சான்றோர் நிறைந்த தொண்டை நாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களில் காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள திருமேற்றளி கோயிலும் ஒன்றாகும்.
திருமேற்றளீசுவரர் - திருமேற்றளீசுவர நாதர் எனவும், இறைவி திருமேற்றளி நாயகி எனவும் அழைக்கப்படுகின்றனர்.
"காஞ்சி மாநகர் தன் இலங்கு திருமேற்றளியனாரே' என்று ஒவ்வொரு பாடலிலும் அப்பர் போற்றுகிறார். "கின்னரம் இசைக்கும் இசையை கேட்பவர், நின்றாடும், எந்தை திசை எட்டாகவும், புனித தீர்த்தமாகவும் விளங்குபவர், பக்தர்கள் சித்தம் கொண்டார், கல்வி கரையிலாத காஞ்சி மாநகரில் கதிரவனைப் போல ஒளிவிளங்க திருமேற்றளி நாதர் விளங்குகிறார்' எனப் புகழ்ந்து போற்றுகிறார்.
"திருமேற்றளி உறையும் எந்தாய் உனையல்லால் வேறு ஒருவரையும் மகிழ்ந்தேத்த மாட்டேன்; புகழமாட்டேன்' என்று தன் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் சுந்தரர் கூறி சிவனைப் போற்றுகிறார். தனது கடைசி பாடலில், பாரூர் பல்லவனூர் மதிற் காஞ்சி மாநகர் திருமேற்றளி சிவபெருமானை தாம் பாடி போற்றிய பாடல்களை பாடுபவர்கள் சிவலோகத்தை அடைவார்கள் எனப் புகழ்ந்து பேசுகிறார்.
திருமேற்றளிக் கோயில் அமைந்த தெருவில் திருஞானசம்பந்தரின் கோயிலும், "உற்றுக்கேட்ட முத்தீசர்' என்ற கோயிலும் உள்ளன. இவை திருமேற்றளி கோயிலின் தல வரலாற்றோடு இணைந்துள்ளன.
திருமால் சிவ சொரூப நிலையை பெற வேண்டி, இறைவனை வழிபட்ட தலம் என்ற சிறப்புடன் விளங்குகிறது. "திருமால் தவம் இருக்க, திருஞானசம்பந்தர் இங்கு வருகை தந்து பதிகம் பாடும்போது அது கிடைக்கும்' என இறைவன் கூற, திருமால் தவம் இருந்தார்.
அதுபோலவே திருஞானசம்பந்தர் வந்து பாடிய பொழுது, திருமால் சிவ சொரூபம் பெற்றதாக தல வரலாறு குறிப்பிடுகிறது. கருவறையில் சிவலிங்கத்துக்கு முன்னர் இரண்டு திருவடிகள் உள்ளன. ஞானசம்பந்தர் பாடியபொழுது திருமால் உள்ளம் உருகினார். எனவே, இறைவன் "ஓத உருகீசர்' என அழைத்து வணங்கப்படுகிறார்.
கிழக்குப் பார்த்த கோயில் வாயிலில் மூன்று நிலை கோபுரம். அடுத்து பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன. அடுத்து வலப்புறம் மேற்கு நோக்கிய திருமேற்றளி நாதர் சந்நிதி அமைந்துள்ளது. இடது புறம் காமாட்சி அம்மன் சந்நிதி உள்ளது. முன் மண்டபத்தில் மேல் பகுதியில் தல வரலாறு சுதைச் சிற்பமாகக் காட்சி அளிக்கிறது.
அடுத்து, ஓத உருகீசர் சந்நிதி அமைந்துள்ளது. சோழர்கால கருங்கல் திருப்பணி. கருவறை தேவகோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்கை வடிவங்கள் காட்சி அளிக்கின்றனர். இக்கோயிலின் தலவிருட்சம் வில்வ மரமாகும். தீர்த்தம் "விஷ்ணு தீர்த்தம்' என அழைக்கப்படுகிறது.
பல்லவர்கள் காலத்திலேயே இங்கு கோயில் கட்டப்பட்டு விட்டது. கோயிலைச் சார்ந்த மடம் ஒன்று இருந்ததாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. சோழ மன்னர்கள் காலத்தில் இக்கோயிலுக்கு திருப்பணி செய்யப்பட்டுள்ளது. பின்னர், இராஜநாராயண சம்புவராயன் காலத்தில், கோயிலுக்கு நந்தவனம் அமைக்க இரண்டு வேலி நிலம் தானம் அளிக்கப்பட்டது. விஜயநகர மன்னர் சதாசிவ தேவ மகராஜன் காலத்தில் நெசவாளர்களின் தறிவரி உயர்த்தப்பட்டது பற்றியும், அதன் வருவாய் இக்கோயிலுக்கு அளிக்கப்பட்டதையும் அறிய முடிகிறது.
பல்லவர் காலம் முதல் தொடர்ந்து சிறப்பாக போற்றப்பட்டு, வழிபாடுகள் நடைபெற்று வரும் இக்கோயிலில் 2013 ஆம் ஆண்டு முதல் குடமுழுக்கு நடைபெற்று, சிறப்பாக வழிபாடுகள் நடைபெறுகின்றன.