திருக்குறிப்புத் தொண்ட நாயனார்
உமாதேவியார்,
முப்பத்திரெண்டு
அறங்களையும் புரிந்து சிவபெருமானை வழிபட்ட பெருமைமிக்க காஞ்சி என்னும்
திருத்தலத்திலே ஏகாலியர் மரபிலே தோன்றிய சிவத் தொண்டர்தான் திருக்குறிப்பு்த
தொண்டர்! சிவனடியார்களின், குறிப்பறிந்து தொண்டாற்றும்
ஆற்றல் மிக்கவராகையால் இவர் இச்சிறப்புப் பெயர் பெற்றார். அடியார் ஆடையின்
மாசுகழப்பதாலே தம்முடைய பிறப்பின் மாசு கழியும் என்ற தத்துவத்தை உணர்ந்த
இப்பெரியார், தொண்டர்களின்
துணிகளை துவைத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். அடியார்களின் பக்தியையும்,
புகழையும், அன்பையும் உலகறியச் செய்யும் இறைவன்
திருக்குறிப்புத் தொண்டரின் பெருமையையும் உலகறியச் செய்யத் திருவுள்ளம்
கொண்டார். ஒருநாள் இறைவன் கந்தல் உடுத்துக்கொண்டு மேனியிலே திருநீறு விளங்க,
திருக்குறிப்புத்
தொண்டர் இல்லத்திற்கு எழுந்தருளினார். அப்பொழுது குளிர்காலம்! குளிரினால்
நடுங்கிக் கொண்டே வந்தார் எம்பெருமான்! அடியாரின் வருகையைக் கண்ட தொண்டர்
விரைந்து சென்று அடியாரின் அடிபணிந்து அவரை வரவேற்று அமரச் செய்தார். மெலி்ந்த
உடல் ! திருவெண்ணீற்று பிரகாசம் ! அழுக்கடைந்த கந்தல் துணி !
இவற்றைக் கண்டு மனம்
வருந்தினார் திருக்குறிப்புத் தொண்டர். அடியாரை நோக்கி, ஐயனே! தங்கள் திருமேனி சொல்ல முடியாத
அளவிற்கு இளைத்திருப்பதற்கு யாது காரணமோ ? என்று வினவினார் இறைவன் குறுநகை புரிந்தார். அதன் பொருளைப் புரிந்துகொள்ள
முடியாத திருக்குறிப்புத் தொண்டர் தேவரீர் எம் இல்லத்திலே எழுந்தருளியது எமது
பாக்கியம்தான். மேலும் எனக்குப் புண்ணியம் தரக்கூடியது அடியாரின் ஆடையைச் சுத்தம்
செய்து தருவதற்கு எமக்கு ஐயன் இடும் கட்டளைதான். அதனால் தங்கள் ஆடையை என்னிடம்
தாருங்கள். தங்கள் மேனியில் உள்ள திருநீறு போல் சுத்தமாக வெளுத்துத் தருகிறேன்
என்று பணிவோடு கேட்டார். அன்பின் அமுதமொழி கேட்டு சிவனார் பெரும் அதிர்ச்சி
அடைந்தவர் போல் பாவனை செய்தார். ஐயையோ ! இக்கந்தலை உம்மிடம் கொடுத்துவிட்டு
யாம் என்ன செய்வது ? தாங்க முடியாத
இந்தக் குளிர் காலத்தில் இத்துணியையும் வெளுப்பதற்காக உம்மிடம் கொடுத்துவிட்டால்
என் பாடு திண்டாட்டம்தான் என்றார். திருக்குறிப்புத் தொண்டர் முகத்தில் வேதனை
படர்ந்தது ! தொண்டர் கவலையும், கலக்கமும் மேலிட
மீண்டும் தேவரீர் அங்ஙனம் இயம்பலாகாது என்றார். சங்கரர் சற்று நேரம் சிந்திப்பவர்
போல் பாவனை செய்தார். மாலை மயங்குவதற்குள் துவைத்துச் சுத்தமாக உலர்த்தி எம்மிடம்
சேர்ப்பிக்க வேண்டும்.
அந்தி
நீங்குவதற்குள் தங்கள் துணியைச் சுத்தமாக வெளுத்துக்கொண்டு வந்து தருகிறேன்.
அப்படி என்றால் நன்று! ஏனென்றால் இது குளிர் காலம். எம்மால் குளிரைச் சற்று கூடப்
பொறுக்க முடியாது. தொண்டரைச் சோதிக்க வந்த அம்பலவாணர், கந்தல் துணியைக் கொடுத்தார். அவரும் கந்தலைக்
கண்களில் ஒற்றிக்கொண்டு நீர்த்துறை நோக்கி களிப்போடு புறப்பட்டார். நீர்த்துறையை
அடைந்த தொண்டர், ஆடையைத்
துவைக்கத் தொடங்கினார். இறைவர் வருணனுக்குக் கட்டளையிட்டார். உடனே வருண பகவான்
பூலோகத்திற்குப் புறப்பட்டார். அனல் சூழ்ந்த வானம், திடீரென்று கார் மேகங்களால் மூழ்கியது !
எங்கும் கும்மிருட்டு கவ்வக் கொண்டது. தொண்டரின் இதயத்திலும் இருள் சூழ்ந்தது.
கண் கலங்கினார். மழை பயங்கரமாகப் பெய்யத் தொடங்கியது. இடியும் மின்னலும்
ஒன்றொடொன்று கலந்து பயங்கரமாக மாறியது! பேய் மழை அடிக்கத் தொடங்கியது.
தொண்டரோ செய்வதறியாது திகைத்தார். மழை நின்றுவிடும் என்று எண்ணி ஏமாந்தார். மழை
நின்றபாடில்லை. பொழுது மட்டும் போய்க் கொண்டே இருந்தது. கங்கையை பெருக்க
விட்டவன் இப்பொழுது வருணனைப் பெருக விட்டான். அடியார் இடி சாய்ந்த மரம் போல்
நிலை தளர்ந்தார்.
அவர் உடல்
மழையாலோ அன்றிக் குளிராலோ நடுங்கவில்லை; அடியார் மீது கொண்டுள்ள பக்தியாலும், பாசத்தால் ஏற்பட்டுள்ள பயத்தாலும் நடுங்கியது. அவரது கண்களில் நீர் மல்கியது.
மனம் துடிதுடித்துப் புலம்பினார். ஐயோ! ஏழை நான் என் செய்வேன் ? தொண்டருக்குச் செய்யும் திருப்பணியில்
இப்படியொரு பேரிடி வீழ்ந்து விட்டதே! மழை ஆரம்பித்தபோது வீட்டிற்குச் சென்று
காற்றாட உலர்த்தியிருந்தால் கூட இந்நேரம் உலர்ந்திருக்குமோ ! அவ்வாறு செய்யாமல்
மழை நின்றுவிடும், நின்றுவிடும்
என்று காலந் தாழ்த்தி இப்பொழுது ஈரத்துணியோடு நிற்கிறேன் ! என் அய்யனுக்கு என்ன
பதில் கூறுவேன்? பாவம் அவர்
இந்நேரம் குளிரால் நடுநடுங்கிக் கொண்டிருப்பாரே! தள்ளாத வயதி்ல் அப் பெரியவருக்கு
இந்த அளவிற்கு பொல்லாத கொடுமையைச் செய்த பாவியாகி விட்டேனே! வெளுத்துத்
தருகிறேன் என்று வீரம் பேசிய நான், வெறும் வீணாகி
விட்டேனே ! அடியார்க்குத் துரோகியாக மாறிய பின்னும் இந்தப் பாவி உயிரை வைத்துக்
கொண்டு உலகில் வாழ்வதா ? ஆகாது, ஆகவே ஆகாது! திருக்குறிப்புத் தொண்டர்,
துணி துவைக்கும்
கருங்கல்லை நோக்கினார்.
தம் தலையைப்
பாறையில் மோதி உடைத்துக் கொள்ளப் போனார். அதற்குமேல் அன்புத் தொண்டனைச் சோதனை
செய்து புண்படுத்த விரும்பவில்லை எம்பெருமான் ! தொண்டரைக் காக்க திருவுள்ளம்
பற்றினார். நாயனார் தலை, கல்லில் மோதிச்
சிதையுறுவதற்குள் எம்பெருமானின் மலர்க்கை பாறையினின்றும் வெளிப்பட்டு அவரது
சிரத்தைத் தாங்கிக் காத்தது. அருட்கரம் ஒன்று தம் தலையைத் தடுத்தது கண்டு
திருக்குறிப்புத் தொண்டர் திகைத்தார். அப்பொழுது வானத்திலே பேரொளி பிறந்தது.
உமையாளுடன் விடையின் மீது காட்சியளித்தார் சிவபெருமான் ! திருக்குறிப்புத்
தொண்டர் கீழே விழுந்து எழுந்து அரனாரை வணங்கினார். எம்பெருமான், அடியவரைத் திருமுகம் மலர நோக்கி, மூ்ன்று உலகத்திற்கும் உம்முடைய பெருமையையும்,
புகழையும்
வெளிப்படுத்தினோம். இனிமேல் கயிலைக்கு வந்து எம்முடனே இருப்பீராக என்று பேரருள்
பாலித்தார். திருக்குறிப்புத் தொண்ட நாயனார் பல காலம் உலகில் வாழ்ந்து, திருத்தொண்டுகள் பல செய்தார். இறுதியில்
இறைவன் மலரடி அணைந்து மகிழும் பேரின்பத்தைப் பெற்றார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார்
குருபூஜை
திருக்குறிப்புத்
தொண்ட நாயனாரின் குருபூஜை சித்திரை மாதம் சுவாதி நட்சத்திரத்தில்
கொண்டாடப்படுகிறது.
திருக்குறிப்புத்
தொண்டர் தம் அடியார்க்கும் அடியேன்!