட மதயானையின் வயிற்றுக்குள் புகுந்து கொண்டார். உலகம் முழுவதும் இருள் சூழ அம்பிகை ஐயனைக் காணாது அஞ்சினாள்.

சிவபெருமான் யானையின் வயிற்றுக்குள் இருந்து கலக்க, கொல்ல வந்த யானை வலி தாங்க முடியாமல் தவிக்க, சுவாமி யானையின் வயிற்றை கிழித்துக் கொண்டு (ஊர்த்துவ தாண்டவம்) வீர நடனமாடிக் கொண்டு வந்தாராம். அதன்பின் ஆணவம் அழிந்த தாருகாவன முனிவர்கள், வந்தது சிவபெருமான் என்பதை அறிந்து மன்னிப்பு கேட்டனர்.

யானை உருவம் கொண்ட அசுரன் வேண்டிக் கொண்டதற்கு ஏற்ப அவன் கண்டு களிக்குமாறு அவன் தலையும் தோலும் எல்லோரும் எப்போதும் போற்றிப் பணிந்து வணங்கும் பெருமை பெற்றன. கஜ சம்காரம் நடந்ததை அறிந்த தெய்வங்களும் தேவர்களும் வீரட்டேசுவரரின் கீர்த்தியைப் போற்றிப் பாடித் தொழுது பணிந்தனர்.

தெய்வங்களும் தேவர்களும் அரச மரத்தடியில் பூசித்த அழகிய லிங்கப் பரம்பொருள் தற்போது கர்பபகிரகத்தில் ருத்திராட்சப் பந்தலின் கீழ் அமர்ந்துள்ளார்.

சூலம் மழு தண்டு அம்பு பாசம் கபாலம் வில் கேடயம் தாங்கி ஒரு முகமும் எட்டு கரமும் கொண்டு கஜ சம்ஹாரம் செய்த பரமேசுவரன் சுயம்பு லிங்கமாய்ப் பிரகாரத்தில் தனிச் சந்நிதியில் உள்ளார்.

கர்ப்பகிரகத்தில் உள்ள கடவுளுக்குக் கீர்த்தி வாசர் என்றும் சுயம்பு லிங்கமாய் உள்ளவருக்குத் திருமூல நாதர் என்றும் திரு நாமம். யானையின் தலை மேல் ஒரு திருவடி இருக்க மற்றொரு திருவடியின் உட்புறம் (உள்ளங்கால்) தெரியும் வண்ணம் காலைத் தூக்கி நின்று திருக் கரங்களை விரித்துப் பின்னாலிலிருந்து யானையின் தோலைப் போர்த்திக் கொள்ளும் அருமையான திருக்கோலம் கொண்ட அழகிய வீரட்டேசுவரரின் அதி அற்புதமான செப்புத் திருமேனி பெரிய சந்நிதியாக இரண்டு துவார பாலர்களையும் எதிரே தனி நுழை வாசலையும் கொண்டு தெற்கு நோக்கி கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தில் கீர்த்தி வாசருக்கு இடது புறம் அமைந்துள்ளது. தீபாராதனை காட்டும்போது ஒளிவிடும் வீரட்டேசுவரரின் திரு மேனியைக் காண கோடிக் கண்கள் வேண்டும்.

தேடித் தேடித் திரிந்தாலும் திருமால் காண முடியாத சிவனின் திருப்பாத தரிசனத்தைக் கண்டு  நாம் தொழும் போது மனிதப் பிறவி பெற்ற முழுப் பலனையும் நம்மால் உணர முடியும். 

வழுவூர் வீரட்டேசுவரரின் திருவருளால் புதிய யானைத் தலை பெற்ற விநாயகர் திருவழுவூரில் தந்தையை வழிபட்டுத்  தனிச் சந்நிதிகளிலும் பிரகாரத்திலும் உள்ளார். 

 கோபுர வாயிலுக்கு இடது புறம்  பிரம்மன் உண்டாக்கிய பிரம்ம தீர்த்தம் என்ற குளக்கரை அருகே அமைந்துள்ளது.

சுந்தரர் இத்தலத்தில் விரிசடை இல்லாத ஆடல் நாயகனுடன்  இருப்பது  அவர் நடராசரோடு பெற்ற  தெய்வீக அனுபவத்தைக் காட்டுகிறது. ஆடல் நாயகனுக்கு எதிரே திருமுறைச் சந்நிதி உள்ளது. கஜசம்ஹார மூர்த்தி சந்நிதி உள்ள மண்டபத்தில் தியாகராசர் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார்.

திருநாவுக்கரசர் இத்தலத்தை வழுவை வீரட்டம் என்று குறித்துள்ளார்.  வழுத்துதல் என்றால் துதித்தல் என்று பொருள். வழுவுதல் என்றால் நீங்குதல் விடுபடுதல் என்று பொருள். யானை வடிவம் கொண்ட அசுரன் ஒருவன்  நாள்தோறும் சிவ பூசை செய்து எல்லாம் வல்ல கடவுளை வழுத்திப் பரம்பொருளின் திருவருளால் பிறப்பு இறப்பிலிருந்து வழுவிப் பரமேசுவரனின் திரு மேனியைப் போர்க்கும் பேரின்ப முக்தி பெற்ற திருத்தலம் ஆதலால் இத்தலத்திற்கு வழுவூர் என்று பெயர் வரக்காரணமாயிற்று.

திருஞான சம்பந்தர் எட்டு வீரட்டங்களைக் குறிப்பிட்டு அருளியுள்ள திருப்பாடல்களில் இத்தலத்தை குறிப்பாக “வேயுனாடு தோளி அவள் விம்ம வெய்ய மழு வீசி  வேழ உரி போர்த்தே ” என்ற பாடலில் அருளியுள்ளார். இத்தல மூர்த்தியை தேவாரத் திருப் பதிகங்களில் பல பாடல்களில் போற்றுகின்றன.

ஆனால் இத்தலத்தில் அருளிச் செய்யப்பட்ட தேவாரத் திருப் பதிகங்களில் ஒன்று கூடக் கிடைக்கவில்லை. எனவே இது தேவார வைப்புத்தலம் என போற்றப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top