முன்னோர்கள் வழிபாட்டினை தேய்பிறை திதிகளில் ஆரம்பம் செய்து வளர்பிறை திதிகளில் முடிப்பார்கள். இதுவே வழிபாட்டின் ரகசியம் ஆகும்.
தேய்பிறை திதிகளில் கர்ம வினைகள் அனைத்தும் அழிய தொடங்கும் என்றும், வளர்பிறை திதிகளில் தேவைகள் கிடைக்க ஆரம்பிக்கும் என்பதும் ஐதீகம்.
பைரவரிடம் தேய்பிறை அஷ்டமியில் கடன் தீர வேண்டும் என்று எந்த அளவிற்கு வழிபாடு செய்கின்றோமோ, அதே அளவு நம்பிக்கையோடு வளர்பிறை அஷ்டமியில் வருமானம் பெருக வேண்டும், செல்வ வளம் பெருக வேண்டும், வாழ்நாள் முழுவதும் குடும்பத்திற்கு பஞ்சம் வரக்கூடாது என்று வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தேவையான வேண்டுதலை வைக்க, வளர்பிறை நிலவு போல நம் வாழ்வும் முன்னேற்ற பாதையில் செல்லும் என்பது நம்பிக்கை.
அஷ்டமி புராணக்கதை :
கோகுல அஷ்டமி திதியில் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம் ஆகும். அவர் அந்தத் திதியில் பிறந்த காரணத்தால் அவர் எண்ணற்ற கஷ்டங்களை அனுபவித்தார். ஸ்ரீ கிருஷ்ணன் அவதார புருஷன் என்பதால் அவற்றை சமாளித்தார்.
இறுதியில் வெற்றி பெற்றார். எனவேதான் அஷ்டமி திதிகளில் சுப காரியங்களான திருமணம், கிரஹப் பிரவேசம், சொத்து வாங்குதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஆனால் இந்நாள் தெய்வீக காரியங்களுக்கு தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள உகந்த நாளாகும்.
குறிப்பாக செங்கல் சூளைக்கு நெருப்பு மூட்ட, எதிரிகள் மீது வழக்கு தொடுக்க, ஆயுதங்கள் பிரயோகிக்க, எதிரி நாட்டின் மீது போர் தொடுப்பது போன்ற செயல்களுக்கு அஷ்டமி திதி ஏற்றவையாகும்.
அஷ்டமி விரதம் :
மனிதர்களின் வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்படுவது இயல்புதான். அப்படி நமக்கு ஓர் கஷ்டம் ஏற்படும்போது நாம் சோர்ந்து போகவேண்டாம், துவண்டுவிடவும் வேண்டாம். சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய பைரவரை வழிபட்டு, ஆபத்துகளில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம்.
ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்சத்து அஷ்டமியில் விரதமிருந்து பரமேஸ்வரனை பூஜிப்பதே அஷ்டமி விரதமாகும்.
அஷ்டமி என்பது எட்டாவது திதி ஆகும். மேலும், அஷ்டமி வழிபாடு, ஆபத்திலிருந்து காக்கும் என்பது நம்பிக்கை.
பைரவர் வழிபாடு :
வளர்பிறை அஷ்டமியில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபாடு செய்வது 16 செல்வங்களையும் நமக்கு பெற்றுத் தரும். எந்த தீய சக்தியும் நம்மை நெருங்க விடாமல் காப்பவர் ஸ்ரீ கால பைரவர். அப்படி காக்கும் பைரவரை வழிபட சிறந்த திதியாக மாதத்தின் அஷ்டமி திதி கருதப்படுகிறது.
இந்த திதியில் பைரவரை வழிபடுவது நமக்கு நிறைய நல்ல பலன்களை கொடுக்கும்.
வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரம், சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து, 11 தீபங்கள் ஏற்ற வேண்டும்.
ஏழரை சனியால் பாதிக்கப்பட்டவர்கள் துன்பங்கள் குறைய பைரவர் சன்னிதானத்தில் 2 மண் அகல் விளக்குகளை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, சிறிதளவு கருப்பு எள் இட்டு, திரி போட்டு தீபம் ஏற்றி மனதார வழிபாடு செய்யுங்கள்.
பஞ்சதீப விளக்கு :
காலபைரவர் பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆள்வதால் இவருக்கு கோவிலில் பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி, பஞ்ச விளக்குகளை ஏற்ற வேண்டும்.
அதாவது 5 அகல் விளக்குகளை எடுத்து கொள்ளுங்கள். அதில் ஒவ்வொரு விளக்கிலும் ஒவ்வொரு வகையான எண்ணெய் ஊற்றி தனித்தனியே தீபத்தை ஏற்ற வேண்டும்.
நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்கள் தான் பஞ்ச தீப எண்ணெய்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
ஒவ்வொரு விளக்கிலும் இந்த ஒவ்வொரு எண்ணெய்களை ஊற்றி, பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்றி, பைரவருடைய மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் எல்லா விதமான பிரச்சனைகளும் தீரும்.
இந்த நாளில் பைரவாஷ்டகம் வாசிப்பது உள்ளத்திலும், எண்ணத்திலும் நல்ல விஷயங்களை விதைக்கும். மேலும் நேர்மறை எண்ணங்கள் பெருகி குடும்பத்தில் இருக்கும் துஷ்ட சக்திகள் அத்தனையும் நீங்க செய்து எல்லா வளங்களையும், நலன்களையும் பெற்று சுபிட்சம் அடைய செய்யும்.
குறிப்பு :
வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு காலத்தில்தான் பைரவரை வழிபட வேண்டும் என்று கிடையாது. வளர்பிறை அஷ்டமி திதி இருக்கும் நாளில் எந்த நேரத்திலும் பைரவரை வழிபட்டு பயன் பெறலாம்.