முப்பெருந்தேவியின் அம்சமாக விளங்கும் திருவாரூர் கமலாம்பிகை

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து முப்பெருந்தேவியின் அம்சமாக விளங்கும் திருவாரூர் கமலாம்பிகை பற்றிய பதிவுகள் :

பெரும்பாலான கோயில்களின் சுற்றுப்பிரகாரத்தில் சிறிய சன்னதிகள்தான் இருக்கும். ஆனால், திருவாரூர் கோயிலின் உள்ளே இருக்கும் சன்னதிகள், கிட்டத்தட்ட தெருவோர கோயில்களின் அளவுக்கு பெரிய அளவில் இருக்கிறது. 

இத்தலத்தில் உள்ள பக்தர்கள் ராகு கால துர்க்கையை வழிபட்டு பதவி உயர்வு பணிமாற்றம் உள்ளிட்ட பல காரியங்கள் வெற்றியடையப் பெறுகிறார்கள். இத்தலத்து சண்முகரை வழிபட்டால் பகை விலகும் நீலோத்பலாம்பாளை வழிபட்டால் அர்த்தஜாமத்தில் நைவேத்தியம் செய்து பால் சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கிறது.

பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவதும் நிகழ்கிறது. ருணவிமோசனப் பெருமானை வழிபட்டால் கடன் தொல்லை, உடற்பிணிகள் ஆகியன விட்டு விலகும். மேலும் பிரதான மூர்த்தியான தியாகேசரை வணங்கினால் திருமண வரம், குழந்தை வரம், கல்வி மேன்மை, வேலை வாய்பபு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவை நிறைவேறுகிறது. 

மூலவர் வன்மீகி நாதரை வழிபட்டால் எண்ணற்ற வரங்களும், செல்வ செழிப்பும் கிடைக்கும், பாவங்கள் நீங்கும், ஆணவம் மறையும். அம்மன் சன்னதியில் உள்ள அட்சர பீடத்தை வணங்கினால் கல்வியறிவு பெருகும். 

திருவாரூரில் மூலவரை வன்மீகநாதர் என்ற திருப்பெயரிட்டு அழைக்கின்றனர். இவர் தலையில் பிறைச்சந்திரனை சூடியுள்ளதைப் போல, இத்தலத்து நாயகி கமலாம்பிகையும் சந்திரனை நெற்றியில் சூடியிருக்கிறாள். க-கலைமகள், ம-மலைமகள், ல-அலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரின் அம்சமாக விளங்குகிறாள். 

வலக்கரத்தில் மலர் ஏந்தியும், இடது கரத்தை இடையில் வைத்தும், கால்களை யோகாசன நிலையில் அமைத்தும் ராணி போல் காட்சி தருகிறாள். சிவன் கோயில்களில் தேவாரம் பாடியதும், "திருச்சிற்றம்பலம்' எனக் கூறி முடிப்பார்கள். சிதம்பரம் நடராஜர் கோயிலே முதல் கோவில் என்ற அடிப்படையில், அங்கு நடராஜர் நடனமாடும் சிற்றம்பலத்தை இப்படி சொல்வதுண்டு. 

ஆனால், சிதம்பரம் கோவிலுக்கும் முந்தைய கோயில் திருவாரூர் எனக் கருதப்படுவதால், இந்தக் கோவிலில் மட்டும் தேவாரம் பாடி முடித்ததும், "திருச்சிற்றம்பலம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை. தமிழகத்திலுள்ள தேர்களிலேயே திருவாரூர் தேர் தான் மிகவும் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும். இதனால் தான் "திருவாரூர் தேரழகு' என்பார்கள். 

சிவபெருமான் இத்தலத்தில் மட்டும் 364 திருவிளையாடல்கள் நிகழ்த்தியுள்ளார். திருவாரூரில் பிறந்தால் முக்தி என்பதால், எமனுக்கு வேலை இல்லாமல் போனது. எனவே இங்கு எமனே, சண்டிகேஸ்வரராக இருந்து இறைவனை வேண்டி தன் வேலையை காப்பாற்றிக் கொண்டார். எமபயம் உள்ளவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பு. 

திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு. சிதம்பர ரகசியம் போல, தியாகராஜ ரகசியம் இந்த கோவிலின் தனிச்சிறப்பு. தியாகராஜருக்கு பின்னுள்ள மூலஸ்தானத்தில் அந்த ரகசியம் உள்ளதாக கூறப்படுகிறது. 

லலிதா சகஸ்ரநாமத்தின் மொத்த வடிவமாக, இத்தலத்து நாயகி கமலாம்பிகை விளங்குகிறாள். எனவே இங்குள்ள தீர்த்தம் "கமலாலயம்' எனப்படுகிறது. பங்குனி உத்திரத்தில் இங்கு நீராடினால், கும்பகோணத்தில் 12 மகாமகம் நீராடிய பலன் உண்டு என்பது ஐதீகம். குளத்தின் நடுவே நாகநாதர் சன்னதி உள்ளது. நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுகின்றனர். 

பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தான் சிவாலயங்களில் பிரதோஷ பூஜை நடத்தப்படும். ஆனால், திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரை பிரதோஷ பூஜை நடத்தப்படுகிறது. இதை "நித்திய பிரதோஷம்' என்பார்கள். இந்த நேரத்தில் தியாகராஜரை முப்பத்து முக்கோடி தேவர் களும் தரிசிப்பதாக ஐதீகம். எனவே, இந்தக் கோவிலுக்கு மாலை வேளையில் சென்றால், எல்லா தேவர்களின் அருளையும் பெற்ற புண்ணியம் கிடைக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top