ஸஹஸ்ரநாமத்தை தினசரி பாராயணம் செய்பவர்கள் தேவியின் அருளைப் பெற்றுக் களிக்கின்றனர் என்பது திண்ணம். சச்சிதானந்த வடிவினளாய், எங்கும் நிறைந்திருப்பவளாய், எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவளாய் விளங்கும் ஸர்வேஸ்வரியின் அருட்பிரசாதத்தை நமக்கு பெற்றுத் தரும் பெரும் சக்தி வாய்ந்தது இத்துதி.
இந்த லலிதா ஸஹஸ்ரநாமம் 320 ஸ்லோகங்களைக் கொண்டது. பூர்வபாகம், அதாவது, முதல் 50 ஸ்லோகங்களையும், ஸ்தோத்திரபாகம் (2ம் பாகம்) 182 ஸ்லோகங்களையும், பலஸ்ருதி (3ம் பாகம்) 87 ஸ்லோகங்களையும் கொண்டது.
தேவி சீக்கிரம் பலன் தருபவள். இதற்காக உடம்பை வருத்தி பூஜைகள் செய்ய வேண்டும் என்பதில்லை. ஆத்ம சுகத்திலேயே அவளை ஆராதிக்கலாம். சுலபமாகவே அவளுடைய கிருபையைப் பெறலாம். அம்பிகைக்குப் பிடித்த திவ்ய நாமார்ச்சனையை மேற்கொள்வது எளிது.
‘பவானி’ எனும் 113ம் நாமம் முதல் ‘மஹாத்ரிபுரஸுந்தரீ’ எனும் 234ம் நாமம் வரையிலான இந்த 122 நாமாவளிகளையே தினசரி அர்ச்சனைக்கு தேவி பக்தர்கள் பயன்படுத்தி தேவியை அர்ச்சிக்கலாம். மகத்தான பலனையும் அடையலாம்.
எந்த ராமனால் இந்த வசந்த நவராத்திரி பூஜை ஆரம்பிக்கப்பட்டதோ அந்த ராமன் பிறந்த நவமியன்றே முடிவடையும் பெருமையையும் இந்த வசந்த நவராத்திரி பெறுகிறது. இந்த நவராத்திரியில் தேவியை ஆராதித்து தேவியின் பேரருளையும், ராமபிரானின் திருவருளையும் பெறுவோம்.
அம்பிகையை பல வடிவங்களில் பக்தர்கள் வழிபடுகின்றனர். அவற்றில் குழந்தை வடிவமாக பாலா திரிபுரசுந்தரியாக அருளும் வடிவத்தின் பெருமைகள் சொல்லில் அடங்காதவை. லலிதா பரமேஸ்வரியின் விளையாட்டின் ரூபமாக பண்டாசுர வதத்தின்போது தோன்றியவள் பாலாதேவி. மன்மதனை ஈசன் எரித்த சாம்பலிலிருந்து உற்பத்தியானவன் பண்டன் எனும் அசுரன்.
ஒரு பெண்ணைத் தவிர தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது என வரம் பெற்றான். அந்த உற்சாகத்தில் அவன் தேவர்களையும் ஏனையோரையும் துன்புறுத்தினான். அவர்கள் பராசக்தியைச் சரணடைய, தேவி தன் சேனைகளோடு போர்புரிந்து பண்டனை வதைத்தாள்.
அந்த சரித்திரமே லலிதோபாக்யானம் எனும் பிரசித்தி பெற்ற நூலாக விளங்கி வருகிறது. பிரம்மாண்ட புராணத்தில் உள்ள லலிதோபாக்யானத்தில் அம்பிகை பெருமையை விளக்கும் சுலோகங்கள் உள்ளன.