சிவபுராணம் பாடல் 2

0

சிவபுராணம் பாடல் 2



வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க

புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க

கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க

சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

பொருள்:


என்னுடைய வேகத்தைப் போக்கி ஆண்டுகொண்ட மன்னனின் திருவடி வெல்லட்டும்.

பிறப்பினை நீக்குபவனாகிய தலைக்கோலமுடைய பெருமான் அணி சேர் கழல்கள் வெல்லட்டும்.

தன்னை விடுத்து நிற்பவர்களுக்கு வெகு தூரத்தில் உள்ள (அரிய பொருளாக உள்ள)

பெருமானின் பூப்போன்ற மென்மையான கழல்கள் வெல்லட்டும்.

கைகளைக் கூப்பி வழிபடுவார் உள்ளத்தில் மகிழ்ந்து இருக்கும் மன்னனுடைய கழல்கள் வெல்லட்டும்.

தலை தாழ்ந்து வணங்குவார்களை மிக உயர்ந்த நிலைக்கு ஓங்கச் செய்யும்

பெருங்குணம் வாய்ந்தவனுடைய கழல்கள் வெல்லட்டும்.

குறிப்பு:


1.      வேகம் கெடுத்தல் - துயரம் நீக்குதலைக் குறிக்கும். மனத்தின் வேகத்தையும் (நிலையில்லாமல் அலைபாய்தல்) அதனால் வரும் கேட்டின் வேகத்தையும் குறைத்து தன் பால் மனத்தை நிலைபெறச்செய்யும் ஈசனின் கருணையையும் குறிக்கும்.

2.      பிஞ்ஞகன் - பீலி அணிந்தவன் எனவும் பொருள் கொள்ளலாம் (இறைவன் குரண்டாசுரனின் பீலியை அணிந்த விபரம் கந்த புராணம் ததீசி முனிவர் வாக்கில் காண்க.)

3.      சேயோன் - சேய்மையில் (தூரத்தில்) இருப்பவன்.


திருச்சிற்றம்பலம் !!!

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top