மங்கள மூர்த்தியான மகா கணபதியின் மந்திரம் மகா சக்தி வாய்ந்தது. சடங்கிலும் பூஜையிலும் முதல் பூஜை, வழிபாடு என முழுமுதற்கடவுளான பிள்ளையாருக்கு இருந்தாலும், எந்தவிதமாக விநாயகரை எப்படி பூஜை செய்து வழிபட்டாலும், அதை அப்படியே ஏற்றுக் கொண்டு அருளை வழங்குவார் கணபதி பெருமான்.
தேவி வழிபாட்டின் முதல் மந்த்ரோபதேசமே மகாகணபதி மந்திரம்தான். மகா கணபதி மந்திரத்தை, எந்த நாளில் வேண்டுமானாலும் சொல்லி வேண்டிக்கொள்ளலாம். வீட்டில் விளக்கேற்றி சாமி கும்பிடும் போது, பிள்ளையார் பெருமானை நினைத்து, அவரை ஆத்மார்த்தமாக வேண்டிக்கொண்டு, மகா கணபதி மந்திரத்தை 11 முறை, 24 முறை, 54 முறை, 108 முறை என சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள்.
சக்தி மிக்க மகா கணபதி மந்திரம் :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லெளம் கம் கணபதயே
வர வரத சர்வஜனம் மே
வசமானய ஸ்வாஹா.
சக்தி வாய்ந்த மகாகணபதியின் மந்திரத்தில் உள்ள ஸ்ரீம் பீஜம் மகாலட்சுமியைக் குறிக்கும்.
அதனால் அந்த மகாகணபதி தன் மேலிரு கரங்களில் தாமரையையும், விஷ்ணுவைக் குறிக்கும் சக்கரத்தையும் ஏந்தியுள்ளார்.
அடுத்து ஹ்ரீம் பீஜம் பராசக்தியைக் குறிக்கும். அடுத்த இரு கரங்களில் பராசக்தியைக்
குறிக்கும்.
பாசத்தையும் ஈசனைக் குறிக்கும் சூலத்தையும் தாங்கியுள்ளார்.
அடுத்துள்ள க்லீம் பீஜம் ரதிதேவியைக் குறிக்கும். காமம் இல்லாமல் இந்த உலகம் இல்லை. எனவே, ரதிதேவியின் அம்சமாக நீலோத்பல மலர்களையும், மன்மதனின் அம்சமாக கரும்பு வில்லையும் தன் அடுத்த கரங்களில் மகாகணபதி ஏந்தியுள்ளார்.
அடுத்துள்ள க்லெளம் பீஜம் பூமாதேவியைக் குறிக்கும். எனவே பூமாதேவியின் அம்சமாக பூமியிலிருந்து விளையும் நெற்கதிரையும், வராஹமூர்த்தியின் அம்சமாக கதையையும் தாங்கி அருள்கிறார்.
அடுத்து கணபதி பீஜமான கம் என்பதைக் குறிக்கும் வகையில் தன் திருக்கரங்களில் மாதுளம் பழத்தையும், உடைந்த தந்தத்தையும் அடுத்த இரு கரங்களில் தாங்கி, தன் மடியில் மரீசி முனிவரின் தவத்திற்கு மெச்சி அவருக்கு மகளாகப் பிறந்து, வல்லபை என்றும் சித்தலக்ஷ்மி என்றும் அழைக்கப்பட்ட தேவியை அணைத்து இருத்தி அருட்காட்சி அளிக்கிறார்.
மகா கணபதி மந்திரம் சொல்வது பன்மடங்கு பலன்களைத் தரும்.
கணபதியின் பீஜமந்திரத்துக்கு மகா பலம் உண்டு.
பீஜமந்திரத்தைச் சொல்லி, கணபதி பெருமானுக்கு வெள்ளெருக்கு மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், வேதனைகளும் துக்கங்களும் பனி போல் விலகி மறையும் என்பது ஐதீகம்.
அல்லல்களில் இருந்தும் கஷ்டங்களில் இருந்தும் நம்மைக் காத்தருள்வார் கணபதி பெருமான். விநாயகப் பெருமானை மனதார பிரார்த்தித்துக் கொண்டு, சிதறுகாய் உடைத்து வேண்டுதலைச் சொல்லுங்கள்.
உங்கள் வேதனைகளையெல்லாம் போக்கியருள்வார் ஆனைமுகத்தான். தடைகளையெல்லாம் தகர்த்து அருளுவான் பிள்ளையாரப்பன்.