சில ஆலயங்களைப் பற்றி படிக்கும்போதே, அவை நம்மை ஆச்சரியப்படுத்தக் கூடியதாகவும், பிரமிக்க வைப்பதாகவும் இருக்கும். அந்த கோவிலுக்கு சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசையும் ஏற்படும். அதுபோல நம்மை அதிசயக்க வைக்கும் சிவ ஆலயத்தை பற்றி பார்ப்போம்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தலைச்சங்காடு என்ற இடத்தில் சங்காரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் 3 அடி உயரத்தில் மூலவர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
இத்தல மூலவர் சங்கு போன்ற தோற்றத்தில் காட்சியளிப்பது அதிசயமான ஒன்றாகும்.
காக்கும் கடவுளான மகாவிஷ்ணு, இத்தல இறைவனை வழிபட்டு, பாஞ்சஜன்ய சங்கைப் பெற்றதாக தல வரலாறு தெரிவிக்கிறது.
இதன் காரணமாகவே இத்தல இறைவனுக்கு சங்காரண்யேஸ்வரர் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
இந்த ஆலயமும் கூட சங்கு வடிவிலேயே அமைந்திருக்கிறது. பழங்காலத்தில் இந்தப் பகுதியில் சங்கு பூக்களை அதிகமாக பயிரிட்டு, இங்குள்ள ஆலயத்திற்கும், சுற்றியுள்ள ஊர்களில் உள்ள கோவில்களுக்கும் அனுப்பப்பட்டதாக தெரிகிறது.
இதன் காரணமாகவே இந்தப் பகுதிக்கு தலைச்சங்காடு என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.