சியாமளா நவராத்திரி 2025

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சியாமளா நவராத்திரி பற்றிய பதிவுகள் :

30-01-2025 முதல் 07-02-2025 வரை

தை அமாவாசை கழிந்த மறுநாள் பிரதமையிலிருந்து நவமி வரை அம்பிகையை, பூரண கலசத்தில் ஆவாஹனம் செய்து, பூஜிக்கலாம்.

சியாமளா நவராத்திரியில் ஐந்தாவது தினமான வசந்த பஞ்சமியில் ஸ்ரீ சரஸ்வதி தேவி திருஅவதாரம் செய்ததாக ஐதீகம். எனவே, தென்னாட்டில் விஜயதசமி போல், வடநாட்டில் வசந்த பஞ்சமி அன்று வித்யாரம்பம் செய்கிறார்கள். அன்றைய தினம் அம்பிகையை வழிபடுபவருக்கு, கலைகள் அனைத்திலும் நிறைந்த பேராற்றல் கிட்டும்.

சியாமளா நவராத்திரி தினங்களில் அம்பிகையை வழிபட்டு, ஸ்ரீ மாதங்கி தேவியின் அருளால், வெற்றி பெறுவோம்.

சியாமளா சகஸ்ரநாமம், ராஜமாதங்கி சகஸ்ரநாமம் என இரண்டு அதியற்புதமான சகஸ்ரநாமங்கள் உள்ளன. இவற்றைத் துதித்துப் பயனடையலாம். காளிதாசனின் சியாமளா தண்டகமும் மிக அற்புதமானதே. ஆதிசங்கரரின் மீனாட்சி பஞ்சரத்னத்தைத் துதித்தாலும் சிறப்பான பயன்களைப் பெறலாம்.

ஸ்ரீலலிதா மஹாதிரிபுர சுந்தரியின் கையிலிருக்கும் கரும்பு வில்லின் அதிதேவதையே சியாமளா தேவி. இவள் அறிவு என்னும் தத்துவத்தின் தலைவியாக விளங்குபவள். மனம் என்னும் வில்லைக் கொண்டு அறிவு என்னும் தத்துவம் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே சியாமளா தேவியின் அருள் இருந்தால்தான் மனதையும் அறிவையும் எளிதில் அம்பிகையிடம் லயிக்கச் செய்ய முடியும்.

தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்படுபவள். கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள். வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆதலால் ‘மந்திரிணீ’ என்று அறியப்படுபவள். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள்.

ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் மந்திரியாகவும் விளங்குவதால், சியாமளா தேவிக்கு மந்த்ரிணி என்னும் பெயருமுண்டு. எனவே சியாமளா தேவியின் ஆலோசனை பெற்றே பரமேஸ்வரி எதையும் செய்வாள். அம்பிகையின் வலப்புறம் வீற்றிருக்கும் பெருமை கொண்டவள் சியாமளா தேவி. மன இருளையகற்றி ஞான ஒளியைத் தருபவள் இவள்.

கலைகளின் தேவதையாகவும், அரசபோக வாழ்வை அளிப்பவளாகவும் இவளே விளங்குகிறாள். கலைகளில் தேர்ச்சி பெற, பதவி உயர்வு பெற, வாக்கு வளம் பெற, இவளை வணங்க வேண்டும்.

நவாவர்ண பூஜையும், குங்கும அபிஷேகமும் அம்பாள் ராஜமாதங்கிக்கு பிடித்தமானது. மீனாட்சி அன்னையே ராஜமாதங்கியின் அம்சம்தான் என்பதால், மீனாட்சியை வணங்குவதே ராஜ ஷியாமளாவை வணங்குவது போல்தான்.

எனவே இந்த சியாமா நவராத்திரி நாட்களில் சியாமளாவை மீனாட்சியம்மனை வணங்கினால் சங்கீத சாகித்ய கலையருள் கிட்டுமென்பது திண்ணம். மாணவ மாணவியர் கல்வியில் உயர்வு பெறுவதும் திண்ணம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top