தை அமாவாசை விரதம் :
தை அமாவாசை மிகவும் புனிதமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது.
தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானது தான். அதனால் தாய், தந்தையரை இழந்தோர், தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைப்பிடிப்பர்.
சாவித்ரி கௌரி விரதம் :
இந்த விரத நாளன்று அதிகாலையில் எழுந்து நீராடி, பின்பு, வீட்டிலே களி மண்ணால் சாவித்ரி தேவி வடிவம் செய்ய வேண்டும்.
பிறகு மௌன விரதம் இருந்து முறைப்படி பூஜை செய்து, ஒன்பது முடிகள் போட்ட நோன்புக் கயிற்றைக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 9 நாட்கள் பூஜித்து, 9-வது நாளன்று மாலையில் பூஜையை முடிக்க வேண்டும்.
இந்த முறைப்படி ஒன்பது ஆண்டுகள் பூஜை செய்ய வேண்டும். ஒன்பதாம் ஆண்டு பூஜையை நிறைவு செய்யும்போது ஒன்பது ஜோடி முறங்களில், ஒவ்வொன்றிலும் ஒன்பது வெற்றிலை பாக்கு - ஒன்பது மஞ்சள் கிழங்குகள் - ஒன்பது பழங்கள் என வைக்க வேண்டும்.
அதன் பிறகு சுமங்கலிகளை வரவழைத்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றைத் தந்து ஒருவருக்கு ஒரு ஜோடி முறம் தந்து அவர்களை வலம் வந்து வணங்கி, வழியனுப்ப வேண்டும்.
இதுபோல இந்த விரதத்தை கடைபிடித்தால், நீண்ட ஆயுள், செல்வம், சந்தான பாக்கியத்தையும் பெற முடியும்.
பைரவ வழிபாடு :
தை மாதத்தில் முதலில் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பைரவரை வடை மாலை சாற்றி வழிபடுவதால், சகல நலன்களும் உண்டாகும்.
வீரபத்திர வழிபாடு :
மங்கள வாரம் எனப்படும் செவ்வாய்க்கிழமை தோறும் ஒரு வருட காலம் வீரபத்திரரை வழிபட, வல்வினைகள் நீங்கும். மேலும் தை மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகளில், இந்த விரதம் இருப்பது சிறப்பு.
இதனால், நீங்காத தடைகள் நீங்கும். பயமும் தீவினைகளும் நம்மைவிட்டு விலகும். கிரக பாதிப்புகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும் அற்புத வழிபாடு இது.