கழறிற்றறிவார் நாயனார்

0

கழறிற்றறிவார் நாயனார்
 
சேரமான் பெருமான் நாயனார்





மலைநாடு எனப் புகழப்படும் வளமிக்கச் சேர நாட்டின் ஒப்பற்ற தலைநகரம் கொடுங்கோளூர். இந்நகருக்கு மாகோதை என்று ஒரு பெயரும் உண்டு. இங்குள்ள கோயிலின் பெருநாமம் திருவஞ்சைக் களம் என்பதாகும். எம்பெருமானுக்கு அஞ்சைக் களத்தீசுரர் என்று பெயர். அம்மையாரின் பெயர் உமையம்மை. இத்தலத்திலுள்ள புண்ணிய தீர்த்தத்துக்கு சிவகங்கை என்று பெயர். அந்நகர் செய்த நற்றவப் பயனாய் சேரர் குலம் தழைக்க அவதாரம் செய்தார் பெருமாக் கோதையார். மாகோதையார் மன்னர்க் குலத்திற்குரிய படைக்கல பயிற்சியைக் கற்காமல் கண்ணுதலார் கமல மலர்ப்பாதங்களைப் பற்றுவதற்கான சிவ மார்க்கங்களை உணர்ந்து சமய நூல்களைக் கற்று வந்தார். அரவணிந்த அண்ணலின் சிந்தனையில் அரச போகத்தையும், அரண்மனை வாழ்வையும் வெறுத்தார். சிவனார் எழுந்தருளியிருக்கும் திருவஞ்சைக் களம் என்னும் திருத்தலத்தை அடைந்து கோயிலருகே மாளிகையொன்று அமைத்துக்கொண்டு சிவத்தொண்டு புரிந்து வரலானார். சித்தத்தை சிவன்பால் வைத்துச் சிந்தை குளிர்ந்தார். ஒவ்வொரு நாளும் வைகறைத் துயில் எழுவார். தூய நீராடுவார். திருமேனி முழுவதும் திருவெண்ணீற்றை முறையோடு வேதநெறிப்படி அணிந்து கொள்வார். மலர்வனம் செல்வார். வழிபாட்டிற்கு உகந்த நறுமலர்ச் செடி, கொடிகள் வளர, பாத்தி வெட்டிகளையெடுப்பார். நீர் பாய்ச்சித் திருப்பணிகள் பல செய்வார். மாலையில் மலரக் கூடிய மலர் வகைகளையும், காலையில் மலர்ந்த மலர்களையும், வகை வகையாகப் பறித்துக் கொள்வார். வித விதமான மாலைகள் தொடுத்து கோயிலுக்குள் செல்வார். கோயிலைக் கூட்டி மெழுகி கோமய நீரால் சுத்தம் செய்வார்.

இறைவனின் பாத கமலங்களில் தாம் தொடுத்து முடித்துப் பூமாலைகøளைச் சாத்தி தமிழ்த் தேனால் எடுத்து முடித்த திருப்பதிகப் பாமாலைகளால் போற்றுவார். தம்மையே மறந்து வழிபடுவார்! இவ்வாறு இப்பெருமாக் கோதையார் திருவஞ்சைக் களத்துப் பெருமானுக்குத் தொண்டுகள் பல புரிந்து வரும் நாளில் கொடுங்கோளுரிலிருந்து அரகோச்சி வந்த செங்கோற்பொறையன் என்னும் மன்னன் பிறவிப் பெருங்கடலைக் கடக்கக் கருதினான். மன்னன் பதவி என்ற பட்டத்தை உதறினான். துறவி என்ற பட்டத்தைத் தாங்கினான். நாடு களைந்தான்; காடு புகுந்தான்; அருந்தவம் ஆற்றத் தொடங்கினான். அதன் பிறகு அமைச்சர்கள், நன்கு ஆராய்ந்து பெருமாக்கோதையாரையே அரசனாக்குவது என்ற முடிவிற்கு வந்தனர். ஒருநாள் அமைச்சர்கள் அரச மரியாதையுடன் மங்கல வாத்தியங்கள் முழங்கத் திருவஞ்சைக் களத்தை அடைந்தனர். பெருமாக் கோதையாரை வணங்கி அரசாட்சியை ஏற்றுக்கொள்ளுமாறு பணிவன்போடு வேண்டிக் கொண்டனர். அமைச்சர்கள் மொழிந்ததைக் கேட்டு, திருமாக் கோதையார் சற்று சித்தம் கலங்கினார். 

அரசு கட்டிலில் அமர்வது அரனார் திருவடித் தொண்டிற்கு இடையூறு ஏற்படுத்துவதாகும். அரண்மனை வாழ்வு அரவணிந்த அண்ணலை மறந்திருக்கச் செய்யும். மாய சக்தி படைத்ததாகும் என்றெல்லாம் பலவாறாக தமக்குள் எண்ணினார். அமைச்சர்களைப் பார்த்து, அமைச்சர் பெருமக்களே! யான் அரசாட்சி ஏற்பதென்பது எமது சிவத்தொண்டிற்கு பாதகமான செயலாகும். அறிந்தும் தவறு செய்யலாமா? அறம் வளர்க்கும் செங்கோலை நான் தொட வேண்டுமென்றால், தோடுடைய செவியன் திருவருள் எனக்குக் கிட்ட வேண்டும். இறைவன் திருவருளினால் மட்டுமே என்னால் மகுடத்தைச் சூட்டிக்கொள்ள முடியமே அன்றி, வேறு வழியே கிடையாது என்றார் அமைச்சர்களும் சம்மதித்தனர்.

பெருமாக்கோதையார் அமைச்சர்களை அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்று எம்பெருமானைப் பணிந்து தமது விண்ணப்பத்தை பகர்ந்தார். அப்பொழுது ஆலயத்திலே ஒரு பேரொளி பிறந்தது; எம்பெருமானின் அருள்வாக்கு எழுந்தது. சேரர் குலக்கொழுந்தே! வருந்தற்க! நீ அரச பதவியை மனமகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வாயாக! உலகிலுள்ள உயிர்களுக்கு என்றும்போல் தொண்டு செய்து வருவாயாக. விலங்குகள், பறவைகள் போன்ற மற்றெல்லா ஐந்தறிவு படைத்த உயிர்களும் பேசக் கூடிய பேச்சை அறியக்கூடிய ஆற்றலையும் உனக்கு அளித்தோம். அரசின் வல்லமையையும், பெரும் கொடையையும், ஆயுதம், வாகனம் முதலிய அரசர்க்குரியனவற்றையும் உனக்கு அளிக்கிறோம். எம்பெருமான் திருவாய் மலர்ந்து அருளிய அத்தனைப் பேறுகளையும் பெற்றார் பெருமாக்கோதையார். 

திருமாக்கோதையார் அமைச்சர்களிடம், அரசை ஏற்றுக்கொள்கிறோம் என்று அறிவித்தார். அனைவரும் பெருமகிழ்ச்சி பூண்டனர். பெருமாக்கோதை எம்பெருமான் திருவருளோடு கொடுங்கோளூரை அடைந்து , நாளும் கோளும் நன்னிலையுற்ற ஓர் பொன்னாளில் மங்கலச் சடங்குகள் நடைபெற இம்மைக்கும் மறுமைக்கும் பொருந்தக் கூடிய பொன் மணிமுடியினைச் சூட்டிக் கொண்டார். பெருமாக் கோதையார் சேரமான் பெருமாள் ஆனார். மணிமுடிப் பெருவிழா சிறப்புற முடிந்ததும் சேரமான் பெருமான் திருவஞ்சைக்களம் கோயில் சென்று முடிபட நிலத்தில் வீழ்ந்து பெருமானை வணங்கினார். பட்டத்து யானை மீது அமர்ந்து பரிசனங்கள் பணிபுரியச் சிறப்புடன் மேளதாளங்களும், வேத கோஷங்களும் இன்னிசைகளும் முழங்க திருநகரை வலம் வந்தார். அப்பொழுது வண்ணான் ஒருவன் உவர்மண் சுமந்தவாறு வந்து கொண்டிருந்தான். உவர்மண் மேனியில் பட்டு மழை நீரோடும், வியர்வையோடும் கலந்து உலர்ந்து காணப்பட்டது.

பவனி வரும் சேரமான் பெருமான் அவ்வண்ணானின் வெண்ணிக் கோலத்தைக் கண்டு, திருவெண்ணீற்றுப் பொலிவுடன் எழுந்தருளும் சிவனடியார் திருக்கோலத்தை நேரில் காண்பது போல் நினைத்து மகிழ்ந்தார். யானையின் மீதிருந்து கீழே இறங்கினார். வண்ணான் அருகே சென்று அவனைத் தொழுது நின்றார். வண்ணான் மன்னருடைய செயலைக் கண்டு அஞ்சி நடுநடுங்கினான். அவன் உவர்மண் பொதியைக் கீழே போட்டுவிட்டு, மன்னரின் பாதங்களைப் பணிந்து, அடியேன் அடிவண்ணான் என்றான். அவன் மொழிந்தது கேட்டு மன்னர் மகிழ்ச்சிப் பெருக்கோடு, அடியேன் அடிச்சேரன் ! நீவிர் திருவெண்ணீற்றை நினைப்பித்தீர்! வருந்தாது செல்வீர்களாக! என்று விடையிறுத்தார். அடியார் மட்டு அரசர் கொண்டுள்ள அளவற்ற அன்பினைக் கண்டு அமைச்சர்களும், மெய்யன்பர்களும் அதிசயித்து அஞ்சலி செய்து வாழ்த்தினர். 

மன்னர் மனநிறைவோடு மாடவீதியையும் கூட கோபுரத்தையும் கடந்து, தமது பொன் மாளிகைக்கு எழுந்தருளினார். வைரச் சிம்மாசனத்தின் மீது வெண்கொற்றக் குடை நிழலில் அமர்ந்தார். ஆண்களும், பெண்களும், அன்பர்களும், அடியார்களும் வாசனைப் பொடிகளையும், மலர்களையும் தூவி மன்னரை வணங்கினர். சேரமான் பெருமாள் வாழ்க! என்று மக்கள் எழுப்பிய கோஷம் விண்ணை முட்டியது. சேரமான் பெருமான் நாயனார் அரசோச்சும் பொற்காலத்தில் இவரிடம் பாண்டியரும், சோழரும் பெரும் நண்பர்களாயிருந்தனர். மனுநீதி முறைப்படி அரசோச்சி வந்த சேரமான் பெருமாள் நாயனாருக்குப் பல தேசத்துச் சிற்றரசர்கள் கப்பங்கட்டி வந்தனர். அகத்தும், புறத்தும் பகைமையை அறுத்து அறநெறி காட்டும் சிவநெறியை வளர்த்து அரசாட்சி நடத்தி வந்த இவரது காலத்தில் சைவம் தழைத்தது. பக்தி பெருகியது; எங்கும் சுபிட்சம் நீடித்தது.<

போற்றுகின்ற பேரரசினால் பெறுகின்ற பயனும், அருந்தவப் பேறும், சீரும், செல்வமும், எல்லாம் ஆடுகின்ற அம்பலவாணரின், காக்கின்ற கமலமலர்ப் பாதங்களே என்று கருத்தில் கொண்டார் சேரமான் பெருமான்! எம்பெருமானைத் தினந்தோறும் மணமிக்க மஞ்சள் நீர், சந்தனம், நறும்புகை, தூப தீபம், திருவமுது முதலிய வழிபாட்டுப் பொருட்களுடன் சிவாகம முறைப்படி மன்னர் வழிபட்டு வந்தார். இவ்வாறு வழிபாடு புரிந்து வரும் தொண்டரின் பக்திக்கு கட்டுப்பட்ட அம்பலவாணர் அடியாருக்கு அளவிலா இன்பம் பெருக வழிபாட்டின் முடிவில் தமது அழகிய காற்சிலம்பின் ஒலியினைக் கேட்டு இன்புறுமாறு செய்தார். 

ஒருமுறை மதுரையம்பதியில் பாணபத்திரன் என்று ஒரு புலவன் வாழ்ந்து வந்தான். இவன் எந்நேரமும் இன்னிசைப் பாடலால், அன்போடு சிவனை வழிபட்டு வந்தான். அவனது இசையில் சிந்தை மகிழ்ந்த பெருமான், தம்மைப் போற்றிவரும் பைந்தமிழ்ப் புலவன் பாணபத்திரனின் வறுமையைப் போக்கிப் பெரும் செல்வத்தை அவனுக்கு அளிக்கத் திருவுள்ளம் கொண்டார். ஒருநாள் பாணபத்திரன் திருக்கோயிலுள் துயில் கொண்டபோது பகவான் கனவிலே எழுந்தருளினார். திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுள், பாணபத்திரா! அன்பால் என்பால் பாடிப் பணியும், உன்பால் பற்றியுள்ள வறுமையைப் பனிபோல் விலகச் செய்ய எப்பொழுதும் உன்போல் என்பால் அன்புடைய சேரமானுக்கு ஒரு ஸ்ரீமுகம் எழுதித் தருகின்றோம். காலம் கடத்தாமல் அக்காவலனைச் சென்று கண்டு, வறுமை நீங்கி வருவாயாக! என்று ஆணையிட்டு திருவோலையைத் தந்தருளினார். பாணபத்திரன் கண் விழித்தெழுந்து, கண்ணுதலார் தந்தருளிய திருவோலையைக் கண்களிலே ஒற்றிக் கொண்டார்.

அத்திருவோலையைச் சென்னிமீது சுமந்துகொண்டு கொடுங்கோளூரை அடைந்தார். சேரர் குல மாமணியைக் கண்டு வணங்கினார். சங்கப் புலவராகிய சோமசுந்தரக் கடவுள் தந்தருளிய திருமுகப் பாசுரத்தைக் கொடுத்தார் பாணபத்திரன்! அதனை வாங்கிக்கொண்ட சேரமான் பெருமாள் நாயனார், அடியேனையும் ஒரு பொருளாக எண்ணி எம்பெருமான் திருமுகம் கொடுத்தருளினாரே! எம்பெருமான் திருவருள்தானே! என்னே! புலவர் பெருந்தகையே ! எம்மை மதித்து வந்து உமது ஆற்றலைத்தான் என்னெற்று போற்றுவேன் என்று பூரிப்போடு பகர்ந்தார். 

மதிமலி புரிசை மாடக்கூடல் எனத் தொடங்கும்&nbsp; திருமுகப் பாசுரத்தைப் படித்தார் சேரமான் பெருமாள். நமது அரண்மனைக் களஞ்சியத்திலுள்ள பல்வகையான நவநிதிகள் முழுவதையும் ஒன்று விடாமல் ஏற்றபடி பெரும் பொதியாகக் கட்டி எடுத்து வாருங்கள் என்று அமைச்சர்களுக்கு ஆணையிட்டார். அமைச்சர்கள் பொதி பொதியாக நவநிதிகளைக் கொண்டு வந்து குவித்தனர். மன்னர் பாணபத்திரனை வணங்கி நிதிகளையெல்லாம் வாரி வாரி வழங்கினார். அத்தோடு திருப்தியடையாமல், மன்னன் அப்புலவனிடம், யானை, குதிரை, பசுக்கள் முதலியவைகளையும், எமது அரசாட்சியையும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று பணிவன்போடு பகர்ந்தார். இவற்றை எல்லாம் கண்டு வியந்த பாணபத்திரன், வேந்தரின் உயர் குணத்திற்குத் தலைவணங்கினான். பொங்கி வந்த எல்லையில்லா மகிழ்ச்சிப் பெருக்கில் அகமும் முகமும் மலரத் தமக்கு வேண்டிய பொருள்களை மட்டும் எடுத்துக் கொண்டான். அரசே! தாங்கள் கொடைவள்ளல் மட்டுமல்ல; அடியார்களின் நெஞ்சத்திலே கோயில் கொள்ளும் காவலன், குவலயம் போற்றும் மெய்யன்பர். இவ்வடியேன் தேவையானவற்றை எடுத்துக் கொண்டோம். அரசாட்சி முதலியவற்றைத் தாங்களே கைக்கொண்டு ஆளுதல் வேண்டும் என்பதுதான் ஆலவாய் அண்ணலின் ஆணை என்று விடை பகர்ந்தார் பாணபத்திரன்.

அரசர் புலவரை ஒரு யானை மீது அமரச் செய்து தாம் அளித்த விலையில்லாச் செல்வங்கள் அனைத்தையும் கரிமா முதலியவற்றின் மீது ஏற்றி வழி அனுப்பி வைத்தார். சேரப் பேரரசு பாணபத்திரன் எல்லையைத் தாண்டிச் செல்லும்வரை தொடர்ந்து சென்று அன்போடு வழி அனுப்பி வைத்தார். பாணபத்திரனும் மதுரை சென்று மட்டற்ற மகிழ்ச்சியோடு மனையறத்தை வளர்த்ததோடு சங்கத் தமிழையும் வளர்த்தார். இவ்வாறு வியக்கத்தக்க முறையில் அரசாண்டு வந்த சேர மன்னர் வழக்கம்போல் ஆலயப் பணியையும் தவறாமல் நடத்தி வந்தார். ஒருநாள் நாயனார் சிவ வழிபாட்டை முடித்ததும் வழக்கமாகக் கேட்கும் பரமனின் பாதமணிச் சிலம்பொலி கேட்கவில்லை. மன்னர் வருந்தினார். கண்களில் நீர் வழிய, கரமிரண்டையும் மேலே உயர்த்தி, ஆலமுண்ட அண்ணலே! அடியேன் செய்த பிழை யாது? என்னை ஆளும் ஐயனே! இனியும் இவ்வெளியோன் உயிர் தரிவது யார் பொருட்டு? எதன் பொருட்டு? கூர்வாளும், செங்கோலும் ஏந்தி ஆள்வதை விட கூர்வாளுக்கு இரையாகி மாள்வதே நல்லவழி! எம்பெரும் தலைவா! அடியேன், அறிந்தோ அறியாமலோ பிழை ஏதும் புரிந்திருந்தால் பிழையைப் பொருத்தருளும் என்று பரமனின் பாதகமலங்களைப் பற்றி பணிந்தார். 

மன்னன் உடைவாளை உருவி மார்பில் நாட்ட முயன்றபோது எம்பெருமான் முன்னை விடப் பன்மடங்கு ஒலியோடு கலீர், கலீர் என்று சிலம்பொலியை மிகுதியாகக் கேட்கும்படிச் செய்தார். நாயனார் எய்திய உவப்பிற்குத்தான் அளவேது! நிலமுற வீழ்ந்து வணங்கி எழுந்தார். அருட்கடலே! அன்புப் புனலே ! அமிழ்தம் அளித்த அரசே! வழக்கம்போல் ஐயன் சிலம்பொலியை முன்னால் கேட்கச் செய்யாதிருந்ததன் காரணம் யாதோ? என்று கேட்டார். அப்பொழுது விண் வழியே அசரீரி வாக்கு எழுந்தது. சேரனே! எம்மால் தடுத்தாட் கொள்ளப்பட்ட தோழன் சுந்தரன் தில்லையம்பலத்துப் பொன்னம் பலத்தை வழிபட்டு, வண்ணத் தமிழால் பதிகம் பாடினான். தேனென இனிக்கும் அவனது அருட்பாக்களில் அன்பு வயப்பட்டு என்னை மறந்த நிலையில் ஈடுபட்டிருந்தமையால் உன் வழிபாட்டு முடிவில் சிலம்பொலியைச் சற்று தாமதித்து கேட்குமாறு செய்தோம்.

இவ்வருள் வாக்கு கேட்டு, சேரமான் பெருமாள் நாயனார், இத்தகைய பெருமைமிக்க அருந் தொண்டனைக் காணப் பெறாத நான் பிறவி எடுத்து என்ன பயன்? போற்றதற்குரிய அப்பெருந்தகையை இக்கணமே நேரில் கண்டு மகிழ்ந்து களிப்பேன். தில்லையம்பதி சென்று ஆடுகின்ற அரனாரைப் போற்றி எம்பெருமானை மதிமயங்க வைத்த ஒப்பற்ற திருத்தொண்டராம் வன்றொன்டனையும் கண்டு வணங்கி வழிபட்டே வருவேன் என்று எண்ணினார். நாளாக, நாளாக அரசர்க்கு அரண்மனை வாழ்வும், அரசபோகமும் வேம்பாக கசந்தது. திருத்தொண்டர்கள் கூட்டத்தில் ஒருவராய் வாழ்வதனையே பேரின்பமாகக் கொண்டார். 

அதற்கு மேல் மன்னன் அரசாள விரும்பவில்லை. ஆட்சிப் பொறுப்பை அமைச்சர்களிடம் ஒப்படைத்தான் மன்னன். ஓர் நன்னாளில் வேல் ஏந்திய மல்லர்களும், வில்லேந்திய வீரர்களும், வாள் ஏந்திய காவலர்களும், அறம் கூறும் அமைச்சர்களும், நால்வகைப் படையினரும் புடை சூழ அத்தாணி மண்டபத்தில் அரசோச்சிய அருங்காவலன் அரச போகத்தைத் துறந்தான். திருவஞ்சைக் களத்து அண்ணல் அடிபோற்றி தில்லைக்குப் புறப்பட்டார். தில்லை வந்தடைந்த சேரப் பெருந்தகையை, தில்லைவாழ்  அந்தணர்களும், அன்பர்களும், அடியார்களும் வேதம் ஒலிக்க, மங்கல முழக்கங்கள் விண்ணை முட்ட எதிர்கொண்டு அழைத்து வந்தனர். சேரமான் பெருமாள் நாயனார் ஏழு நிலை கோபுரத்தை இசைத் தமிழால் ஏற்றி துதித்து, நிலமுற பணிந்தெழுந்து உள்ளே சென்றார். சிற்றம்பலத்துக்கு முன் சென்று, சித்தம் ஒடுங்க, பக்தி, காதலாகிக் கசிந்துருக, தமிழ்ச் சுவை அருளோடு கூடி ஆறாகப் பெருகிவர, பொன் வண்ணத் தந்தாதி என்னும் பிரபந்தத்தினைப் பாடியருளினார் சேரமான்.



தில்லையிலே பல நாட்கள் தங்கியிருந்து, அற்புதக் கூத்தாடுகின்ற நாதரின் திருவடியைப் பாடி பரவி ஓர் நாள் திருவாரூருக்குப் புறப்பட்டார் நாயனார். வரும் வழியில் திருஞான சம்பந்தர் அவதாரம் செய்த சீர்காழியை அடைந்து தோணியப்பரைத் தொழுது புறப்பட்டு திருவாரூரை வந்தடைந்தார். அது சமயம் சுந்தரர், திருநாகைக் காரோணத்திற்கு சென்று அரனாரைத் துதித்துப்பாடி பொன்னும் மணியும், பட்டாடைகளும், கஸ்தூரியும், குதிரையும் பெற்றுத் திருவாரூர் அடைந்திருந்தார். சுந்தரர் தம்மைக் காணவரும் சேரன் பெருமாள் நாயனாரை, அன்புடன் எதிர்கொண்டு அழைத்தார். சேரமான் சுந்தரர் சேவடியைப் பணிந்தெழுந்தார். இருவரும் ஆரத்தழுவி அக மகிழ்ந்தனர். இவ்வாறு அன்பின் பெருக்கால் சேரமான் பெருமாள் நாயனாரும், தம்பிரான் தோழரும் ஒருவரோடு ஒருவர் அன்பு பூண்டு நின்றனர். 

இவர்களது ஒப்பற்ற தோழமையைக் கண்ட திருவாரூர்த் தொண்டர்கள் சேரமான் தோழன் என்னும் திருநாமத்தைச் சுந்தரருக்குச் சூட்டி மகிழ்ந்தனர். சுந்தரர் சேரர் பெருமானை அழைத்துக்கொண்டு தியாகேசப் பெருமானின் தாள் போற்றி திருவாரூர்த் திகழும் மணிக்கோவை என்னும் பிரபந்தத்தைப் பாடினார். சுந்தரரின் செவிக்கினிய கீதத்தில் சேரமான் சிந்தை மகிழ்ந்தார். பக்தியில் மூழ்கினார். சுந்தரர், மன்னரைத் தமது திருமாளிகைக்கு அழைத்தார். சேரமான் சுந்தரரின் அழைப்பிற்கு இணங்கி சுந்தரர் திருமாளிகைக்குச் சென்றார். பரவையார் மன்னவனையும், மணவாளனையும் முகமன் கூறி வரவேற்றாள். மன்னருக்கு மனைவி நல்லாளை அறிமுகம் செய்து வைத்தார் சுந்தரர். கணவர் பணித்ததற்கு ஏற்ப, மன்னர்க்கு சிறப்புமிக்க விருந்து சமைத்தாள் பரவையார்.

சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் ஈடு இணையில்லா அன்பிற்கு அடிமையாகி ஆனந்த வெள்ளத்தில் மகிழ்ந்து மூழ்கி இன்பம் கண்டனர். ஒருமித்த மனமுள்ள, இவ்விரு சிவனருட் செல்வர்களும், சில நாட்கள் திருவாரூரிலிருந்து தியாகேசப் பெருமானை வழிபட்டு பெருமானின் பேரருளைப் பெற்றுக் களிப்புற்று வந்தனர். இருவரும் பாண்டிய நாடு செல்லக் கருதி ஒருநாள் திருவாரூரிலிருந்து புறப்பட்டனர். திருக்கீழ்வேளூர், திருநாகைப்பட்டிணம், திருமறைக்காடு, திருவகத்தியான்பள்ளி, திருப்புத்தூர் முதலிய சிவத்தலங்களை வணங்கிப் பதிகம்பாடி பரவசமுற்றவாறு மதுரை மாநகரை வந்தடைந்தனர். பாண்டிய மன்னன், தக்க மரியாதையுடன் இருவரையும் எதிர்கொண்டு வரவேற்றார். பாண்டிய நாட்டிற்கு வந்திருந்த பாண்டியன் மகளை மணம் புரியப்போகும் சோழ அரசனும் உடன் சென்று உபசரித்தார். 

இப்படி மூவேந்தரும் ஒன்றுபட்டனர். சுந்தரமூர்த்தி நாயனாருடன் சொக்கலிங்கப் பெருமானின் கோயிலுக்குச் சென்றனர். சேரமான் பெருமாள் நாயனார், பாண்டியனிடமும், சோழனிடமும் விடைபெற்றுக் கொண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளுடன் புறப்பட்டார். பல திருத்தலங்களைத் தரிசித்துப் பதிகம் பாடி உளம் மகிழ்ந்தவாறு இருவரும் சோழ வளநாட்டை வந்தணைந்தனர். இருவரும் சோழ நாட்டுத் திருத்தலங்கள் பலவற்றை வணங்கியவாறு மீண்டும் திருவாரூரை அடைந்தனர். தியாகேசப் பெருமானை வணங்கி மகிழ்ந்த இருவரும் பரவையார் மாளிகைக்கு எழுந்தருளினர். சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனாரின் விருந்தினராகச் சிலகாலம் தங்கியிருந்து நாடோறும் நலம் தந்த தியாகேசப் பெருமானை வழிபட்டு வந்தார். சுந்தரரும், சேரரும் எல்லையில்லா இன்பப் பெருக்கில் இன்புற்று வாழ்ந்து வரும் நாளில், சேரர்கோன் சுந்தரரைத் தம் நாட்டிற்கு வரும்படி வேண்டினார். சுந்தரர் அவரது விருப்பத்தை மன நிறைவோடு ஏற்றுக்கொண்டு&nbsp; பரவையாரிடம் விடைபெற்றுக்கொண்டு, சிவத்தொண்டர்களுடன் திருவாரூர் எல்லையை நீத்தார்.

சுந்தரரும் சேரரும் காவிரிக் கரையோரமுள்ள சிவக் கோவில்களை வழிபட்டவாறு திருக்கண்டியூர் என்னும் தலத்தை அடைந்து, எம்பெருமானை வணங்கி வழிபட்டு வெளியே வந்தனர். காவிரியாற்றின் தென்கரையில் அமைந்திருந்த திருக்கண்டியூர் தெய்வத்தைத் தரிசித்தனர். இரு ஞானச் செல்வர்களும், வடகரையில் அமைந்திருக்கும் திருவையாற்றில் எழுந்தருளியிருக்கும் ஐயாற்றுப் பெருமானை வழிபட்டு வர எண்ணினர். அவர்கள் உள்ளத்தில் பக்திப் பெருக்கெடுத்து ஓடியதுபோல், காவிரியிலும், ஓடங்கள் செல்ல முடியாத அளவிற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. இரு ஞானமூர்த்திகளும் திகைத்து நின்றனர். சுந்தரமூர்த்தி நாயனார் கண்டியூர் நீலகண்டப் பெருமானைப் பணிந்து பரவும் பரிசு எனத் தொடங்கித் திருப்பாட்டுக்கள் ஒவ்வொன்றின் இறுதிதோறும் ஐயாருடைய அடிகளோ என்று அன்பு மேலிட அழைத்தவராய்த் திருப்பதிகத்தினைப் பாடினார். 

சிவபெருமான் திருவருளால் காவிரி நதி பிரிந்து அருட்செல்வர்களுக்கு வழி காட்டியது. இருவரும் அவ்வழியாக அக்கரை சென்று ஐயாற்றுப் பெருமானைக் கண்டு மகிழ்ந்தனர். மீண்டும் வடகரையை அடைந்து தங்கள் சிவயாத்திரையைத் தொடர்ந்தனர். மேற்குத் திசை நோக்கிப் புறப்பட்ட இருவரும் பல தலங்களைத் தரிசித்தவாறு கொங்கு நாட்டின் வழியாக மலைநாட்டின் எல்லையை அடைந்தனர். மலைநாட்டு மக்கள் தங்கள் அரசரையும், ஆரூர்ப் பெருமானையும் மலர் தூவி வணங்கி வரவேற்றனர். மலைநாட்டு இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்த ஆரூரர், சேரமான் பெருமான் நாயனாருடன், கொடுங்கோளூரை வந்தணைந்தார். அரசரையும், சுந்தரரையும் வரவேற்க ஆயிரக்கணக்கான அன்பர்களும், அடியார்களும் கூடினர். சேரமான் பெருமான் நாயனார் சுந்தரரை அழைத்துக் கொண்டு திருவஞ்சைக் களம் ஆலயத்துள் சென்றார்.

இரு தவச் செம்மல்களும் திருசடைப் பெருமான் திருமுன் பக்திப் பிழம்பாக நின்று கொண்டிருந்தார்கள். சுந்தரர், முடிப்பது கங்கை எனத் தொடங்கும் திருப்பதிகம் ஒன்றைப் பாடினார். சேரர் பெருமான் சுந்தரரோடு புறத்தே வந்து, அலங்காரமாக நிறுத்தப்பட்டிருந்த யானை மீது அவரை எழுந்தருளச் செய்தார். தாமும் கூடவே எழுந்தருளினார். வெண் சாமரங்களை வீசிக்கொண்டு, திருமாளிகைக்குப் புறப்பட்டார். தம்பிரான் தோழரும், அத்தோழருக்குத் தோழரும் உலா வந்த காட்சியைக் கண்டு நகர மக்கள் வாழ்த்திப் பணிந்தனர்; மலர் தூவி வணங்கினர். இங்ஙனம் விண்ணவர் வியக்குமளவிற்குத் திருக்கோலம் வந்த இரு தவச் செம்மல்களும் திருமாளிகையின் மணிவாயில் வழியாக அரண்மனை வந்தனர். சேரர் பெருமான் சுந்தரரை அரண்மனைக்குள் அழைத்துச் சென்று தமது அரியணையில் அமரச் செய்து அவரது பாதகமலங்களைச் சிவாகம முறைப்படி வழிபாடு புரியத் தொடங்கினார். சுந்தரர் இது செய்தல் தகாது என்று தமக்கு பாதபூசை புரிய வந்த சேரரைத் தடுத்தபோது சேரமான் பெருமாள், அன்பின் மிகுதியால் செய்யும் வழிபாடுகள் எல்லாவற்றையும், ஏற்று அருளல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சுந்தரர் அவரது அன்பிற்குக் கட்டுப்பட்டார். அவரோடு திருவமுது செய்து மகிழ்ந்தார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் சேரப்பெருந்தகையுடன் அரண்மனையில் தங்கியிருந்தார். சுந்தரர் சேரமான் பெருமாள் நாயனாருடன் இருந்து வரும் நாளில் அவருக்குத் திருவாரூர்ப் பெருமானின் நினைவு வரவே அப்பொழுதே புறப்பட்டார். சேரமான் பெருமாள் நாயனார் சுந்தரரைப் பிரிய மனமில்லாமல் மனம் உருகிக் கண்ணீர் வடித்தார். 

இருப்பினும் சுந்தரர் விருப்பத்திற்கு ஏற்ப அவரது பயணத்தைத் தடுக்க விரும்பவில்லை. அவரது விருப்பம்போல் அரசு கட்டிலில் அமர்ந்தார். சேரமான் பெருமாள், சுந்தரர்க்குப் பொன்னும் பொருளும் மணியும் பலவகையான பண்டங்களையும் கொடுத்து அவரது திருவடிப் பணிந்து எல்லைவரைச் சென்று தொண்டர்களுடன் வழி அனுப்பி வைத்தார். திருவாரூரை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சுந்தரர், மிக்க சிரமத்துடன் ஒருவாறு திருமுருகன் பூண்டி என்னும் இடத்தை நெருங்கினார். களைப்பு மேலிடத் தொண்டர்களுடன் ஓரிடத்தில் தங்கினார். எம்பெருமான், தம்முடைய பூதகணங்களை வேடுவர் உருவில் அனுப்பி, நாயனார் கொண்டு வரும் பொருள்களை எல்லாம் கவர்ந்து கொண்டு வரச் செய்தார். சுந்தரர்க்கு வேதனை மேலிட திருமுருகன்பூண்டியை அடைந்து அங்கு குடிகொண்டிருக்கும் எம்பெருமானிடம் கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடினார். எம்பெருமான் சிவகணங்கள் மூலம் கவர்ந்து வந்த பொருள்களை எல்லாம், கோயிலின் முன்னே மலைபோல குவிக்கச் செய்தார். சுந்தரர் அகமகிழ்ந்தார். தொண்டர்களுடன், பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு திருவாரூரை வந்தணைந்தார். திருவாரூர்த் தியாகேசப் பெருமானை வணங்கி வழிபட்டு, பரவையார் மாளிகைக்கு எழுந்தருளினார் சுந்தரர்!

குருபூஜை


கழறிற்றறிவார் நாயனாரின் குருபூஜை ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது

கொடைக் கழறிற்றறிவார்க்கு அடியேன்.



Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top