விறல்மிண்ட நாயனார்
திருச்செங்குன்றூர்
நீர்வளமும், நிலவளமும்,
மழைவளமும், குடிவளமும், முடிவளமும், மற்றெல்லாப் பெருவளங்களையும் தன்னகத்தே கொண்ட
மலைநாடு ! இம்மலை நாட்டைச் சேரநாடு என்றும் கூறுவர் சிலர். இம்மலைநாடு புராணச்
சிறப்பு மிக்கப் பழம்பெரும்பதி. இம்மலைநாடு தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவர்
பரசுராமர். சிவபெருமானை வேண்டிப் பெரும் தவம் புரிந்து பரசு என்ற மழுவாயுதத்தைப்
பெற்றவர் பரசுராமன். இவரது தந்தையாகிய ஜமதக்கினி முனிவர், மன்னர் குலத்தினரால் கொலை செய்யப்பட்டார்.
பரசுராமர் உருத்திரம் பொங்க மழுவாயுதத்தோடு மன்னர் குலத்தைப் பழிவாங்கப்
புறப்பட்டார். மன்னர் குலத்தை இருபத்தோரு தலைமுறைக்குப் பழி வாங்கி வதைத்தார்.
முடிவேந்தர்களின் செங்குருதியிலே தந்தைக்குச் செய்ய வேண்டிய பிதிர்கடனைக்
கழித்தார். அதன் பிறகு சினம் தணிந்து அமைதி அடைந்த பரசுராமர், கடல் சூழ்ந்த இப்பரந்த நிலவுலகத்தைக்
காசிபர்க்குத் தானம் செய்துவிட்டு மேற்குக் கடலை நோக்கிப் புறப்பட்டார். மேற்குக்
கடலை அடைந்த பரசுராமர் தமது தபோவலிமையால், மழுவாயுதத்தைப் பயன்படுத்திக் கடல் நீரை விலகச் செய்து, மலைநாடு என்னும் ஒரு திருநாட்டைத்
தோற்றுவித்தார். இம் மலைநாட்டில், அலைகடலிலிருந்தும்,
சோலைக்கரும்பிலிருந்தும்,
மூங்கில்களிலிருந்தும்,
யானைத்
தந்தங்களிலிருந்தும் பற்பல வகைகளில், பற்பல விதமான முத்துக்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும். இத்தகைய விலை உயர்ந்த
முத்துக்களை பாவையர்களின் புன்சிரிப்பு முத்துக்களோடு முறைபடக் கோர்க்கின்ற
சிறப்புச் சேர நாட்டுப் பெண்மணிகளுக்கே உரியதாகும். இவ்வாறு வரலாற்றுப் பெருமை
மிக்க - புராண சிறப்புமிக்க மலைநாட்டிலே, மிக்கச் சிறப்புடன் விளங்கும் தலங்களிலே செங்குன்றூரும் ஒன்றாகும்.
மண்மடந்தையின்
கமலமலர் வதனம் போன்று ஒளிவிடும் செங்குன்றூர்ப் பதியிலே, உழவுத் தொழிலில் வேளாளர் குடி வல்லமை
பெற்றிருந்தது. அந்த வேளாள மரபிலே இறைவனின் திருவருளால் அவதாரம் செய்தார்
விறல்மிண்டர். இவ்வடியார், திருநீறும்,
கண்டிகையும் பூண்டு,
நதியும், மதியும், பாம்பும் புனைந்த வேணியரின் செஞ்சேவடிகளை
வணங்கி வழிபட்டு வந்தார். அரனாரிடம் பேரன்பு பூண்டிருந்தாற்போல், அரனார்தம் அடியார்களிடமும் அளவிட முடியாத
அளவிற்குப் பேரன்பும், பெருமதிப்பும்
கொண்டிருந்தார் அடியார். அடியார்களைப் பற்றி எவராகிலும் சற்று, மட்டு மரியாதை இன்றி, தரக்குறைவாகப் பேசினால் போதும், அக்கணமே அவர்களையும், அவர்களைச் சார்ந்தவர்களையும் தண்டிப்பார்.
அத்தகைய நேரங்களில் விறல்மிண்டரது பக்தி வீரமாக மாறிவிடும். விறல் என்ற சொல்லிற்கே
வீரம் என்பதுதான் பொருள். விறல்மீண்டார் என்ற பெயரே, இவர்க்கு வீரம் பற்றிய விளக்கமாக வந்து
அமைந்துவிட்டது. அஞ்சா நெஞ்சமும், அறநெறி உள்ளமும்
படைத்த விறல்மீண்டர், அடிக்கடி
எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் ஆலயங்கள் தோறும் சென்று இறைவழிபாடு செய்து
வருவது வழக்கம். ஆலயங்கட்டுச் சென்றுவரும் இவ்வன்பர், ஆன்றோர் மரபு ஒழுக்கப்படி, முதலில் சிவனடியார்களைத் தொழுது வழிபட்டு,
அவர்களது அருளைப் பெற்ற
பின்னர்தான், ஆலயத்துள்
எழுந்தருளியிருக்கும் பெருமானை வணங்குவார். இங்ஙனம், சிவத்தலங்கள் தோறும் சென்று, ஆங்காங்கேயுள்ள தொண்டர்களைத் தொழுவதும்
திருசடையானைத் சேவிப்பதுமாக தலயாத்திரை நடத்திக் கொண்டுவந்த இவ்வடியார், சிறப்புமிக்கத் திருவாரூரை வந்தடைந்தார்.
தேவாசிரிய மண்டபத்திலே குழுமியிருந்த அடியார்களை வணங்கி நின்று தாமும் அவர்களுள்
ஒருவராய்த் திகழ்ந்தார். இத்தருணத்தில் ஓர் நிகழ்ச்சி நடந்தது.
வழக்கம்போல்
சுந்தரமூர்த்தி நாயனார் புற்றிடங்கொண்ட நாதரை வணங்கி வழிபட வந்தார். அவர்
அடியார்களை மனத்தால் வணங்கியவாறு, வேறு புறமாக
ஒதுங்கியபடியே உள்ளே செல்ல அடி எடுத்து வைத்தார். இதனைக் கவனித்த விறல்மிண்டர்,
சுந்தரரை தவறாக
எண்ணினார். சுந்தரரின் மனப்பக்குவத்தை அவர் எவ்வாறு அறிய இயலும் ! இறைவனை
வழிபடுவது எளிது. அடியாரை வழிபடுவது அரிது. அடியார்களை வணங்குவதற்குத் தக்க
தகுதியும், பக்தியும்,
அன்பும் இருத்தல்
வேண்டும். அஃது தமக்கு இல்லாமற் போயிற்றே ! அடியார்களைப் பேணும் பேற்றினைத் தாம்
பெறவில்லையே என்ற மனத்துடன், அடியார்களை
மனத்தால் மட்டுமே வழிபட்டு, விலகிச் செல்வதை
சுந்தரமூர்த்தி நாயனார் வழக்கமாகக் கொண்டிருந்தார். இத்தகைய சுந்தரரின் உள்ளத் தூய்மையினை
உணராத விறல்மிண்டர் அவர்மீது சினங் கொண்டார். சுந்தரரது செவிகளில் விழுமாறு,
முதலில் வணங்கத்தக்க
தேவாதி தேவர்கள் இங்கிருப்பதை மறந்துவிட்டு அங்கு செல்கின்றாரே, என்ன பயன் ?வன்றொண்டான் அவ்வடியார்களுக்குப் புறம்பானவன்.
அவனை வலிய ஆட்கொண்ட வீதிவிடங்கப் பெருமானும் இவ்வடியார்களுக்குப் புறம்பானவன்தான்
என்று கடுமையாகச் சொன்னார். விறல்மிண்டர் மொழிந்ததைக் கேட்ட சுந்தரமூர்த்தி
நாயனார் விறல்மிண்டர் அடியார்களிடத்துக் கொண்டுள்ள பக்தி எத்துணைச் சிறப்புடையது
என்பதை எண்ணிப் பெருமையுற்றார். எம்பெருமானின் திருமுன் வீழ்ந்து வணங்கி, அடியார்களுக்கும் அடியானாகும் பேரின்ப நிலையைத்
தமக்குத் தந்தருள வேண்டும் என்று இறைஞ்சி நின்றார். அப்பொழுது இறைவன், தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்
என்று அடி எடுத்துக் கொடுக்க, விண்ணும்,
மண்ணும் உய்ய, திருத்தொண்டத் தொகை என்னும் திருப்பதிகத்தினைப்
பாடித் திருகூடத்தைத் தொழுது அணைந்தார் சுந்தரமூர்த்தி நாயனார்.
திருத்தொண்டர்களின்
பெருமையைச் சொல்லும் திருத்தொண்டத் தொகை இல்லாவிடில் நாயன்மார்களின் பெருமையைச்
சொல்லும் பெரியபுராணமே தோன்றியிருக்காது ! சுந்தரர் அடியார்கள் மீது கொண்டுள்ள
பக்தியின் உயர்வை எண்ணிப்பார்த்து விறல்மிண்டர் பேரின்பம் பூண்டார். சைவ சமய
நெறியைப் பாதுகாத்துத் திருத்தொண்டு பல புரிந்து வாழ்ந்து வந்த விறல்மிண்டர்,
சுந்தரமூர்த்தி நாயனாரின்
திருத்தொண்டத் தொகையைக் கேட்டு, எல்லையற்ற
பெருமகிழ்ச்சி பூண்டார். உலகம் உய்யவும் மக்கள் எல்லாம் கடைத்தேறவும், சைவம் தழைத்தோங்கவும், சுந்தரருடைய திருவுள்ளம்
திருத்தொண்டர்களிடத்திலே பதிந்திருந்தது என்பதை உணர்ந்த விறல்மிண்டர்
களிப்பெய்தினார்.
திருக்கூட்டத்தை வணங்காது செல்லுகின்ற வன்றொண்டன்
அடியார்களுக்குப் புறது; அவ்வன்றொண்டனை
ஆட்கொண்ட பரமசிவனும் புறகு என்று சுந்தரமூர்த்தி நாயனார் செவிகளில் விழுமாறு
விறல்மிண்டர் கூறியிராவிடில் திருத்தொண்டத் தொகையே பாடப்பட்டிருக்காது எனலாம்.
இந்த நாயனாரைப் பற்றி மற்றொரு சம்பவமும் சொல்லப்படுகிறது. சுந்தரர் மீது கோபம்
கொண்ட அடிகளார் சுந்தரரையும் வெறுத்தார். திருவாரூரையும் வெறுத்தார். திருவாரூர்
எல்லையைத் தீண்டுவதில்லை என்று தமக்குள் ஒரு திடசங்கல்பம் பூண்டார். அத்துடன்,
அந்த அடியார் மற்றொரு
வைராக்கியத்தையும் கடைப்பிடித்து வந்தார். தமது இல்லத்திற்கு விருந்திற்கு வரும்
அன்பர்களிடம், எந்த ஊரில்
இருந்து வருகிறீர்கள் என்று ஒரு கேள்வி கேட்பார். அவர்கள் திருவாரூர் என்று
சொன்னால் உடனே அடிகளார், அடுத்துள்ள
கொடுவாளை எடுத்து விருந்துண்ண வந்தவரின் காலைத் துண்டிப்பார். இதற்காகவே அவரது
மனைவியார் வீடு தேடிவரும் அன்பர்களிடம் அடியாரின் மனோநிலையைக் கூறி ஊரைப்பற்றி
விசாரித்தால் திருவாரூர் என்று மட்டும் சொல்லாதீர்கள் என்று முன்கூட்டியே
எச்சரிக்கை செய்து விடுவாள். இதனால் அடியார்களின் கால்கள் தப்பின.
திருவாரூரில்
கோவில் கொண்டுள்ள தியாகேசப் பெருமான், தனது அன்புத் தொண்டனை ஆட்கொண்டருளத் திருவுள்ளம் கொண்டார். எம்பெருமான்
சிவனடியார் போல் வேடம் பூண்டார். நேராக நாயனார் இல்லத்திற்கு வந்தார். வாயிலிலே
நின்றுகொண்டு எம்பெருமான், பவதி பிக்ஷõம் தேஹீ என்று குரல் கொடுத்தார். அடுப்படியில்
வேலையாக இருந்த நாயனாரின் மனைவியார் வெளியே ஓடி வந்தாள். சிவனடியாரைக் கண்டு
அகமும் முகமும் மலர வாருங்கள் என்று முகமன் கூறி உள்ளே அழைத்துச் சென்றாள். சுவாமி
! என் கணவர் வந்துகொண்டே இருக்கிறார். அதற்குமுன் தேவரீரிடம், இந்த ஏழைக்கு ஒரு சிறு விண்ணப்பம். அம்மணீ !
மங்களம் உண்டாகட்டும். விஷயத்தைச் சொல்வாய். அம்மையார் அடியாரிடம் நாயனாரின்
சங்கல்பத்தைச் சொல்லி, சுவாமி ! தாங்கள்
தயவு செய்து ஊரைப் பற்றிக் கேட்டால் திருவாரூர் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்
என்று கேட்டுக் கொண்டாள். எம்பெருமான் குறுநகை சிந்த, அம்மணீ ! எனக்குப் பொய் பேசத் தெரியாது. அதனால்
நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். அவர் சாப்பிடும்போது கொடுவாளை வலதுபுறம்தானே
வைத்திருப்பார். இன்று மட்டும் அதனை இடதுபுறம் வைத்துவிடு. மற்றவை நான் பார்த்துக்
கொள்கிறேன். என்றார். அம்மையாரும் அதற்குச் சம்மதித்தார்கள். அதற்குள் நாயனாரும்
உள்ளிருந்து வெளியே வந்தார். நாயனார், சிவனடியாரை வரவேற்று விருந்திற்கு எழுந்தருளச் செய்தார். இருவரும் இலை முன் அமர்ந்தார்கள்.
மனைவியார் உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். நாயனார் வழக்கம்போல் தமது கேள்வியைக்
தொடங்கினார். சுவாமிக்குச் சொந்த ஊர் எது ? அங்கிங்கெனாதபபடி எங்கும் இருப்பேன். ஆயினும்
அடியேன் சொந்த ஊர் சுந்தரர் அவதரித்த திருவாரூராகும்! என்ன ! திருவாரூரா ? அடியார்களை அவமதிக்கும் அந்த அற்பன் பிறந்த
ஊரில் பிறந்தவரா நீர் ? உம்மை என்ன
செய்கிறேன் பார் என்று வன்மொழி கூறினார்.
நாயனார் கண்கள்
கோபத்தில் சிவந்தன. சட்டென்று வலது பக்கம் திரும்பி கொடுவாளை எடுக்க முயன்றார்.
அங்கு கொடுவாளை காணாது மனைவியை நோக்கினார். அவர்கள் பயத்துடன், இடதுபுறம் வைக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டு
விட்டது என்று கூறினாள். நாயனார் சட்டென்று இடது பக்கம் திரும்பினார். இதற்குள்
அடியார் எழுந்து வெளியே ஓடிவிட்டார். நாயனார் அடியாரைத் துரத்திக் கொண்டு ஓடினார்.
அடியார் ஓட, நாயனார் துரத்த
இருவரும் ஓடி ஓடி திருவாரூரின் எல்லையை அடைந்து ஊருக்குள் வந்து சேர்ந்தனர்.
நாயனார் களைத்துப்போன நிலையில் நிலத்தில் விழுந்தார். அடியார் சிரித்துக்கொண்டே,
நீர் இப்பொழுது
திருவாரூர் எல்லையைக் கடந்து ஊருக்குள்ளே வந்து விட்டீரே என்றார். நாயனார் மனம்
பதறிப் போனார். ஆத்திரத்தால் துடித்தார். தவற்றை உணர்ந்தார். கொடுவாளை எடுத்துத்
தமது காலை வெட்டிக் கொண்டார். நாயனாரின் செயலைக் கண்டு சிவபெருமான் அதற்கு மேலும்
பக்தனைச் சோதிக்க விரும்பவில்லை. ரிஷப வாகனத்தில் கமலாம்பாள் சமேதராய் காட்சி
கொடுத்தார் திருவாரூர் தியாகேசப் பெருமானார் ! தம்மை ஆட்கொண்டருளிய அடியார்
எம்பெருமானே என்பதனை உணர்ந்த நாயனார், சிரமீது கரம் உயர்த்தி கண்களில் நீர்மல்க பக்தியால் பரமனைத் தொழுதார்.
எம்பெருமான், விறல்மிண்டருக்கு
சுந்தரர் அடியார்கள் மீது கொண்டுள்ள ஒப்பற்ற பக்தியை உணரச்செய்து நாயனாருக்குப்
பேரின்ப பெருவாழ்வு நல்கி அருளினார். இப்படி ஒரு வரலாறும் இந்த நாயனாரைப் பற்றி
கூறப்படுகிறது ! அடியார்களிடம் அளவிலாப் பக்தி பூண்டிருந்த விறல்மிண்ட நாயனார்,
திருக்கையிலையிலே,
இறைவன் திருவடியைப்
பிரியாது வழிபடும் சிவகணங்கட்குத் தலைவராகத் திகழும் திருவருளைப் பெற்றார்.
குருபூஜை
விறல்மிண்ட நாயனாரின்
குருபூஜை சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
விறல்மிண்டர்க்கு
அடியேன்.