திரு பத்தராய்ப் பணிவார்


பத்தராய்ப் பணிவார்கள் என்போர் எப்பொழுதும் எம்பெருமான் திருவடிக்கே அன்பு பூண்டு பக்தியுடன் ஒழுகும் அருந்தவத்தினையுடைய தொகையடியார் ஆவர். விடையவர் திருவடியைப் பேணும் சிவனருட் செல்வர். எவரைக் கண்டாலும் தாய்ப்பசுவைக் கண்ட கன்றைப்போல் உள்ளம் உருகி உடல் பூரித்துப் பக்தி வெள்ளம் பெருக இன்மொழி கூறிப் பணிவர். 

எவரேனும் அரனாரை அர்ச்சனை புரியக் கண்டால் அவர்கள்பால் ஆராக்காதல் பூண்டு மகிழ்ந்து சிந்தை குளிர்ந்து வணங்கி இன்புறுவர். எல்லாப் பணிகளையும் சிவார்ப்பணமாக கருதுபவர். புண்ணியத்தையும் புகழையும் விரும்பாமல் மேன் மேலும் உவகை பொங்க வழிபடுவர். சிவக் கதைகளைக் கேட்டுச் சிந்தை மகிழ்வர். பிறவிப் பெருந்துன்பத்தைப் பெற்று அல்லலுறாமல் அன்பினோடு சிவப் பணிகள் புரிந்து புவனம் வியக்கப் பெரும் புகழ் பெற்று ஓங்கி நிற்பர். 

எம்பெருமானுடைய கமலமலர்ப் பாதங்களை அடைவதற்கு இவர்களே உரியவர்கள். சிவபெருமானை மெய்யுருக அபிஷேக ஆராதனை செய்து பூசிப்பர். இச்சிவனரும் செல்வர்க்கு பக்தியால் கண்ணீர் தாரை தாரையாகப் பெருகிவரும். அவ்வாறு பெருகி வரும் கண்ணீர் மேனியிலுள்ள திருவெண்ணீற்றை அழிக்கும். எந்நேரமும் சித்தத்தைச் சிவன்பால் அர்ப்பணித்து நிற்கும் ஒப்பற்ற அன்புச் செல்வர்கள் இவர்கள் என்றால் அஃது ஒருபோதும் மிகையாகாது ! பத்தராய்ப் பணிவார்கள், நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், துயின்றாலும், விழித்தாலும், இமைத்தாலும் ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்ற ஐயனின் பொன்மலர்ப் பாதங்களையே நினைத்திருக்கும் பெருந்தகையாளர்களாக விளங்குபவர்.

Post a Comment

Previous Post Next Post