தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம். அம்மனுக்கு உரிய மாதமாகவும் இது போற்றப்படுகிறது. பூமாதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதமும் ஆடி மாதம் தான்.
ஜோதிட சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை கர்கடக மாதம் என்பார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத துவக்கம்.
சித்திரை, வைகாசி, ஆனி இந்த மூன்று மாதங்களில் இருக்கக்கூடிய வெயிலின் தாக்கம் குறைந்து ஆடி மாதத்தில் நன்றாக மழை பொழிந்து எல்லா விளை நிலங்களும் விதைக்கப்படக் கூடிய அளவிற்கு புது வெள்ளம் வரும். இந்த புதுவெள்ளத்துடன் வரக்கூடியதுதான் ஆடிப்பெருக்கு. அன்று ஆற்றை ஒரு கன்னிப் பெண்ணாக நினைத்து வணங்குவார்கள். இதில் சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது விசேஷமாகும்.
பெருக்கெடுத்து ஓடிவரும் புதுவெள்ளம், புது நீர் வரும்போது தாலியை மாற்றிக் கொள்ளுதல், கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றை அணிந்து கொள்வது, சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வது போன்ற நிகழ்வுகளை செய்வார்கள்.
ஆடி 18 அன்று பூச நட்சத்திரத்தை விட்டுவிட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார். இது ஒருவித சக்தியைக் கொடுக்கும். ஏனென்றால் புதனும், சூரியனும் நட்பு கிரகங்கள். சூரியன் பூசம் நட்சத்திரத்தினுடைய டிகிரியில் இருந்து மாறி புதன் கிரகம் ஆயில்ய பாதத்தில் வரும்போது ஒருவித கிளர்ச்சி, புத்துணர்ச்சி, செடி கொடிகளில் பச்சையத் தன்மையின் சதவிகிதம் அதிகரிக்கும்.
மேலும், இயற்கை உணவுகளான வெல்லமிட்ட அரிசி, கைக்குத்தல் அரிசி போன்றவற்றை பகிர்ந்துகொள்ளுதல், பொங்கல் வைத்து அம்மனுக்கு விசேஷப் பூஜைகள் செய்வது, புத்தாடை அணிதல், எல்லை தெய்வங்களுக்கு விசேஷ பூஜைகள் நடத்துதல் இவையெல்லாம் நல்ல பலன்களைத் தரும்.