வேதங்களில் உள்ள தெய்வங்களில் முக்கிய தெய்வமாக புகழப்படுவது சரஸ்வதி தேவி ஆகும். அவள் யாகத்தைக் காக்கும் தேவதையாகவும், யாகத்தை நடத்துபவர்களுக்கு அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி ஆகியவற்றைத் தரும் தேவதையாகவும் விளங்குகிறாள்.
சரஸ்வதி தேவியின் அவதார நாளான இந்நாளில் தான் பிரம்மா, சரஸ்வதி தேவியின் கையில் வீணையைக் கொடுத்து அதன் மூலம் உலக மக்கள் அனைவருக்கும் பேசும் சக்தியை அளித்ததாகப் புராணம் கூறுகிறது.
வாக்தேவி, சாரதா, பாரதி, பிராமி, வீணாவாதினி, வாணி என்று போற்றப்படுகின்ற, ஸ்ரீசரஸ்வதி தேவி அவதரித்த தினமே வசந்த பஞ்சமி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த வசந்த பஞ்சமி ஒவ்வொரு வருடமும் தை மாதம் வரும் பஞ்சமியாகும். இந்த வசந்த பஞ்சமியானது இன்று கொண்டாடப்படுகிறது. ஸ்ரீபிரம்மாவின் மனதிலிருந்து சரஸ்வதி அவதரித்ததாகவும் புராணத்தகவல் உண்டு.
சப்தமாதா வரிசையில் ஆறாவதாகவும், வாக்குக்கு அதிபதியாகவும் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி, நம் உடலில் வௌ;வேறு பெயர்களுடன் வியாபித்திருக்கிறாள் என்று சாக்த தந்திர நூல்கள் கூறுகின்றன.
நீல சரஸ்வதி, உக்ரதாரா, சகவதாரா, நீலதாரா என்பவை சரஸ்வதியின் அம்சங்களாகும். வேதங்களில் இன்னொரு சரஸ்வதியும் உண்டு என்றும், அவள் வேதசரஸ்வதி ஆவாள். ஜடாமகுடம் தரித்து, அபயமுத்திரையோடு பத்மாசனத்தில் காட்சி தரும் இந்த வேத சரஸ்வதி, நதி ரூபமானவள்.
நீர்ப் பறவையை வாகனமாகக் கொண்டவள். அம்பிகையின் ஜனனமான வசந்த பஞ்சமி தினத்தில் சங்கீதத்தாலும், பஜனை முதலியவற்றாலும் அம்பிகையை ஆராதிப்பது சிறப்பானதாகும். ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு வசந்த பஞ்சமி தினத்தில் பூஜைகள் செய்து வழிபாடு செய்வதால், ஞான சித்தியாகும். அக்ஷராப்பியாசத்திற்கும் கல்வி சம்பந்தமான புதிய முயற்சிகள் துவங்கவும் ஏற்ற தினம் இது.
ஸ்ரீகிருஷ்ணர், சாந்தீபனி முனிவரிடம் குருகுல வாசம் துவங்கிய நாளும் இந்நாளில் தான். வட மாநிலங்களில் பங்குனி மாதத்தில் வசந்த பஞ்சமி, வசந்த ருதுவின் ஆரம்ப தினமாகக் கொண்டாடபடுகிறது. மேற்கு வங்கத்தில் இந்த வசந்த பஞ்சமி நாள் அன்று தான் வித்யாரம்பம் செய்கிறார்கள்.
இந்நாளில் கல்வியைத் துவக்கவுள்ள குழந்தைகள் முன்பாக பென்சில், பேனா, சிறிய தொழிற் கருவிகள் போன்றவற்றை வைத்து அவற்றில் ஏதாவது ஒன்றை எடுக்கச் சொல்வர். குழந்தை எடுக்கும் பொருளின் அடிப்படையில் அதன் ஆர்வமும், எதிர்காலம் அமையும் என்பது நம்பிக்கையாக பின்பற்றப்பட்டு வருகிறது.
வசந்த பஞ்சமி தினத்தில் அன்னை சரஸ்வதியை வழிபடுவதால் கலைகளில் முன்னேற்றம் பெறுவதோடு மட்டுமில்லாமல் ஆன்மிகத்திலும் உயர்நிலை பெற்று, ஞானம் பெறலாம். நமது உள்ளங்களில் அஞ்ஞானம் நீங்கி, ஞான ஒளி பெருகி, வாழ்வில் வசந்தம் வீசிட சரஸ்வதி தேவியை வணங்குவோம்.
I would like your information and website
ReplyDelete