திருநீலகண்ட நாயனார்
இறைவன் களிநடனம்
புரியும், தில்லைப்பதியிலே
குயவர் குடியிலே - பிறந்தவர்தான் திருநீலகண்டர் என்பவர்.இவர் பொன்னம்பலத்து
ஆடுகின்ற அம்பலக் கூத்தரின் திருவடிகளிலே மிகுந்த பக்தி கொண்டவர். அதுபோலவே,
சிவன் அடியார்களிடத்து
எல்லையில்லா அன்பும், பக்தியும்
உடையவர். பொய் வாழ்க்கையை ஒழித்து, மெய் வாழ்க்கை
வாழ்பவர். அறவழியில் வழுவாது நிற்பவர். எம்பெருமானை திருநீலகண்டம் என்று
எந்நேரமும் இடையறாது நெஞ்சம் உருகப் போற்றி வந்த காரணத்தால் இச்சிவனடியாரை
திருநீலகண்டர் என்ற காரணப் பெயரிட்டு யாவரும் அழைத்து வரலாயினர். இப்பெரியார்,
தம் மரபின் ஒழுக்கப்படி
ஓடுகளைச் செய்து அடியார்க்கு வழங்கும் சிறந்த தொண்டினை மேற்கொண்டிருந்தார்.
திருநீலகண்டரின் மனைவியும் கணவனுக்கு ஏற்ற கற்புடைச் செல்வியாய் வாழ்ந்து வந்தாள்.
இவ்வாறு அவர்கள் வாழ்ந்துவரும் நாளில், ஊழ்வினைப் பயனால், குடும்பத்தில்
குழப்பம் ஏற்பட்டது.
அவரது பக்தி உள்ளம் ஒரே ஒருமுறை தவறான பாதைக்குச் சென்றது.
பொன்னம்பலவாணரின் பக்தனாக இருந்த நீலகண்டர் சிற்றின்பத்தில் மிகடும் விருப்பம்
கொண்டவரானார். பரத்தையின்பால் பற்று கொள்ளவும் தவறினாரில்லை. இதை அறிந்த அவரது
மனைவி மனம் வருந்தினாள். அவள் கணவரிடம் கோபம் கொண்டாள். நீலகண்டர் ஏதும் புரியாது
திகைத்தார். கூடல் இன்பம் பெருகவே ஊடல் கொள்கிறாள் மனைவி என்றெண்ணினார் நீலகண்டர்.
ஒருநாள் இரவு நீலகண்டர், மனைவியின் ஊடலை
நீக்கி கூடச் சென்றார். மனைவி பொறுமை இழுந்தாள்.
ஐயனே! இனி எம்மை
தீண்டுவீராயின் திருநீலகண்டம் என்று கூறித் திருநீலகண்டத்தின் மீதே ஆணையிட்டு,
தம்மை தீண்டக் கூடாது
என்று கூறிவிட்டாள். நீலகண்டத்தையே உயிராகவும், உணர்வாகவும் கொண்டிருந்த அடியார்
என்றுமில்லாமல் மனைவி, இவ்வாறு
ஆணையிட்டுக் கூறியதைக் கேட்டு உளம்பதறி, நிலை தடுமாறித் திடுக்கிட்டுப் போனார். தலைவியின் சொல்லிலுள்ள பொருளைச் சற்றே
எண்ணிப் பார்க்கலானர். எம்மை என்றதனால் மற்றை மாதர் தமையும் என்றன் மனதிலும்
தீண்டேன் என்று சிவனார் மீது ஆணையிட்டார் நீலகண்டர். அன்று முதல் தீருநீலகண்டர்
தனது மனைவியைப் பிற மகளிரைப் பார்ப்பது போலவே பார்க்கலானர். முற்றும் துறந்த
முனிவரைப் போல ஐம்புலனையும் அடக்கி வாழலானார். நீலகண்டர் வாழ்ந்து வந்த வீடு மிகச்
சிறிய வீடுதான். அந்த வீட்டிற்குள் இருவரும் கட்டுப்பாடோடு வாழ்ந்து வந்தனர்.
இப்படியாக ஆண்டுகள் பல உருண்டன. நீலகண்டரும், அவரது மனைவியாரும் முதுமைப் பருவத்தை எய்தினர்.
சிவபெருமான், நீலகண்டரின்
பெருமையையும் திறத்தையும் உலகிற்கு உணர்த்தத் திருவுள்ளங் கொண்டார். அதற்காக தமது
கோலத்தை மாற்றிக் கொண்டார். பக்தனிடம் திருவிளையாடலைத் தொடங்கினார். சத்தியம்,
ஞானம், ஆனந்தம் ஆகியவற்றின் தூயவடிவான வேணியர்பிரான்
ஓர் சாது போல் வேடமணிந்தார். பிரம்மன், திருமால், இந்திரன் போன்ற
தேவாதி தேவர்கள், தனக்குக்
குற்றவேல் புரியும் அடிமைகளாகக் கொண்ட சிவபெருமான், திருவோடு தூக்கி தெருவோடு நடந்துவந்து
நீலகண்டரின் சிறுவீட்டை வந்து அடைந்தார்.
நீலகண்டரும்
அவரது மனைவியும் பெருமானை வரவேற்று உபசரித்து முறைப்படி வழிபட்டனர். நீலகண்டர்
பெருமானிடம், சுவாமி !
இவ்வடியேன்யாது பணி செய்தல் வேண்டும் ? என்று பயபக்தியுடன் வினாவினார். எம்பெருமான் தன் கையிலிருந்த திருவோட்டைக்
காண்பித்தவாறு, நீலகண்டா ! இத்
திருஓட்டின் அப்படி இப்படி என்று சொல்ல முடியாது. விலை மதிப்பிட முடியாதது.
கற்பகத் தரு போன்றது, பொன்னும்,
மணியும், தங்கமும், வைரமும் கூட இதற்கு ஈடு இணையாகாது. இத்தகைய
அபார சக்தி வாய்ந்த இத் திருவோடடை உன்னிடம் ஒப்படைத்து விட்டுப் போகிறேன்.
திரும்பி வந்து கேட்கும்போது தருவாயாக என்று கூறினார். திருவோட்டினை நீலகண்டரிடம் கொடுத்தார்.
நீலகண்டர் பணிவோடு திருவோடுதனைப் பெற்று சுவாமி ! உங்கள் சித்தம் என் பாக்கியம்
என்று கூறினார். திருஓட்டை பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்தார். சிவயோகியரும்
தில்லை மன்றை அடைந்து சில காலம் தங்கி பின்னர் ஓர் நாள் நாயனாரைக் காண முன்போல்
வந்தார்.
திருநீலகண்டர் அடியாரை வரவேற்று, பாத கமலங்களைத் தூய நீரால் கழுவி, நறுமலர் தூவி ஆசனத்தில் அமரச் செய்தார். சிவனடியார் நீலகண்டரிடம் திருவோட்டைத்
தருமாறு கேட்டார். திருநீலகண்டர் விரைந்து சென்று திருவோட்டைப் பாதுகாப்பாக
வைத்திருந்த இடத்தில் போய் பார்த்தபோது அங்கு அதனைக் காணாது கலக்கமுற்றார்.
திருநீலகண்டர் மனைவியிடம் ஓட்டைச் காணவில்லையே என்றார். ஓட்டை அந்த இடத்தில்
பாதுகாப்பாக வைத்தது இருவருக்குமே நல்ல ஞாபகத்தில் இருந்தது. அப்படி இருக்க எப்படி
காணாமற் போகும். இருவரும் நிலை தடுமாறினர்.
கவலை தோய்ந்த
முகத்துடன் சிவனடியார் பக்கம் வந்து ஐயனே ! என்று அழைத்து தயங்கி நின்றார்
நீலகண்டர். சிவதொண்டரின் தயக்கத்தையும், பயத்தையும் முக மாற்றத்தையும் கண்ட சிவனடியார் சற்று கடுமையாகவே நீலகண்டரிடம்,
ஏனப்பா ! இத்தனை தாமதம் ?
கொடுத்ததைக் கேட்டால்
எடுத்து கொடுக்க மனமின்றி ஒளித்து வைத்துக் கொண்டாயோ ? ஊம் சரி ! சரி ! நேரமாகிறது. நான் அவசரமாகப்
போகவேண்டும். தாமதிக்காமல் கொண்டு வந்து கொடுத்துவிடு என் திருவோட்டை என்றார்.
அம்மொழி கேட்டுத் திடுக்கிட்டுப் போன நாயனார், உண்மையிலேயே அத்திருவோடு காணாமற் போய்விட்டது
பெரியீர்! என்று பணிவோடு பகர்ந்தார். திருவோடு எப்படி அங்கு இருக்கக் கூடும் ?
உயிரைக் கொடுத்தவனே உயிரை
எடுத்துக்கொள்வது போல திருவோட்டைக் கொடுத்தத் திருசடையானே அதை மறைத்த உண்மையை
நீலகண்டர் எவ்வாறு அறிய முடியும் ! திருசடையையும், நீலகண்டத்தையும், முக்கண்களையும் மறைத்த மறையவர் திருவோட்டையும்
மறைத்து விட்டார். நீலகண்டர் உள்ளம் பதறினார்.
அவருக்கும் அவர் தம் மனைவிக்கும்
உலகமே இருண்டது போலக் காட்சியளித்தது. அவரது மனைவியோ கண்களில் நீர்மல்க நின்றாள்.
அடியாரோ பரமசிவனை மனதில் தியானித்தார். பக்தனைச் சோதிக்கவந்த பரமசிவன் நெற்றி
கண்ணைத் திறக்காதது ஒன்றுதான் குறை! அந்த அளவிற்கு முகத்தில் கோபம் கோரத்தாண்டவம்
ஆடியது. அரனாரது கோபத்தைக் கண்டு அஞ்சிய நாயனார் தவ சிரேஷ்டரே ! சினங்கொள்ளாதீர்
அறியாது நடந்த பிழையைப் பொறுத்தருளல் வேண்டும். திருவோடு மறைந்த மாயம் இன்னதென்பதை
சிறிதும் நான் அறியேன். மன்னித்து விடுங்கள்! மண் ஓட்டிற்குப் பதில் பொன் ஓடு
வேண்டுமாயின் தருகிறேன் என்று பணிவோடு இறைஞ்சினார்.
சிவனடியாருக்கு
மேலும் கோபம் வந்தது ! என்ன சொன்னாய் ? வேறு ஒரு ஓடு தருகிறாயா ? நன்று நீலகண்டா !
நன்று ! ஓட்டின் அருமைகளைச் சொன்னேன்; பெருமமைகளைப் பேசியுள்ளேன்; அதனால்தான்
வேண்டுமென்றே ஓட்டைத் திருடியிருக்கிறாய் என்ற சீற்றத்துடன் செப்பினார் செஞ்சடை
வண்ணன். அபச்சாரம் ! ஐயனே ! அபச்சாரம் ! உண்மையாகவே கூறுகிறேன். திருவோட்டை நான்
திருடவே இல்லை. அப்படித் திருடவில்லை என்பது உண்மையானால் திருவேட்டை நான்
திருடவில்லை என்று உன் மகன் கரம் பற்றிப் பொற்றாமரைக் குளத்தில் மூழ்கிச் சத்தியம்
செய்து தாரும். எனக்கு மகன் இல்லையே சுவாமி ! மகன் இல்லாவிட்டால் என்ன ? மனைவியின் கையைப் பற்றி நீரிடை மூழ்கி உண்மையை
நிலை நாட்டினால் அதுவே போதுமானது. சிவயோகியாரின் ஆணை, நீலகண்டரின் மனத்தை மேலும் புண்படுத்தியது.
அவர் தர்ம சங்கடமான நிலைக்கு ஆளானார். தம் மனைவிக்கும் தமக்கும் உள்ள பிணக்கை
வெளியிட இயலாத நிலையில், சுவாமி மன்னிக்க
வேண்டும். நானும் என் மனைவியும் ஒரு சபதம் செய்து கொண்டிருக்கிறோம். அதனால்,
என் மனைவியின் கரம் பற்றி
சத்தியம் செய்வதற்கில்லை என்று ஒரே முடிவாகக் கூறிவிட்டார் நீலகண்டர். இனியும்
உன்னோடு பேசிப் பயனில்லை வா ! வழக்கு மன்றம் செல்வோம் முடிவாகச் சொன்னார்
முக்கண்ணப் பெருமான். திருநீலகண்டர் அதற்குச் சம்மதித்தார். எம்பெருமான் முன்செல்ல,
நீலகண்டரும் அவரைப் பின்
தொடர்ந்து சென்றார். சிவயோகியாரும் திருநீலகண்டரும் தில்லை வாழ் அந்தணர்களின் அரிய
அவையை வந்தடைந்தனர் ! தில்லைவாழ் அந்தணர் முன் வழக்கை எடுத்துரைத்தார் தில்லை
அம்பலத்தரசர். நீலகண்டரோ, ஓட்டைத்
திருடவில்லை என்று ஒரே முடிவாக மொழிந்தார். அவையோர், அங்ஙனமாயில் சிவயோகியார் விருப்பப்படி நீரில்
மூழ்கி சத்தியம் செய்வதுதானே என்றனர். நீலகண்டர் மனைவியின் கரம் பற்றி, நீரில் மூழ்க மட்டும் சம்மதிக்கவே இல்லை. ஆனால்
அவையினரோ, நீரில் மூழ்கிச்
சத்தியம் செய்வதுதான் முறை என்ற முடிவான தங்கள் தீர்ப்பைக் கூறினர். செய்வதறியாது
சிதம் கலங்கிப் போன சிவனருட்செல்வர், மனைவியைத் தான் உடலால் தீண்டுவதில்லை என்ற விவகாரத்தை கூறாமல் பொருந்திடு
வகையில் மூழ்கித் தருவேன் என்று கூறினார். அவையோரும் அதற்கு சம்மதித்தனர்.
அடியார்
இல்லத்திற்கு சென்று, தம் மனைவியாரை
அழைத்துக் கொண்டு வந்தார். திருப்புலீச்சுரத்துக்கு அருகிலுள்ள பொற்றாமரைக் குளத்தில்
மூழ்கி எழ விரைந்தார். அனைவரும் திருக்குளம் வந்தனர். நேர்மையின் நிறைவான நாயனார்,
மூங்கில் கழி ஒன்றைக்
கொண்டு வந்து அக்கழியின் ஒரு பக்கத்தைத் தாமும், மறுபக்கத்தைத்
தம் மனைவியையும் பற்றிக் கொள்ளச் செய்தார். அதுகண்ட சிவயோகியார், இல்லாளின் கரம் பற்றியே நீரில் மூழ்கிச்
சத்தியம் செய்தல் வேண்டும் என்று கடுமையாகக் கூறினார். நாயனார் இறைவனைத்
தியானித்தார். வேறு வழியின்றி நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் அவை அறிய எடுத்துக்
கூறி கழியைப் பிடித்துக்கொண்டார். மனைவி கழியினை மறுபுறம் பற்றிக் கொண்டாள்.
அவையோரின் சம்மதத்தைக்கூட எதிர்பார்க்கவில்ல இருவரும். பொற்றாமரைக் குளத்தில்
மூழ்கினார்கள். திருக்குளத்தில் மூழ்கி எழுந்த நீலகண்டரும், அவரது மனைவியாரும் இறைவன் அருளால் முதுமை
நீங்கி, இளமை எழில்
பெற்று எழுந்தனர். இதுவரை அங்கிருந்து ஒற்றைக்காலில் வழக்காடிய சிவனடியார் திடீரென்று
மறைந்து விட்டார். விண்ணவர் மலர்மாரி பொழிந்தனர். அனைவரும் வியப்பில் மூழ்கினர்.
ஆலயத்து மணிகள் ஒலித்தன ! சங்கு முழங்கியது ! எங்கும் இசை வெள்ளம் பெருகியது!
வானத்திலே பேரொளிப் பிரகாசம் பிறந்தது. ஒளி நடுவே மறைமுதல்வோன் உமா மஹேஸ்வரி
சமேதராக, ரிஷபத்தின் மேல்
காட்சி அளித்தார். எங்கும், ஹர ஹர சங்கர! ஜய
ஜய சங்கர! என்ற பக்தர்களின் கோஷம் விண்ணை முட்டியது. திருநீலகண்டரும் அவரது
மனைவியாரும் அவையோரும் மற்றோரும் நிலத்தில் வீழ்ந்து வணங்கினர். ஐம்புலன்களையும்
வென்ற அடியவர்களே என்றும் குன்றா இளமையுடன் நலமுடன் இருப்பீர்களாக ! என்று
நாயனாரையும் அவர் தம் இல்லத்தரசியாரையும் அருளினார் எம்பெருமான். திருநீலகண்ட
நாயனாரும் அவரது மனைவியாரும் இறைவனின் திருவருளினால் இளமை மாறாமல், இன்பமுடன் அவணியில் நெடுநாள் வாழ்ந்து
அரனாரையும் அவர்தம் அடியார்களையும் போற்றி வழிபட்டு நீடுபுகழ் பெற்றனர்.
குருபூஜை
திருநீலகண்ட
நாயனாரின் குருபூஜை தை மாதம் விசாகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
திருநீலகண்டத்துக்குயவனார்க்கும்
அடியேன்.