சங்கரரும் நாராயணனும் இணைந்து பங்குனி உத்திர திருநாளன்று சாஸ்தாவை தோற்றுவித்ததாக புராணங்கள் கூறுகின்றன.
சாஸ்தா உலக நன்மைக்காக பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளார். இந்த ஒவ்வொரு அவதாரமும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக எடுக்கப்பட்டது.
சாஸ்தாவின் எட்டு முக்கியமான அவதாரங்கள் :
1. ஆதி மஹா சாஸ்தா
2. தர்ம சாஸ்தா
3. ஞான சாஸ்தா
4. கல்யாண வரத சாஸ்தா
5. சம்மோஹன சாஸ்தா
6. சந்தான பிராப்தி சாஸ்தா
7. வேத சாஸ்தா
8. வீர சாஸ்தா
சாஸ்தாவின் இந்த எட்டு முக்கியமான அவதாரங்களைப் பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்.
ஆதி மஹா சாஸ்தா:
இது சாஸ்தாவின் மூல அவதாரமாகக் கருதப்படுகிறது. இந்த வடிவத்தில் அவர் ஞானத்தையும் அமைதியையும் அருள்கிறார். இவரை வணங்குவதன் மூலம் ஆன்மீக முன்னேற்றம் மற்றும் மன அமைதி கிட்டும். இவர் இந்த பிரபஞ்சத்தின் மூலாதாரம் ஆவார். மனிதர்கள் முதல் ஒவ்வொரு உயிரினங்களின் புருவ மத்தியில் இவரே வீற்றிருக்கிறார்.
தர்ம சாஸ்தா (ஐயப்பன்):
இது மிகவும் பிரபலமான அவதாரமாகும். சிவன் மற்றும் மோகினி (விஷ்ணுவின் பெண் அவதாரம்) ஆகியோரின் மகனாக ஐயப்பன் (மணிகண்டன்) அவதரித்தார். மகிஷாசுரனின் தங்கையான மகிஷியை வதம் செய்வதற்காகவும், பக்தர்களுக்கு அருள்புரிவதற்காகவும் இந்த அவதாரம் எடுக்கப்பட்டது. சபரிமலையில் இவர் முக்கியமாக வழிபடப்படுகிறார்.
ஞான சாஸ்தா:
இந்த வடிவத்தில் சாஸ்தா ஞானத்தின் குருவாகக் காட்சி அளிக்கிறார். தட்சிணாமூர்த்தியைப் போன்ற தோற்றத்துடன், ஞான முத்திரையுடன் வீற்றிருக்கிறார். இவரை வழிபடுவதன் மூலம் அறிவு, விவேகம் மற்றும் தெளிவு கிடைக்கும்.
கல்யாண வரத சாஸ்தா:
இந்த அவதாரத்தில் சாஸ்தா அவரது தேவியரான பூரணை மற்றும் புஷ்கலையுடன் காட்சி அளிக்கிறார். திருமணத்தடை, தோஷம் உள்ளவர்கள் இவரை வழிபடுவதன் மூலம் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
சம்மோஹன சாஸ்தா:
இந்த வடிவம் குடும்பத்தையும், வீட்டையும் காக்கும் தெய்வமாக வணங்கப்படுகிறது. குடும்பத்தில் அமைதி, ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சி நிலவ இவரை வழிபடுவது சிறந்தது. இவரையே கிராம புறங்களில் பரவலாக வழிபடுகின்றனர். ஐயனார், கருப்பசாமி போன்றே இவரும் மக்களுடன் மக்களாக திறந்த வெளிகளில் பரிவார மூர்த்திகளுடன் அருள்பாலிக்கிறார்.
சந்தான பிராப்தி சாஸ்தா:
குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த சாஸ்தாவை வழிபடுகிறார்கள். மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
வேத சாஸ்தா:
சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கும் இந்த சாஸ்தாவை வழிபடுவதன் மூலம் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம். மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் இவரை வழிபடுவது நல்லது.
வீர சாஸ்தா:
ருத்ர மூர்த்தியின் அம்சமான இந்த சாஸ்தாவை வணங்குவதால் தீய சக்திகள், எதிரிகள் மற்றும் தடைகள் அகலும். தைரியத்தையும் மன உறுதியையும் இவர் அருள்கிறார்.
ஒவ்வொரு சாஸ்தா அவதாரமும் ஒரு தனித்துவமான குணத்தையும் சக்தியையும் கொண்டுள்ளது. பக்தர்கள் தங்கள் தேவைக்கேற்ப இந்த அவதாரங்களை வழிபட்டு பலன் பெறுகிறார்கள். தமிழ்நாட்டில் அய்யனார் என்ற பெயரிலும் சாஸ்தா வழிபடப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.