கார்த்திகை சோமவாரத்தில் மட்டுமே நடை திறக்கப்பட்டு, ஆலமரத்தையே சிவபெருமானாக வழிபட்டு, பிரசாதமாக ஆலமர இலையும் திருநீறும் மட்டுமே வழங்கப்படும் சிறப்பு வாய்ந்த பொது ஆவுடையார் கோவிலில் பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்.
பொதுவாக சிவன் கோவிலின் தல வரலாறு மனதை எழுப்பி ஆன்மீக அலைகளை முழுவதுமாக உணர செய்யும் வகையில் அமைந்திருக்கும்.. அப்படியான ஒரு கோவில் தான் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரக்கலக்கோட்டையில் பிரசித்தி பெற்ற பொது ஆவுடையார் கோவில்.
வான்கோபர் மற்றும் மஹாகோபர் என்ற இரு முனிவர்களுக்கு இறைவனைச் சரணடைய இல்லறம் மற்றும் துறவறம் இரண்டுமே சரியான வழி என்றும் ஒன்றை விட மற்றொன்று உயர்ந்ததில்லை என்றும் வெள்ளால் மரத்தின் கீழ் காட்சியளித்து திருவிளையாடல் நிகழ்த்தினார்.
அதன் காரணமாகவே இத்தல இறைவன், 'பொது ஆவுடையார்' என்றும், மத்தியஸ்தம் செய்தவர் என்பதால் 'மத்தியபுரீஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வரும் சோமவாரத்தில் மட்டுமே இக்கோவிலில் நடை திறக்கப்படுறதாம். அதற்கு காரணம் இறைவன் நள்ளிரவு பூஜை முடித்த பிறகு, தனது பரிவாரங்களுடன் இத்தலத்து வெள்ளால மரத்தின் கீழ் எழுந்தருளி, அந்த மரத்திலேயே ஐக்கியமானார் என்ற தல வரலாறு கூறுவதால் அன்று இரவு 12 மணியளவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகின்றன. மற்ற நாட்களில் நடை திறக்கப்படுவதில்லை.
எனவே இத்தலத்தை குரு தலமாகவும் கருதலாம். இங்குள்ள தல மரத்தைச் சுற்றி சுவர் எழுப்பப்பட்டுள்ளது. சுவருக்கு உட்பட்ட பகுதியே கருவறையாகவும், ஆலமரமே சிவபெருமானாகவும் விளங்குகிறது. பக்தர்கள் ஆலமரத்தையே சிவபெருமானாக வழிபட்டு வருகின்றனர். மரமே மூர்த்தியாக விளங்குவது இக்கோவிலின் சிறப்பாகும்.
மேற்கு நோக்கி வீரசக்தி விநாயகர் சன்னிதியும், அருகில் திருக்குளமும் உள்ளன. அம்பாளுக்கென்று தனி சன்னிதி இல்லை. விநாயகர் சன்னிதிக்கு எதிரில் உள்ள புளியமரத்தின் அடியில் அலங்கார உடையில் வான்கோபரும், துறவற உடையில் மகா கோபரும் வடக்கு நோக்கி தவக்கோலத்தில் வீற்றிருக்கும் சன்னிதிகள் உள்ளன. இந்த ஆலமரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. எனவே பக்தர்களுக்கு இலையும், திருநீறும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
இக்கோவிலில் கடைசி சோமவாரத்தின் போது வரும் பக்தர்கள் தங்கம், வெள்ளி, பித்தளை ஆகியவற்றால் ஆன பொருட்கள், பணம், நெல், துவரை, உளுந்து, பயறு, எள் முதலிய நவதானியங்களையும், தேங்காய், மாங்காய், புளி, மிளகாய், காய்கறிகள் போன்ற பல்வேறு பொருட்களையும், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளையும் காணிக்கையாகச் செலுத்தி வழிபட்டுச் செல்கின்றனர்.