சிவபுராணம் பாடல் 14
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
பொருள்:
தெவிட்டாத அமுதமே ! அளவுகள் கடந்து நிற்கின்ற பெருமானே !
ஆர்வம் / முயற்சி இல்லாதவர் உள்ளத்தில் வெளிப்பாடின்றி மறைந்திருக்கும் ஒளியானே !
(என் உள்ளத்தை) நீரென உருகச்செய்து, என்னுடைய இன்னுயிராக நிற்பவனே !
இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டவனே ! உள் நிற்பவனே !
குறிப்பு:
1. இறைவன் எல்லாருடைய உள்ளத்திலும் உள்ளார். எங்கும் நிறைந்தும் அதே நேரத்தில் எல்லாம் கடந்தும் இருப்பதால் அவரைக் கடவுள் என்கிறோம். ஆயினும் ஆர்வமும் முயற்சியும் உடையவர்கள் சிவபெருமான் திருவருளினால் அவரை உணர்கின்றார்கள். மற்றவர்கள் அலைவரிசை ஒன்றியையாத ஒலிப்பெட்டி போல அவர் மிக அருகில் இருந்தும், பேரொளியாக இருந்தும் காண இயலாதவர்களாக உள்ளனர்.
(ஒ. பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாகக் கொள்வானே - திருமூலர்)
2. இறைவனுடைய எண்குணங்களில் ஒன்று வரம்பில் இன்பமுடைமை. அவ்வாறு இருக்க "இன்பமும் துன்பமும் இல்லானே" எனக் கூறுவது பொருந்துமா எனக் கேட்டால், இறைவனுக்குப் பிறவற்றால் எவ்வித இன்பமோ துன்பமோ இல்லை. செம்பொருளாக உள்ள அது தன்னுடைய வற்றாத இன்பத்தில் தானே என்றும் மகிழ்ந்து இருக்கும்.
திருச்சிற்றம்பலம் !!!