சிவபுராணம் பாடல் 15அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்

சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே

கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே

 

பொருள்:


அன்பினால் தன்னைத் தொழும் அடியார்களுக்கு அன்பே உருவாயவனே !

எல்லாமும் தானே ஆகி, எதுவும் தானாக இல்லாது இருக்கின்றவனே !

சுடருருக்கொண்டவனே ! அடர்ந்த இருளாகவும் இருப்பவனே !

பிறப்பு என்பதே இல்லாத பெருமை உடையவனே !

முதலாக இருப்பவனே ! இறுதியாகவும் இடைப்பட்ட நிலையாகவும்

ஆகி இத்தத்துவங்கள் எல்லாம் கடந்தவனே !

(காந்தம் போல) என்னை ஈர்த்து என்னை ஆளாக -

அடியவனாகக் கொண்டு அருளிய என் தந்தைக்கும் தலைவனே !

உன்னைத் தமது கூர்மையான மெய்யறிவின் துணையாகக் உணர்கின்ற பெரியோர்களுடைய சிந்தையின்

பார்வை வியத்தற்கு உரிய பார்வை ! அவர்களுடைய ஆராயும் திறன் வியத்தற்கு உரிய ஆய்வுணர்வே !

 குறிப்பு:


1. சிவபெருமான் எல்லாப் பொருள்களுடனும் கலந்து தோன்றினும் இவை எதுவும் அவரல்ல. அவர் கலந்து இருப்பது போலவே எல்லாம் கடந்தும் உள்ளார்.

2. சிவபெருமானுக்கு அவதாரம் இல்லை. அவர் பிறப்பது இல்லை.

3. இறைவன் அன்பர்களுக்கு எளியவனாகக் காட்சி அளித்த போதிலும், அவருடைய பேரியல்பு யாராலும் முழுதும் ஆய்வது பற்றி எண்ணியும் பார்க்க இயலாதது.

எனவே தான் அவருடைய இயல்பினை சற்றேனும் காண முயல்கின்ற ஞானிகளின் திறனை வியந்து கூறுகின்றார் மாணிக்க வாசகர்.

(ஒ. பேரறியாத பெருஞ்சுடர் ஒன்றதின் வேரறியாமை விளம்புகின்றேனே - திருமந்திரம்)

திருச்சிற்றம்பலம் !!!

Post a Comment

Previous Post Next Post