கோட்புலி நாயனார்
காவிரி பாயும்
சோழவள நாட்டிலே - நாட்டியத்தான் குடி என்னும் சிவத்தலத்தில் - வீரவேளாளர் மரபிலே
வாழ்ந்தவர் கோட்புலி நாயனார். இச்சிவத்தொண்டர் சோழருடைய படைத் தலைவராகப் பணியாற்றி
வந்தார். இவர் அஞ்சாத வீரர். கொலை செய்வதில் வல்ல புலி போன்ற குணம் மிக்கவராதலால்,
இவருக்கு கோட்புலியார்
என்று காரணப் பெயர் ஏற்பட்டது. இப்பெயர் இவரது இயற்பெயராக இருக்கும் என்று
எண்ணுவதற்கில்லை. எண்ணற்றப் போர்க்களம் சென்று பகையரசர்களை வென்று மன்னர்க்கு
எல்லையற்ற வெற்றியைத் தேடிக் கொடுத்தார். அதனால் அவருக்கு இச்சிறப்புப் பெயர்
ஏற்பட்டிருக்கலாம். வீரம் வளர்த்த கோட்புலியார் அரனாரிடத்து எல்லையில்லா பக்தி
பூண்டிருந்தார். இவர் தமக்கு கிடைக்கும் அளவற்ற நிதிகள் அத்தனைக்கும் நெல் வாங்கி
வீட்டில் மலை மலையாகக் குவித்தார். சேமித்த நெற்குவியலைக் கோயில் திருப்பணிக்குப்
பயன்படுத்தினார். ஒருமுறை நாயனார் அரச கட்டளையை ஏற்றுப் போர்முனைக்குப்
புறப்பட்டார்.
போருக்குப் போகும் முன்னே தம் குடும்பத்தாரிடமும், உறவினரிடமும், சுற்றத்தாரிடமும், எம்பெருமானுக்காகச் சேமித்து வைத்த நெல்லை
யாரும் தன் சொந்த உபயோகத்திற்காக எடுக்கக் கூடாது. அவ்வாறு எடுப்பது சிவத்துரோகமாகும்.
இது இறைவன் ஆணை. கோயில் திருப்பணிக்கு எவ்வளவு வேண்டுமென்றாலும் எடுத்துக்
கொடுக்கலாம் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டு புறப்பட்டார். கோட்புலியார் சென்ற
சில நாட்களுக்கெல்லாம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் எல்லோரும் உணவு
கிடைக்காமல் கஷ்டப்பட்டனர். அச்சமயம் கோட்புலியாரின் உறவினர் பசியின் கொடுமை
தாங்காமல் அடியார் வழிபாட்டிற்காகச் சேமித்து வைத்திருந்த நெல்லைத் தாராளமாக
எடுத்துச் செலவு செய்தனர்.
போருக்குச்
சென்றிருந்த கோட்புலியார் வெற்றி பெற்று நாடு திரும்பினார். சுற்றத்தார்களும்,
உறவினர்களும் நெற்குவியலை
எடுத்து உண்டதை அறிந்து சினங்கொண்டார். எம்பெருமானுக்கு வழிபாடு செய்யாமல் தங்கள்
வறுமைக்கு நெல்லைப் பயன்படுத்திக்கொண்ட சுற்றத்தார் அத்தனை பேரையும் அழைத்தார்.
ஒருவரையும் தப்பி ஓடிவிடாதபடி காவல்புரியச் செய்து தம் தந்தையார், தாயார், உடன்பிறந்தார் மனைவியர்கள், சுற்றத்தார் ஆகிய அனைவரையும் வாளினால் வெட்டி
வீழ்த்தினார். அதன் பிறகு அவரது வாளுக்குத் தப்பிய பிழைத்தது ஓர் ஆண்பிள்ளை!
அப்பிள்ளையைக் கண்ட காவலன் நாயனாரிடம், ஐயனே! பாலகன் நம் குடிக்கு ஒரே புதல்வனாகும். இவன் அன்னத்தை உண்டதில்லை.
இக்குழந்தையை மட்டுமாவது கொல்லாமல் அருள்புரியும் என்று பணிவோடு வேண்டினான். அவன்
மொழிந்ததைக் கேட்டு, மேலும் கோபம் வளர
நாயனார், இப்பாலகன்
அன்னத்தை உண்ணாவிடினும், அன்னத்தை உண்ட
அன்னையின் மூலைப் பாலை உண்டவன் என்று கூறி அக்குழந்தையையும் தமது வாளினால் இரு
துண்டாக்கினார். அப்பொழுது சடைமுடிப் பெருமானார் விடையின் மீது எழுந்தருளினார்.
அன்பனே! உன் உடைவாளால் உயிர் நீத்தோர் அனைவரும் பிறவி என்னும் பாவத்தை விட்டு
அகன்றவராயினர். அவர்கள் சிவபுரியில் இன்புற்று வாழ்வர். நீ இந்நிலையில் நம்முடன்
அணைவாய் என்று அருள் புரிந்தார் சிவபெருமான். கோட்புலியார் காட்டிய பக்தியின்
சக்தி அனைவருக்கும் பிறவாப் பெருவாழ்வைக் கொடுத்தது!
குருபூஜை
கோட்புலி
நாயனாரின் குருபூஜை ஆடி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
வேல்நம்பி
கோட்புலிக்கும் அடியேன்.