பொய்யடிமை இல்லாத புலவர்
கலை மேவும்
நீலகண்டப் பெருமானின் மலரடிக்கே ஆளான பொய்யடிமை இல்லாத புலவர்கள் தில்லைவாழ்
அந்தணர்களைப் போன்ற தொகையடியார்கள் ஆவார்கள். இவ்வடியார்கள் செய்யுட்களில் காணும்
சொற்களுக்கு நன்கு தெளிவாகப் பொருத்தமான பொருள் கொள்வார்கள். செம்மை தரும் பயனுடைய
நூல்கள் பல கற்ற இவ்வடியார்கள் கற்றவர்க்குத் தாம் வரப்பாக விளங்குவார்கள்.
சித்தத்தை சிவனார் சேவடிக்கே அர்ப்பணித்த, மெய்யுணர்வு பெற்ற இவ்வடியார்கள், சிவபெருமானை மட்டுமே முக்காலமும் எண்ணினர். மெய்யன்புடன் அரனார்க்கு அடிமை
பூண்டு பக்தி நூல்களை ஓதியுணர்ந்து வேத விதிப்படி அறம் வளர்த்து எம்பெருமானையே
தொழுது வாழும் பேறு பெற்றனர். இப்புலவர்களுடைய அருமைகளையும், பெருமைகளையும் அளவிடுவது எங்ஙனம்! பொய்யடிமை
இல்லாத இப்புலவர்களைப் பற்றிச் சிறப்பித்துக் கூறவந்த நம்பியாண்டார் நம்பி, தாம் பாடியருளிய திருத்தொண்டர் திருவந்தாதியில்,
கடைச்சங்கப் புலவர்களாகிய
கபிலர், பரணர், நக்கீரர் முதலிய நாற்பத்தொன்பது புலவர்களையும் பொய்யடிமையில்லாத புலவர் சிறப்பித்துக்
கூறுகின்றார்.
பரமனையே உள்ளுருகிப் பாடும் புலமை பெற்ற இப்புலவர்கள் கயிலை மலையில்
திருநடனம் புரியும் பெருமானின் திருவடியை அணைந்து வாழும் பேறு பெற்ற பெருமையை யாது
சொல்லி அளவிடுவது